குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் கேம் விளையாடி தொலைத்த 13 வயது சிறுமி.. அதிர்ச்சி சம்பவம்..!

சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி தனது குடும்பத்தின் மொத்த சேமிப்பையும் ஆன்லைன் கேமில் விளையாடி இழந்து விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த 13 வயது பெண் தன் அம்மாவின் டெபிட் கார்டை தற்செயலாக தனது மொபைல் போனுடன் இணைத்துள்ளார். இதனை அடுத்து அவர் ஆன்லைனில் கேமிங் விளையாடியதாகவும் ஏராளமான பொருட்களை தனக்காகவும் தனது தோழிகளுக்கும் வாங்கியதாகவும் தெரிகிறது. அவர் ஒரு சில மாதங்களில் சுமார் 64 ஆயிரம் டாலர்களை செலவு செய்ததாகவும் இந்த பணம் அவரது அம்மாவின் வாழ்நாள் சேமிப்பு என்றும் கூறப்படுகிறது.

வெகு தாமதமாகவே சிறுமியின் அம்மா தனது வங்கி கணக்கை சரிபார்த்தபோது அதில் சுத்தமாக பணம் இல்லை என்பதை அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அவர் இது குறித்து வங்கியில் விசாரித்த போது ஆன்லைன் கேமுக்காக அனைத்து பணமும் செலவு செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது.

இதனை அடுத்து தான் தன் மகள் மீது சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து கேட்டபோது ஆன்லைன் கேமிற்கு தான் செலவு செய்தது உண்மைதான் என்றும் ஆனால் இவ்வளவு பணம் செலவு செய்ததாக தனது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் தோழிகளுக்காகவும் தனது சக பள்ளி மாணவிகளுக்காகவும் பல்வேறு பொருட்களை டெபிட் கார்டு மூலம் வாங்கிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

இந்த செய்தியை கேட்டு அந்த சிறுமியின் அம்மா கதறி அழுதுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தனது மகளின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்த பணம் முழுவதையும் ஒரு சில மாதங்களில் தனது மகள் தொலைத்துவிட்டார் என்று அவர் கதறி அழுதார். அவர் இழந்த பணத்தை மீட்க பல்வேறு வழிகளை மேற்கொண்ட போதிலும் ஒரு ரூபாய் கூட அவருக்கு திரும்ப கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை குழந்தையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் முடிந்தவரை அவ்வப்போது வங்கி கணக்கின் இருப்பை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews