புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மகாளயபட்ச காலங்கள் என்ன? அதுல செய்ய வேண்டிய முக்கியமான 5 விஷயங்கள் என்ன? இதுகுறித்து பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி என்ன சொல்றாருன்னு பாருங்க.
அமாவாசையில் நாம் திதி கொடுக்கலன்னா நமது முன்னோர்கள் நமக்கு சாபம் கொடுப்பார்கள் என சொல்வார்கள். நமது முன்னோர்கள் நமக்கு சாபம் விடுவார்களா? தப்பே பண்ணி இருந்தாலும் மன்னித்து விடுவார்கள். அப்படி இருக்க, அவங்க ஏன் நமக்கு சாபம் கொடுக்கப் போறாங்க. நமக்கு பல பிறவிகளால் ஏற்பட்டு இருக்கக்கூடிய சாபமாக இருக்கட்டும். பாவமாக இருக்கட்டும். எதுவாக வேணாலும் இருக்கட்டும்.
பெரியவங்க நம்மளை சந்தோஷமா இருங்கன்னு மனசார வாழ்த்தினாலே நமக்கு அதைப் பத்திக் கவலையே பட வேண்டாம் அப்படிங்கறதால தான் இந்தக் காலத்துல நம்மளைத் தேடி வர்ற முன்னோர்களை நாம மரியாதையா நடத்தணும். வழிபடணும். அவங்களுக்கு இதெல்லாம் செய்யணும் அப்படிங்கறதை ஒரு வழக்கமா வச்சாங்க. ஆனா நம்மை இதுபற்றி பயமுறுத்தி வச்சிட்டாங்க. எளிமையான 5 விஷயங்கள் பற்றி இப்போ பார்க்கலாம்.
27.9.2026ல் இருந்து 10.10.2026 வரைக்கும் மகாளயபட்ச காலம். இந்த காலங்கள்ல நாம 5 முக்கியமான விஷயங்கள் செய்ய வேண்டும். காலை எழுந்த பிறகு சூரியன் உதயமான பிறகு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் பண்ண வேண்டும். 14நாள் தொடர்ந்து இதைச் செய்ய வேண்டும். வீட்டிலேயே கூட இதைச் செய்யலாம். எங்கு இருந்தாலும் எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்யலாம். இதுதான் முதல் விஷயம்.
அடுத்து உபவாசம் இருத்தல். சிலர் மதியம் வரை உபவாசம் இருப்பர். மதியம் இலை போட்டு படையல் செய்து அதன்பின் சாப்பிடுவர். முடியாதவர்கள் இப்படி விரதம் எடுக்க வேண்டிய தேவையில்லை. அமாவாசை அன்று மட்டும் கூட இருக்கலாம். விரதம் இருக்க முடிந்தவர்கள் காலை முதல் மதியம் வரை உபவாசம் இருக்கலாம். மதியம் இலை போட்டு படையல் இடுவது பெண்கள் தாராளமாகச் செய்யலாம்.
மதியம் என்ன சமைக்கிறீங்களோ அதை படையல் இடுங்க. அசைவ உணவைத் தவிரத்து விடுங்க. பருப்பு, ரசமானாலும் பரவாயில்லை. இலை போட்டு படையலிடுங்க. முன்னோர்களுக்குப் படைத்து விட்டு காகத்திற்கு உணவு வைங்க. 14 நாளும் படையலிட்டு அதன்பிறகு சாப்பிடலாம். விரதமே இருக்கலன்னாலும் பரவாயில்லை. இது ரொம்ப விசேஷமானது.
12மணிக்கு படையலிட்டால் ஆபீஸ்ல உள்ள கணவர் 1மணிக்குத் தான் சாப்பிடுவார். அதனால் அவரிடம் படையலிட்ட பின் போன் பண்ணி சொல்லி விடுங்க. அவரும் திருப்தியாக சாப்பிடுவார். மாலை 6 மணிக்கு விளக்கேற்றி முன்னோரை வழிபடுங்க. அவர்களின் ஆசிர்வாதம் வேண்டி வழிபடுங்க. மண் அகல்விளக்கை ஏற்றினாலே போதும். கண்டிப்பாக 14 நாள்களும் அன்னதானம் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு உயிருக்கு கொடுத்தாலே போதும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





