தமிழகத்தில் ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்களை விநியோகம் செய்வதில் இருந்த பழைய கூட்டு விற்பனைக் குழு (JPC) முறையைத் தவெக அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. திமுக மற்றும் அதிமுக ஆட்சிக்காலங்களில் சில குறிப்பிட்ட வணிகர்களுக்கு மட்டுமே ஆதரவாகச் செயல்பட்டு வந்த இந்த ஏகபோக முறையை ஒழித்துவிட்டு, வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் வகையில் புதிய ஆன்லைன் கொள்முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கம் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளது.
புதியதாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த வெளிப்படையான ஆன்லைன் முறையின் மூலம், கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவுச் சந்தைப்படுத்தும் சங்கங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்தும், சுயஉதவிக் குழுக்களிடமிருந்தும் அத்தியாவசியப் பொருட்களைக் கொள்முதல் செய்யும். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவுக் கூட்டமைப்பு (TNCCF) மூலமாக இந்த நேரடி கொள்முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த கூட்டு விற்பனைக் குழுக்கள் மூலம் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமான சில வர்த்தகர்கள் மட்டுமே இரண்டாம் மற்றும் மூன்றாம் தரமான பொருட்களை விநியோகித்து வந்ததாகவும், சில நேரங்களில் போலியான பிராண்ட் பெயர்களைப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாயின. திறந்தவெளி போட்டி இல்லாததால் ஊழலுக்கான வாய்ப்புகள் அதிகரித்ததோடு, நுகர்வோருக்குத் தரமான பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் நீடித்து வந்தது.
இந்த அவலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள், சோப்புகள் மற்றும் சலவைப்பொடிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் புதிய ‘வெற்றி’ (Vettri) பிராண்ட் பெயரின் கீழ் விற்பனை செய்யப்படவுள்ளன. ஈரோடு மஞ்சள் தூள், திருச்செங்கோடு நல்லெண்ணெய், கொல்லிமலை மிளகு மற்றும் பொள்ளாச்சி தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க பொருட்கள் இதற்காக நேரடியாகத் திரட்டப்படுகின்றன.
சந்தைப் விலையை விட 10 முதல் 20 சதவீதம் வரை குறைவான விலையில் தரமான பொருட்கள் நுகர்வோருக்குக் கிடைக்கும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடிகள் மற்றும் ரேஷன் கடைகள் மூலம் இந்த ‘வெற்றி’ பிராண்ட் பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. நடப்பு 2026-27 நிதி ஆண்டில் சுமார் 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இதன் மூலம் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான முன்னேற்பாடுகளைத் தீவிரப்படுத்தும் வகையில் சென்னையில் அலுவலர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி. காதிராஜ் ஆய்வுக்கூட்டங்களை நடத்தி திட்டத்தின் செயல்பாடுகளை விரைவுபடுத்தியுள்ளார். வரும் அக்டோபர் மாதத்தில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட உள்ள இந்தத் திட்டமானது, தமிழகக் கூட்டுறவுத் துறையில் மிக முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி நேரடியாக விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் பலன் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





