தவெக ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் விஜய் பெரிதாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ளாமல், தலைமைச் செயலகம் மற்றும் சென்னையை மையமாக வைத்தே தனது ஆட்சி பணிகளை கவனித்து வந்தார். இதனால், விஜய்யின் அரசியல் செயல்பாடு மற்றும் மக்கள் சந்திப்பு குறித்து கட்சிக்குள்ளேயே பல்வேறு விவாதங்கள் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் வெற்றிக்குப் பிறகு, கொங்கு மண்டலத்தில் தவெகவின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் விஜய்யை வைத்து பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று செங்கோட்டையன் உள்ளிட்ட கட்சியின் சீனியர் நிர்வாகிகள் முயற்சி மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்போது அதற்கு விஜய் ஆர்வம் காட்டவில்லை.
இந்த நிலையில், திடீரென மேட்டூர் அணையை திறந்து வைப்பதற்காக முதல்வர் விஜய் சேலம் சென்றது கட்சிக்குள் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக, இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளுக்காக முதல்வர் மாவட்டங்களுக்கு நேரடியாக செல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சேலம் பயணம் விஜய்யின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் திட்டமிட்ட அரசியல் பொதுக்கூட்டத்துக்கு செல்லாமல் இருந்த விஜய், தற்போது அரசின் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் தொடர்பான நிகழ்ச்சிகளுக்காக நேரடியாக மாவட்டங்களுக்கு செல்வது புதிய அரசியல் பாணியாக இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
இதற்கு அடுத்ததாக காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் நிகழ்ச்சிக்காக விஜய் விருதுநகர் செல்ல இருப்பதும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. ஒரே இடத்தில் இருந்து அரசு நிர்வாகத்தை கவனிப்பதைவிட, திட்டங்கள் செயல்படுத்தப்படும் இடத்துக்கே நேரடியாக சென்று அவற்றை தொடங்கி வைப்பது மக்களிடம் வேறுபட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தவெக தரப்பில் கருதப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விஜய்யின் செயல்பாடுகளை இதுவரை கவனித்து வந்த அமைச்சர்கள் மற்றும் சீனியர் நிர்வாகிகளுக்கே இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி முழுமையாக புரியவில்லை என்ற பேச்சும் கட்சிக்குள் ஓடுகிறது.
விஜய் தனது அரசியல் மற்றும் ஆட்சி செயல்பாட்டு பாலிசியை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் என்ற கருத்தும் தற்போது உருவாகியுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு சில மாவட்டங்களுக்கு நேரில் சென்று அரசு திட்டங்களை ஆய்வு செய்வது, புதிய திட்டங்களை தொடங்கி வைப்பது, பொதுமக்களை சந்திப்பது போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆட்சியின் செயல்பாடுகள் சென்னையைத் தாண்டி மாவட்டங்களிலும் நேரடியாக மக்களை சென்றடைய வேண்டும் என்பதே புதிய திட்டமாக இருக்கலாம்.
இதுவரை “முதல்வர் சென்னையில் இருந்து ஆட்சி செய்கிறார்” என்ற விமர்சனங்கள் இருந்திருந்தால், இனி அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாவட்டப் பயணங்கள் அமையலாம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அரசு சார்பில் தொடங்கப்படும் முக்கிய திட்டங்களின் தொடக்க விழாக்களில் விஜய் நேரடியாக கலந்து கொண்டால், அது நிர்வாக ரீதியாக மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் தவெகவுக்கு கூடுதல் கவனம் பெற்றுத் தரும். ஒரு பக்கம் ஆட்சி நிர்வாகம், இன்னொரு பக்கம் மக்கள் தொடர்பு என இரண்டையும் இணைக்கும் முயற்சியாக இந்த புதிய அணுகுமுறை பார்க்கப்படுகிறது.
இதனால், விஜய்யின் அடுத்தடுத்த மாவட்டப் பயணங்கள் மீது தற்போது தவெக நிர்வாகிகள் மட்டுமின்றி எதிர்க்கட்சிகளும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பொதுக்கூட்டங்களை நடத்தி கட்சி பலத்தை காட்டுவதைவிட, அரசு திட்டங்களை மக்களிடம் நேரடியாக கொண்டு செல்வதன் மூலம் ஆட்சியின் மீதான நம்பிக்கையை உருவாக்குவது என்ற புதிய ரூட்டில் விஜய் பயணிக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதுவரை அமைதியாக இருந்த விஜய்யின் ஆட்சி பாணியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், “சென்னையில் மட்டும் முதல்வர் இல்லை… இனி மாவட்டங்களிலும் முதல்வர் விஜய்!” என்ற புதிய அரசியல் எதிர்பார்ப்பை தவெக வட்டாரத்தில் உருவாக்கியுள்ளது.





