செய்திகள்

முதல்வர் விஜய்யையும் நடிகையும் தவறாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த தொழிலதிபர்.. பதிவு செய்தபோது இருந்த இடம் சீனா.. உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு..

முதல்வர் விஜய்யையும் நடிகையும் தவறாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த தொழிலதிபர்.. பதிவு செய்தபோது இருந்த இடம் சீனா.. உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு.. சீனாவில் இருந்து ஹாங்காங் சென்று அங்கிருந்து டெல்லி வந்தவுடன் அதிரடியாக கைது.. சென்னையில் தீவிர விசாரணை.. தொழிலதிபராக இருந்தாலும் அவதூறு செய்தால் சட்டம் தன் கடமையை செய்யத்தானே செய்யும்.. சமூக வலைத்தளங்கள் அவதூறு பரப்பும் இடம் அல்ல.. சிக்கினால் சின்னாபின்னம் அடைவீர்கள்..

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் நடிகை குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துகளுடன் விளம்பரம் வெளியிட்டதாக கூறப்படும் தொழிலதிபர் பிரவீன் கணேசன் சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் சமூக வலைதளத்தில் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டதாகவும், அந்த நேரத்தில் அவர் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பதிவுக்கு எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அவர் அந்த பதிவை நீக்கியதாகவும் கூறப்படுகிறது.

பிரவீன் கணேஷன் சீனாவில் பல்வேறு தொழில்களை நடத்தி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனிப்பட்ட பயன்பாட்டு பொருட்களை விற்பனை செய்யும் சில நிறுவனங்களை அவர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். சமூக வலைதளத்தை பார்த்தபோது அந்த விளம்பரத்தை கண்டதாகவும், அதற்கான ஸ்கிரீன்ஷாட்டை சேமித்து, பதிவின் URL-ஐ நகலெடுத்து போலீசில் புகார் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரின் அடிப்படையில் தென் சென்னை சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இன்ஸ்பெக்டர் சுஜாதா தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், பிரவீன் கணேசன் வெளிநாட்டில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் ஏ. அமல்ராஜ் உத்தரவின் பேரில் அவருக்கு எதிராக Look Out Circular எனப்படும் LOC பிறப்பிக்கப்பட்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு அந்த தகவல் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், ஹாங்காங்கில் இருந்து சனிக்கிழமை அதிகாலை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு பிரவீன் கணேசன் வந்துள்ளார். விமான நிலையத்தில் குடியேற்றத்துறை அதிகாரிகள் அவரது ஆவணங்களை சரிபார்த்தபோது, சென்னை சைபர் கிரைம் போலீசார் பிறப்பித்திருந்த LOC இருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை அதிகாரிகள் தடுத்து வைத்து சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் துர்கா தலைமையிலான போலீஸ் குழு உடனடியாக டெல்லி சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி சென்ற போலீசார் பிரவீன் கணேசனை அங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான Transit Warrant பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் சனிக்கிழமை இரவு விமானம் மூலம் அவரை சென்னைக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னைக்கு அழைத்து வரப்பட்ட பிறகு, சமூக வலைதள பதிவு தொடர்பாக அவரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு, பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, டெல்லி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக பிரவீன் கணேசன் தனது எக்ஸ் பக்கத்தில் சனிக்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. ஜூன் மாதம் வெளியிட்டிருந்த, பின்னர் நீக்கப்பட்ட சமூக வலைதள பதிவை அடிப்படையாகக் கொண்ட LOC காரணமாக குடியேற்ற அதிகாரிகள் தன்னை தடுத்து வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் உள்ள கிரிமினல் வழக்கறிஞரின் உதவியை நாடிய அவர், விமான நிலைய போலீசார் அல்லது பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி Transit Remand நடவடிக்கையை எதிர்கொள்ள சட்ட உதவி கோரியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் பதிவின் தன்மை, அதன் பின்னணி, சட்டரீதியான அம்சங்கள் ஆகியவை விசாரணைக்குப் பிறகே முழுமையாக தெரியவரும்.

Avatar photo
Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.