தமிழக தேர்தல் களம் தற்பொழுது ஒரு மாபெரும் அரசியல் மாற்றத்தை சந்தித்து வரும் வேளையில், தங்களை எவராலும் அசைக்க முடியாது என்ற அதீத நம்பிக்கையில் இருந்த பாரம்பரிய கட்சிகளுக்குப் புதிய தலைமுறையினரின் வாக்கு வங்கி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் திமுக ஆகிய கட்சிகள் தங்களுக்குள் ஒருவரையொருவர் மோதிக்கொண்டும், பரஸ்பரம் விமர்சித்து கொண்டும் தேர்தல் அரசியலை நகர்த்தி வந்தன.
இத்தகைய சூழலில், ‘அரசியலே தெரியாதவர்கள், பொது வாழ்க்கைக்கு வராதவர்கள் எல்லாம் எப்படியோ உள்ளே வந்துவிட்டார்கள்’ என்று அலட்சியமாக நினைத்த பழைய அரசியல்வாதிகளின் கணக்குகளை மக்கள் தற்பொழுது தலைகீழாக மாற்றி எழுதியிருக்கிறார்கள். தங்களுக்கு போட்டியாகவே கருதாமல், ஒரு பொருட்டாகவே மதிக்காமல் இருந்த புதிய சக்திகள் இன்று தேர்தல் களத்தில் விஸ்வரூபம் எடுத்து நிற்பதை அவர்களால் இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
முன்னணி திராவிட இயக்கங்களின் மூத்த தலைவர்கள் தங்களின் மேடைப் பேச்சுகளில் காட்டிய திமிரும், புதிய மாற்று சக்திகளை ‘நாய்’ என்றும் ‘இவன், அவன்’ என்றும் தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சித்ததும் தான் அவர்களின் வீழ்ச்சிக்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. சில திமுக தலைவர்களின் தரமற்ற பேச்சுகளும், அகம்பாவமான அணுகுமுறையும் அடித்தட்டு மக்கள் மத்தியிலும், குறிப்பாக நடுநிலையாளர்கள் மத்தியிலும் பெரும் வெறியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது. தங்களுக்கு தான் மக்கள் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்ற இவர்களின் மமதை கலந்த செயல்பாடுகள், இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற முடிவுக்கு மக்களைத் தள்ளியது.
குறிப்பாக, தற்போதைய தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடம் என்னவென்றால், இளைய தலைமுறையான ‘ஜென்-சி’ மற்றும் அடுத்து வரக்கூடிய ‘ஜென்-ஆல்பா’ ஆகிய புதிய வாக்காளர்கள் இந்தத் தற்பெருமை பேசும் பழைய தலைவர்களை எப்போதுமே நம்ப போவதில்லை என்பதுதான். இந்த இளைய சமுதாயம் வெற்று முழக்கங்களையும், குடும்ப அரசியலையும், மேடை நாகரிகம் இல்லாத மூத்த நிர்வாகிகளின் பேச்சுகளையும் முற்றிலுமாக நிராகரித்து விட்டது. பாரம்பரிய வாக்கு வங்கிகளை மட்டுமே நம்பி கொண்டு, தங்களுக்கு தகுதியான மாற்று சக்திகள் யாரும் இல்லை என்ற மாயையில் வாழ்ந்த திராவிட மற்றும் வலதுசாரி கட்சிகளின் தோல்விக்கு, அவர்களின் இந்தத் தவறான அணுகுமுறையே அடித்தளமிட்டது.
தேர்தல் களத்தில் களமிறங்கிய புதிய மற்றும் இளமையான வேட்பாளர்களை பார்த்து, ‘இந்த மூஞ்சியெல்லாம் ஜெயிக்குமா, இதெல்லாம் ஒரு மூஞ்சியா, சும்மா சோசியல் மீடியாவில் போஸ்ட் போட்டுவிட்டு வந்து நிற்கிறார்கள்’ என்று எள்ளி நகையாடிய மூத்த அரசியல்வாதிகள் இன்று வாயடைத்து போயுள்ளனர். துடிப்பான இளைஞர்கள், இத்தனை கால கட்டமைப்புகளையும் பண பலத்தையும் மீறி தேர்தல் களத்தில் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளனர். இந்த சின்னஞ்சிறு இளைஞர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நிகழ்த்திய சாதனை, பாரம்பரியக் கட்சிகளின் அகந்தையைத் தகர்த்து எறிந்துள்ளது.
தோல்விக்கு பின்னால் இருக்கும் உண்மையான காரணத்தை கண்டறிந்து அதை திருத்தி கொள்ளாமல், தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்ததே இவர்களின் தற்போதைய பரிதாப நிலைக்குக் காரணமாகும். மக்கள் எதை விரும்புகிறார்கள், அவர்களின் அடிப்படைத் தேவைகள் என்ன என்பதை உணராமல், புதிய மாற்று சக்திகளைப் பொது மேடைகளில் இழிவாகப் பேசியே இவர்களின் வாக்குகள் மொத்தமாகச் சரிந்துள்ளன. நல்ல திட்டங்களையும், கண்ணியமான அரசியலையும் மட்டுமே விரும்பும் மக்கள், இத்தகைய திமிர் பிடித்த பேச்சுகளுக்குப் பயந்து ஒதுங்காமல், தங்களின் வாக்குகள் மூலமாகப் புதியவர்களுக்குப் பேராதரவை வழங்கி ஒரு வரலாற்று மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளனர்.
இறுதியாக, இன்றைய அரசியல் சூழல் என்பது வெறும் பணத்தையும், அதிகாரத்தையும், பழைய பாரம்பரியத்தையும் மட்டுமே நம்பி நகர்வதில்லை என்பது தெளிவாகியுள்ளது. மக்கள் மத்தியில் தங்களின் தற்போதைய செல்வாக்கு என்ன என்பதைத் தீவிரமாக சுயபரிசோதனை செய்து, தங்களின் தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பழைய கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன. அகங்காரப் பேச்சுகளையும், புதியவர்களைக் கேலி செய்யும் போக்கையும் கைவிடாத வரை, இனி வரும் காலங்களில் புதிய தலைமுறை வாக்காளர்கள் இத்தகைய பழைய முகங்களை முற்றிலுமாகத் தமிழ்நாட்டு அரசியலை விட்டே ஓரங்கட்டி விடுவார்கள் என்பதுதான் இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் கசப்பான உண்மையாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
