நடிச்ச படங்கள் ஆயிரத்துக்கும் மேல.. ஹீரோயின் தொடங்கி கிளாமர் கதாபாத்திரங்கள் வரை பட்டையை கிளப்பிய நடிகை..

கமல்ஹாசன் நடித்த ‘மன்மத லீலை’ என்ற திரைப்படத்தில் ராங் நம்பர் பார்கவி என்ற கேரக்டரில் நடிகை ஒய் விஜயா நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுக் கொடுத்த நிலையில் அதன் பிறகு அவர் பல திரைப்படங்களில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என கிட்டத்தட்ட 1000 படங்களில் நகைச்சுவை மற்றும் கிளாமர் கலந்த வேடங்களில் அதிகம் நடித்துள்ளார். மேலும் அவர் ஹிந்தியிலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். திரை உலகில் பெயர் எடுத்த ஒய் விஜயா, சின்னத்திரை தொடர்களிலும் நிறைய நடித்துள்ளார்.

நடிகை ஒய் விஜயா ஆந்திராவைச் சேர்ந்தவர். டான்ஸ் கற்றுக் கொள்வதற்காக சென்னை வந்த நிலையில் டான்ஸ் அரங்கேற்றம் முடிந்த பின்னர் தான் அவருக்கு ’வாணி ராணி’ என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு ’மன்மத லீலை’ படத்தில் நடித்த ராங் நம்பர் கேரக்டர் தான் அவருடைய திரை உலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து ’மூன்று முடிச்சு’ ’ஆறு புஷ்பங்கள்’ ’நவரத்தினம்’ ’முடிசூடா மன்னன்’ ’புண்ணிய பூமி’ ’பைரவி சக்களத்தி’ ’கிளிஞ்சல்கள்’ ’தில்லுமுல்லு’  ’மண்வாசனை’  ’வாழ்க்கை’ ’பூவிலங்கு’ ’நூறாவது நாள்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.  மேலும் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், வில்லி மற்றும் குணச்சித்திர கேரக்டர்களாக அமைந்திருந்தது.

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், மாதவன் உள்பட 3 தலைமுறை நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார்.  ’ஹலோ மை டியர் ராங் நம்பர்’ என்ற பாடல் தான் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பதும் இந்த பாடல் படம் ரிலீஸ் ஆன புதுதில் எங்கே போனாலும் ஒலிக்கும் என்றும் எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இந்த பாடலின் சில வரிகளை என்னை பாடச் சொல்வார்கள் என்றும் தனது மலரும் நினைவுகளை சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒய் விஜயா குறிப்பிட்டிருந்தார்.

அதே போல் கமல்ஹாசன் நடித்த ’காக்கி சட்டை’ திரைப்படத்தில் ’சிங்காரி சரக்கு’ என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், அந்த பாடல் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

நடிகை ஒய் விஜயா, அமலாநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளராக அவரது கணவர் இருந்தார். இந்த தம்பதிக்கு அனுஷா என்ற ஒரே மகள் உள்ளார். ஹீரோயின், கிளாமர் கேரக்டர்கள், வில்லி என எந்த வேடம் வந்தாலும் நடித்து பட்டையைக் கிளப்பிய ஒய் விஜயா, சீரியல்களிலும் பிரபலமாகி இருந்தார். சன் டிவியில் ஒளிபரப்பான ’சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற சீரியலில் மிக அபாரமாக நடித்திருப்பார்.

தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான ’மின்னலே’ என்ற சீரியல் அவருக்கு நல்ல திருப்புமுனையை கொடுத்திருந்தது. மாதவன் ஜோதிகா நடித்த ’பிரியமான தோழி’ என்ற படத்திற்கு பிறகு அவர் தமிழில் நடிக்கவில்லை. இருப்பினும் அவர் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

இப்போதும் தமிழில் நல்ல கேரக்டர் வந்தால் தான் நடிக்க தயார் என்றும் தான் ஆந்திராவில் செட்டில் ஆகிவிட்டதாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் சென்னையில் தான் குடும்பத்துடன் இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...