சொர்க்க வாசலுக்கே அழைத்துச் செல்லும் இளையராஜாவின் இந்தப் பாடல்.. மனுஷன் என்னமா மியூசிக் போட்டுருக்காரு தெரியுமா? மெய்மறந்த சுஜாதா!

திருவாசகத்திற்கு உருகார்.. ஒரு வாசகத்திற்கும் உருகார் என்ற ஒரு வாக்கியம் உண்டு. அதனுடன் இசையைச் சேர்த்து பாடும் போது இறைவனே நம் கண்முன் நிற்பது போல இருக்கும். இப்பேற்பட்ட திருவாசகத்தை சிம்பொனியில் இசைத்து உலக இசையமைப்பாளர்களை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தவர் நம் இசைஞானி. திருவாசகம் சிம்பொனி இசையில் கேட்டோருக்கு கூடுதல் தகவலாக இளையராஜா நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திற்கும் இதேபோல் இசையமைத்துள்ளார் என்பதுதான் ஆச்சர்யம்.

பிரபல எழுத்தாளரும், வசனகார்த்தாவுமான சுஜாதா அவர்கள் இளையராஜாவின் இந்த இசையைப் பற்றிக் கூறும் போது, “இசைஞானி இளையராஜாவை சந்தித்து அவருடைய திருவாசகம் ‘சிம்பொனி’ அனுபவத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தது ஓர் இனிய அனுபவம். இளையராஜாவுடன் எனது நட்பு ஏறக்குறைய ஆரம்ப காலத்திலிருந்து தொடர்வது. முதன்முதலாக காயத்ரி, ப்ரியா போன்ற படங்களை பஞ்சு அருணாசலம் எடுத்தபோது (1976) பெங்களுரில் கம்போசிங்கின் போதும், சென்னையில் யேசுதாஸின் முதல் ஸ்டீரியோ, ஸ்டுடியோவில் ரிக்கார்டிங்கின்போதும் – ஆர்வமுள்ள, முன்னேறத் துடிக்கும், எந்த சவாலையும் சந்திக்கத் தயாராக இருக்கும் இளைஞராகப் பார்த்திருக்கிறேன். இன்னமும் ஞாபகம் இருக்கிறது.

அப்போதெல்லாம் சின்தஸைஸர் மிக மிக குறைவாகத்தான் பயன்படுத்தப் பட்டது. வயலின் என்றால் நிஜ வயலின்கள், ப்ளூட் என்றால் நிஜ ப்ளூட். கித்தாரும் அப்படியே. ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் இசைக் கலைஞர்கள் கூட்டம் பெரும் வட்டமாக இருக்கும். ட்ராக்கில் பாடுவதெல்லாம் கிடையாது. கான்சோலில் இசை அமைப்பாளர் வீற்றிருக்க, உள்ளே ஒரு அரேஞ்சர் இருப்பார். அப்போதே, ராஜா எல்லோருக்கும் நோட்ஸ் எழுதிக் கொடுப்பார் – உள்ளூர் வாத்தியங்களுக்கு ஸ்வரங்களாகவும், வெஸ்டர்னுக்கு நொட்டேஷனிலும்.

எந்த மூலையில், எத்தனை லேசான பிசிறு இருந்தாலும் அவரது நுட்பமான, தீட்டப்பட்ட காதுகளுக்குக் கேட்டு விடும். கட் பண்ணி விட்டு,  மீண்டும் ஒன்… டூ… என்று கை சொடுக்கினால் முடிவில், திடீர் என்று ஒரே நேரத்தில் அத்தனை பேரும் ஒத்திசைந்து சங்கீதம் புயலாக வெடிக்கும். அந்தத் திடீர்த் துடிப்பு வேறெதிலும் கிடைக்காதது.

ராஜாவின் முன்னேற்றத்தைப் படிப்படியாக கவனித்து வந்திருக்கிறேன். திருவாசகத்தில் உள்ள பக்தி ரசத்தையும், ஈசனிடம் உண்மையான சரணாகதியையும் உணர்ந்து அவர் பாடியிருக்கும் ஆரடோரியோ, ராஜாவின் இசைப் பயணத்தில் ஒரு மிக முக்கியமான திருப்பம். இனிமேல் அவர் செய்ய இருப்பதற்கெல்லாம் கட்டியம். ராஜா ஒரு முழுமையான சிம்பொனியை எழுதக் கூடியவர்.

அதே போல் சிக்கலான மேற்கத்திய அமைப்பில் கிழக்கத்திய இலக்கியங்களின் சுவையை இணைக்கும் திறமை இவரிடம் தான் காண முடிகிறது. விளைவாக, சிலப்பதிகாரம் ஒரு ஆப்பெராவாக (Opera) வெளிவந்தால் ஆச்சரியப் பட மாட்டேன். நம்மாழ்வாரின் சூழ்விசும்பு பாசுரங்களை தூரியம் முழங்க, பில்ஹார்மோனிக் இசையில் பரமபதத்துக்குக் கைப்பிடித்து அழைத்துச் செல்லலாம். ராஜாவின் முழுமேதைமை வெளிநாட்டில் தான் முதலில் வெளிப்படும். தென்னாட்டில் அறியப்படும். திருவாசகம் சிடியை வாங்கிக் கேட்டுப் பாருங்கள்.“ இவ்வாறு சுஜாதா அவர்கள் இதழ் ஒன்றிக்கான பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews