200 படங்களுக்கும் மேல் நடித்த ஜெயகுமாரி.. வேளச்சேரியில் வாடகை வீட்டில் வாழும் சோகம்..!

திரை உலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்தவர்களே கார் பங்களா வாங்கி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்ட நிலையில் 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகை ஜெயகுமாரி இன்னும் சென்னை வேளச்சேரியில் வாடகை வீட்டில் வசித்து வருவதாக தெரிகிறது.

நடிகை ஜெயகுமாரி கடந்த 1950கள், 60கள் மற்றும் 70களில் பிரபலமான நடிகையாக இருந்தார். குறிப்பாக கிளாமர் கேரக்டரில் அவர் அதிகம் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

50க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்கள், பல தமிழ் திரைப்படங்களில் நடித்த அவர் ஒரு சில தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். எம்ஜிஆர் நடித்த ‘நாடோடி’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் தமிழில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் வில்லன் நம்பியாரின் சகோதரியாக நடித்திருப்பார் என்பதும் கண் தெரியாத மாற்றுத்திறனாளியாக அவரது நடிப்பு மிகவும் அபாரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘நாடோடி’ படத்தின் வெற்றியை அடுத்து அவர்  ’சிஐடி சங்கர்’ ’எங்கிருந்தோ வந்தாள்’ ’பத்தாம் பசலி’ ’அனாதை ஆனந்தன்’ ’மாணவன்’ ’நூற்றுக்கு நூறு’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். சிவாஜியுடன் ’அருணோதயம்’  ’கௌரவம்’  உள்பட சில படங்களிலும்  ரஜினியுடன் ’முள்ளும் மலரும்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

jayakumari1

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் அவர்  எதிர்பாராத சூழ்நிலை காரணமாக தற்போதும் வறுமையில் தான் வாடி வருகிறார். சென்னை வேளச்சேரியில் அவர் தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் அவருக்கு ஒரு சில நோய்கள் இருப்பதால் இருப்பதாகவும்  மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் திண்டாடி வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் அளித்த பேட்டியில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனக்கு உதவ வேண்டும் என்று கூறியிருந்தார். இருப்பினும் அவருக்கு உதவி கிடைத்ததா? என்று தெரியவில்லை.  பல திரைப்படங்களில் கிளாமர் வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்த ஜெயகுமாரி இன்று  வறுமையான சூழலில் இருக்கும் நிலையில் நடிகர் சங்கம் தான் அவருக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews