வீரபாண்டியன் கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரை கேரக்டரில் நடித்தது யார் தெரியுமா?

வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தில் சிவாஜியிடம் வரி கொடுக்க வேண்டும் என்று கேட்கும் ஆங்கிலேயர் வேடத்தில் நடித்த நடிகரை யாராலும் மறந்திருக்க முடியாது. சிவாஜி கணேசனுக்கு இணையாக இல்லாவிட்டாலும் அவருடைய நடிப்பு அந்த படத்தில் மிகவும் சூப்பராக இருக்கும். வசனங்களை மிகவும் தெளிவாக உச்சரிப்பார். அவர்தான் நடிகர் சி.ஆர்.பார்த்திபன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நடித்த சிவாஜியை எப்படி மறக்க முடியாதோ அதேபோல் சி.ஆர்.பார்த்திபனின் ஜாக்சன் துரை கேரக்டரையும் யாராலும் மறக்க முடியாது. இந்த படம் வெளியாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அந்த கேரக்டர் ரசிகர்கள் மனதில் இருக்கும்.

நடிகர் சி.ஆர்.பார்த்திபன் வேலூரை சேர்ந்தவர். கல்லூரி படிப்புக்காக சென்னை வந்த நிலையில் கல்லூரி காலத்திலேயே நாடகங்களில் நடிக்க விரும்பினார். சிவாஜியின் நடிப்பை பார்த்துதான் நாமும் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த நிலையில் தான் அவருக்கு சென்னை தலைமை செயலகத்தில் வேலை கிடைத்தது.

cr parthiban1

வேலையில் ஒரு பக்கம் கவனம் இருந்தாலும் நாடகங்களிலும் நடித்து கொண்டிருந்தார். குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று அவர் விண்ணப்பம் செய்த நிலையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

தலைமைச் செயலகத்தில் 82 ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சி.ஆர்.பார்த்திபனுக்கு 150 ரூபாய் மாத சம்பளத்தில் ஒரு நாடக கம்பெனியில் வேலை கிடைத்தது. உடனே அங்கு சென்று விட்டார். இந்த நிலையில்தான் அவருக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதிய ‘புதுமைப்பித்தன்’ என்ற திரைப்படத்தில் அவர் நாயகி டிஆர்ராஜகுமாரிக்கு அண்ணனாக நடித்தார். அதன் பிறகு சிவாஜி கணேசன் நடித்த இரும்புத்திரை, ஜெமினி கணேசன் நடித்த வஞ்சிக்கோட்டை வாலிபன், மோட்டார் சுந்தரம் பிள்ளை உள்பட பல படங்களில் நடித்தார்.

ஜெயலலிதாவுடன் மூன்றெழுத்து என்ற படத்தில் நடித்த அவர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஜெமினி கணேசனின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவராக சி.ஆர்.பார்த்திபன் இருந்தார். நடிகர் சி.ஆர்.பார்த்திபனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ராஜாஜி, கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா மற்றும் என்டிஆர் ஆகியோர் இருந்தனர் என்பதும் பின்னாள் அவர்கள் அனைவரும் முதல்வரானார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

cr parthiban

ஒரு கட்டத்தில் திரையுலகில் இருந்து விலகி இருந்த சி.ஆர்.பார்த்திபன் மீண்டும் ‘கோழி கூவுது’ என்ற படத்தில் நடித்தார். அந்த படத்தில் இடம் பெற்ற ‘அண்ணே அண்ணே’ என்ற பாடலில் இவர் நடித்ததை யாராலும் மறந்து இருக்க முடியாது.

‘நான் பல படங்களில் நடித்திருந்தாலும் என்னை ஜாக்சன் துரை என்றுதான் பலரும் அழைப்பார்கள்’ என்றும் ‘அந்த கேரக்டர் தான் எனக்கு கடைசி வரை மக்கள் மனதில் நிலைத்திருந்தது’ என்றும் கூறியுள்ளார். ‘திரையுலகில் கூட என்னை ஜாக்சன் துரை நடிகர் என்று தான் அழைப்பார்கள்’ என்றும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து ரசிகர்களின் மனதில் இருந்த ஜாக்சன் துரை சி.ஆர்.பார்த்திபன் கடந்த 2021ஆம் ஆண்டு வயது மூப்பு காரணமாக காலமானார். அவர் மறைந்தாலும் அவரது ஜாக்சன் துரை கேரக்டர் தமிழ் சினிமா இருக்கும் வரை மறையாது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews