அஜித்தை ‘வாடா போடா’ என பேசிய வடிவேலு.. ஒரு மாமன்னனின் சாம்ராஜ்யம் சரிந்த கதை..!

திரை உலகில் வடிவேலு ஒரு மாமன்னனாக இருந்தார் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவரது காமெடிகளுக்காகவே ஓடிய படங்கள் பல என்பதும் அவரது காமெடிகள் இன்றும் ரசிக்கத்தக்க வகையில் இருக்கும் என்பதும் தெரிந்ததே. திரையுலகில் ஒரு மாமன்னனாக இருந்த அவரது வாழ்க்கை திடீரென சரிந்ததன் காரணம் அவரது மோதல் போக்கே என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

vadivelu ajith

வடிவேலு முதல் முதலாக சறுக்கியது அஜித் படத்தில் தான். கடந்த 2002 ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘ராஜா’ என்ற படத்தில் வடிவேலு காமெடி நடிகராக நடித்தார். அப்போது அஜித்தை ‘வாடா போடா’ என்று பேச வேண்டிய வசனங்கள் இருந்தது. இது படத்திற்கான வசனம் என்பதால் அஜித் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்த பின்னரும் அஜித்தை அவர் ‘வாடா போடா’ என்று பேசியதை அவர் சுத்தமாக விரும்பவில்லை.

அஜித்தை பொருத்தவரை மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருப்பவர். ஒரு சின்ன குழந்தையை கூட அவர் ‘வாங்க, போங்க’என்று தான் பேசுவார். ஆனால் வடிவேலு தன்னை படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் கூட வாடா போடா என பேசியது அவருக்கு மன வருத்தத்தை உண்டாக்கியது. அதனால் ‘ராஜா’ படத்திற்கு பிறகு 21 வருடங்களாக இன்று வரை அஜித் படத்தில் நடிக்க வடிவேலுவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vadivelu vijayakanth

வடிவேலு ஆரம்ப கட்டத்தில் இருந்த போது அவருக்கு தானாகவே வலிய வந்து வாய்ப்பு கொடுத்தவர் விஜயகாந்த். தன்னுடைய மதுரைக்காரர் என்ற பாசத்தின் காரணமாக ‘சின்ன கவுண்டர்’ படத்தில் அவருக்கு ஒரு நல்ல கேரக்டரை கொடுத்தார். ஆனால் அதே விஜயகாந்த் படத்தில் பின்னாளில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இயக்குனர் கூறாத வசனத்தை வடிவேலு பேசினார். அதனால் விஜயகாந்த் மனவருத்தம் அடைந்தார். அப்போது வாக்குவாதம் முற்றி வடிவேலு கன்னத்தில் விஜயகாந்த் அடித்ததாகவும் கூறப்பட்டது.

அதனை அடுத்து விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் காலமானபோது விஜயகாந்தின் கார் வடிவேலு அலுவலகம் வாசல் அருகே நின்றிருந்தது. அதனால் ஏற்பட்ட குழப்பம் சண்டை காரணமாக வடிவேலு தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. அதன் பின்னர் திரையுலகிலும் அரசியல் ரீதியிலும் விஜயகாந்தை வடிவேலு எந்த அளவுக்கு எதிர்த்தார் என்பதும் அதன் பின்னர் பத்து வருடங்கள் திரையுலகில் இருந்தே காணாமல் போனார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

vadivelu dhanush

அதேபோல் தனுஷ் நடித்த ‘படிக்காதவன்’ என்ற திரைப்படத்தில் முதலில் காமெடி கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமானவர் வடிவேலு தான். ஆனால் அந்த படத்தில் ஏற்கனவே செய்தது போல இயக்குனர் சுராஜ் கூறாத வசனத்தை எல்லாம் வடிவேலு கூறினார்.

ஒரு கட்டத்தில் தனுஷ், ‘இயக்குனர் சொன்ன மாதிரி நடியுங்கள்’ என்று அறிவுரை கூற, ‘உங்க மாமனார் ரஜினிக்கே சந்திரமுகி படத்தில் நான் தான் வசனம் சொல்லிக் கொடுப்பேன், எனக்கு நீ வசனம் சொல்லிக் கொடுக்கிறாயா’ என்று கூறியதாகவும், அதனை அடுத்துதான் தனுஷ் படிக்காதவன் படத்தில் இருந்து வடிவேலுவை நீக்கவிட்டு விவேக்கிற்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

vadivelu madhavan 1

அதேபோல் சுந்தர்.சி-யின் பல திரைப்படங்களில் வடிவேலு தான் பட்டையை கிளப்பி இருப்பார். குறிப்பாக ‘வின்னர்’ உள்பட ஒரு சில படங்கள் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. இந்த நிலையில் சுந்தர்.சி இயக்கிய ‘ரெண்டு’ என்ற திரைப்படத்தில் மாதவனுடன் நடித்துக் கொண்டிருந்த போதுதான் மாதவனுக்கும் வடிவேலுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சுந்தர்.சி-யும் மனவருத்தம் அடைந்ததை அடுத்து சுந்தர்.சி இயக்கிய எந்த படத்திலும் வடிவேலுவை அழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

vadivelu and rajkiran

இதற்கெல்லாம் உச்சகட்டமாக வடிவேலுவை திரை உலகிற்கு அழைத்து வந்தவரே ராஜ்கிரண் தான். தன்னுடைய அலுவலகத்திலேயே அவருக்கு தங்க வைத்து, சாப்பாடு போட்டு, துணிமணிகள் கொடுத்து அவரை ஒரு மனிதராக மாற்றியதே ராஜ்கிரண்தான். அப்படிப்பட்ட ராஜ்கிரண் ஒரு காலத்தில் நஷ்டத்தில் இருந்தபோது வடிவேலு ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து உதவி செய்தார். ஆனால் அந்த உதவியை அவர் கிட்டத்தட்ட கோலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் சொல்லிக் காட்டி, ‘நான் தான் ராஜ்கிரனுக்கு உதவினேன்’ என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார். இது ராஜ்கிரண் காதுவரை சேர்ந்து அவர் மிகுந்த மனவருத்தம் அடைந்ததாக கூறப்பட்டது.

இவ்வாறு தன்னை ஏற்றிய ஏணியையே எட்டி உதைத்தவர் வடிவேலு என்பதால் தான் அவர் கிட்டத்தட்ட 10 ஆண்டுக்கு மேலாக நடிக்காமல் இருந்தார். வடிவேலு மிகப்பெரிய திறமையானவராக இருக்கலாம், ஆனால் அவருடைய பண்பு அவருடைய வாய்ப்பை தட்டிப் பறித்ததாகத்தான் கோலிவுட் திரை உலகினர் கூறுகின்றனர்.

எவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் பொது இடத்தில் சக மனிதனை மதிக்க தெரியாமல் இருந்தால் அவர் மாமன்னனாக இருந்தாலும் அவருடைய சாம்ராஜ்யம் சரிந்து விடும் என்பதற்கு வடிவேலு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக கூறப்படுகிறது. திரை உலகில் மட்டுமின்றி எந்த துறையில் இருந்தாலும் நாம் கடந்து வந்த பாதையை ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும் என்பதும் நமக்கு உதவி செய்தவர்களை என்றும் நன்றியுடன் பார்க்க வேண்டும் என்பதும் இதில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews