உள்ளம் கவர்ந்த கள்வன், தேவாரம் பாடலும் விளக்கமும் -1



பாடல்
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொருள்:
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,
இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

விளக்கம்…
தோடுடைய செவியன்” என்னும் தொடரில் தோடு என்பது பெண்கள் காதில் அணியும் ஓர் அணிகலன். செவியன் என்பது ஆண்பாலை உணர்த்துவது. எனவே “ தோடுடைய செவியன்” என்பது உமாதேவியாரைத் தன் உடம்பில் ஒரு பாதியாகக் கொண்ட உமையொரு பாகனை
உணர்த்தும். உமை அம்மை அருளால் உருவான திருமுறை வாக்கை நினைத்துத்தான் உமையம்மையாரைக் குறிக்கத் தோடு எனத்
தொடங்கிப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே சிவபருமானையே பாடும் திருமுறையின் தொடக்கம் அவனருட்சக்தியாகிய அம்மையே நோக்கியே அமைந்துள்ளது என்லாம்.

தேவாரப்பாடலும் விளக்கமும் தொடரும்…

Published by
Staff

Recent Posts