தில்லானா மோகனாம்பாள் பொன்னுசாமி மறைந்தார்!! அழியா இசையாய் என்றும் நினைவில்!!

தமிழ் சினிமாவில் காலத்தால், அழியாத எந்த தலைமுறையும் வியந்து பார்க்கக்கூடிய படங்கள் பல உள்ளன. அதில் ஒன்று ஏ.பி நாகராஜன் இயக்கிய ’தில்லானா மோகனாம்பாள்’.

நடிகர் திலகம் மற்றும் நாட்டியப் பேரொளி இணைந்து நடித்து 1968ல் வெளியானது. இந்த படத்தின் கதை, எழுத்தாளர் கொத்தமங்கலம் சுப்பு ஆனந்த விகடனில் அதே பெயரில் எழுதிய கதையாகும். அதை, ஏ.பி நாகராஜன் படமாக எடுத்தார்.

சிவாஜி கணேசன், பத்மினி, டி.எஸ் பாலைய்யா, மனோரமா இவர்களின் நடிப்பில் படம் காவியமாக இருக்கும். இசையே படத்தின் பிரதானம். இசை கலைஞர்களை மையமாக கொண்ட படம். கதாநாயகன் நாதஸ்வர வித்வான். கதாநாயகி பரதநாட்டிய கலைஞர் இவர்களுக்கு இடையிலான காதல்.

அதற்கிடையில் வரும் பிரச்சனைகள் என எல்லா கால கட்டத்திலும் மக்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும். நடிகர்கள் இசை கலைஞர்களாக திரையில் தோன்றினாலும், நிஜத்தில் அதற்கு உயிர் கொடுத்தவர்கள் இசைக்கலைஞர்களும் இசையமைப்பாளரும் தான்.

கே.வி மகாதேவன் இந்த படத்தின் இசையமைப்பாளர். படத்தில் நாதஸ்வரம்தான் முக்கிய அம்சம் என்பதால் மதுரையில் உள்ள எம்.பி.என் சகோதரர்களை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார்கள். அவர்கள் வந்ததும் சிவாஜிக்கும் இசையமைப்பாளருக்கும் 3 மணிநேரம் வாத்தியங்கள் வாசித்து காட்டி இருக்கிறார்கள்.

அவர்களது திறமையை கண்டு வியந்த கே.வி மகாதேவனும், சிவாஜி கணேசனும் தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு என்.பி.என் சகோதரர்களை பதிவு செய்திருக்கிறார்கள். 6 மாத காலம் சென்னையில் தங்கி தில்லானா மோகனாம்பாள் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இவர்கள் குழுவில் இருந்த தவில் வித்வான் சந்தானம் டி.எஸ் பாலைய்யாவிற்கு தவில் வித்வானுக்கான உடல் மொழிகளை கற்று கொடுத்திருக்கிறார். இப்படி இசையோடு மட்டுமல்லாமல், நடிகர்கள் நிஜ இசைக் கலைஞர்களாக திரையில் ஜொலிக்கவும் கற்றும் கொடுத்திருக்கிறார்கள்.

சிவாஜி கணேசன் எம்.பி.என் சகோதரர்களின் உடல் மொழியையே பின்பற்றி நடித்திருக்கிறார். எம்.பி. என் சகோதரர்களில் மூத்தவர் சேதுராமன் பல வருடங்களுக்கு முன் காலமானார். மதுரையில் வசித்து வந்த இளையவர் பொன்னுசாமி நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார்.

அவருக்கு வயது 91 ஆகும். எம்.பி.என் பொன்னுசாமி பெற்ற விருதுகள் தமிழக அரசின் கலைமாமணி, சங்கீத சூடாமணி விருது, இசை பேரறிஞர் விருதுகள் ஆகும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...