1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் சம்பளம்.. கணவரை இழந்த பின் யாருடனும் ஜோடி சேர்ந்து நடிக்காத கேபி சுந்தராம்பாள்..

தமிழ் திரை உலகில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் கேபி சுந்தராம்பாள். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 1908 ஆம் ஆண்டு பிறந்தவர் கேபி சுந்தராம்பாள். அவரது இனிஷியலில் ஒன்று அவரது தாயார் பெயர் என்பதும், இன்னொன்று அவர் பிறந்த கிராமத்தின் பெயரும் ஆகும்.

சிறு வயதிலேயே கலையின் மீது ஆர்வத்தில் இருந்த கேபி சுந்தராம்பாள், சிறுவயதில் தந்தையை இழந்தார். அதன் பிறகு சகோதரர் மற்றும் சகோதரிகள் அரவணைப்பில் வளர்ந்தார். ஒரு கட்டத்தில் நாடகக் குழுவில் இணைந்து நடித்தார். ஆரம்பத்தில் அவருக்கு ஆண் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் சொந்த குரலில் நாடகத்தில் பாடியதையடுத்து அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது.

1917 ஆம் ஆண்டு அதாவது 9 வயதிலேயே அவர் இலங்கை சென்று சில நாடகங்களில் நடித்தார். இந்த நிலையில் கிட்டப்பா என்பருடன் இணைந்து சில நாடகங்களில் நடித்த நிலையில் இருவருக்கும் காதல் உண்டாகி திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் விதி வசத்தால் 25 வயதிலேயே அவர் தனது கணவரை இழந்தார். கணவரை இழந்த பின்னர் அவர் வெள்ளை சேலையில் தான் கடைசி வரை இருந்தார். யாருக்கும் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்றும் அவர் நிபந்தனை விதித்தார்.

முதன்முதலாக ’நந்தனார்’ என்ற நாடகத்தை திரைப்படமாக எடுக்க முயற்சித்தபோது கேபி சுந்தராம்பாள் அவர்களை நடிக்க படக்குழுவினர் அணுகினர். ஆனால் அவர் திரைப்படங்களில் முதலில் நடிக்க மாட்டேன் என்று கூறினார். ஒரு கட்டத்தில் அனைவரும் வற்புறுத்த ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் எனது சகோதரி நடிப்பார் என அவரது சகோதரர் கூறினார். உடனே பட குழுவினர் சம்மதம் தெரிவித்து 25 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தனர். 1935 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் பல கோடிக்கு சமம்.

தமிழ் திரை உலகில் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிய முதல் நடிகை என்ற பெருமை கேபி சுந்தராம்பாள் அவர்களுக்கு தான் உண்டு. இருப்பினும் அவர் யாருக்கும் ஜோடியாக நடிக்க மாட்டேன் என கூறியதால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்தார்.

அவர் நடித்தது மொத்தமே 12 படங்கள் மட்டும் தான். நந்தனார், மணிமேகலை, ஔவையார், பூம்புகார், திருவிளையாடல், மகாகவி காளிதாஸ், கந்தன் கருணை, உயிர் மேல் ஆசை, துணைவன், சக்தி லீலை, காரைக்கால் அம்மையார் மற்றும் திருமலை தெய்வம் ஆகிய 12 படங்களில் தான் அவர் நடித்துள்ளார். அவர் நடித்த ’ஞாயிறு திங்கள்’ என்ற திரைப்படம் கடைசி வரை வெளியாகவே இல்லை.

இந்த நிலையில் திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சியில் இருந்த அவர் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து அரசியல் பணியும் செய்தார். காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது அவருக்கு சட்ட மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பத்மஸ்ரீ, சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது என பல்வேறு விருதுகளை பெற்ற கேபி சுந்தராம்பாள், வயது முதிர்வு காரணமாக கடந்த 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தனது 72 வது வயதில் உயிரிழந்தார். 12 படங்களே நடித்திருந்தாலும் அவரது புகழ் ஆண்டாண்டு காலம் நிலைத்து நிற்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...