பல ஹிட் பாடல்களைக் கொடுத்தும் கொண்டாடப்படாத பாடகி.. இதெல்லாம் இவங்க பாடியதா?

இன்று சினிமாவில் ஒரு பாடலைப் பாடி விட்டாலே ஹிட் பாடகர்களின் ரேஞ்சுக்கு அலப்பறைகளையும், பேட்டிகளையும் கொடுத்து பில்டப் கொடுக்கும் பாடகர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் பல ஹிட் பாடல்களைப் பாடிய பின்னணிப் பாடகி தான் சசிரேகா. இந்தப் பெயரை கேள்விப்பட்டதில்லை என்கிறீர்களா? இந்த ஒரு பாடல் போதும் இவரின் திறமையை அறிய.. செந்தூரப் பூவே நீயும் தேன் சிந்த வா.. வா.. மற்றும் ஊமை விழிகள் படத்தில் இடம்பெற்ற ராத்திரி நேரத்துப் பூஜையில் பாடல் தான் அது.

மயக்கும் தன் மாயக் குரலில் பல இளைஞர்களைக் கிறங்கடித்த சசிரேகா 1970-80 களில் தனது இனிமையான குரல் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்தவர். 1973-ம் ஆண்டு சிவக்குமார் நடிப்பில் வெளியான பொண்ணுக்கு தங்க மனசு என்ற படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூரு சீமையிலே என்ற பாடல் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய சசிரேகா, வாணி ஜெயராமுடன் இந்த பாடலை பாடியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வராகங்கள் படத்தில் கேள்வியின் நாயகனே என்ற பாடலை பாடியிருந்தார். அதன்பிறகு சில ஆண்டுகள் பாடல்களுக்கு ஹம்மிங் மட்டும் செய்து வந்த சசிரேகா, அதன்பிறகு1978-ம் ஆண்டு வெளியான லட்சுமி என்ற படத்தில் மேளம் கொட்ட நேரம் வரும் என்ற பாடல் மூலம் ரீ-என்டரி கொடுத்த சசிரேகா இளையராஜா இசையில் முதன் முதலாக பாடினார்.

இந்தப் பாட்டெல்லாம் இவர் பாடியதா என்பது போல அமைந்த ‘வட்டத்துக்குள் சதுரம்’ என்ற படத்தில் இதோ இதோ என் நெஞ்சிலே, ‘கிராமத்து அத்தியாயம்’ படத்தில் பூவே இது பூஜை காலமே, ‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற படத்தில் திறன்பாடியே போற்றிடுவேன், ‘ஒரு ஓடை நதியாகிறது’ படத்தில் தென்றல் வந்து முத்தமிட்டது உள்ளிட்ட பல ஹிட் பாடல்களை கொடுத்து தவிர்க்க முடியாத பாடகியாக உருவெடுத்தார் சசிரேகா.

இந்தியில் செல்லாக் காசான 16 வயதினிலே.. சொல்லச் சொல்ல கேட்காத பாரதிராஜா.. பல வருடத்திற்கு பின் வெளிவந்த உண்மை

இவரது குரல் வளத்தை நன்கு பயன்படுத்திய இளையராஜா சசிரேகாவுக்கு பிரேக் கொடுத்த பாடல் என்றால் அது விழியில் விழுந்து இதயம் நுழைந்து பாடல் தான். அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் அந்த காலத்தில் காதலர்களின் ஃபேவரெட் பாடலாக ஒளித்துக்கொண்டிருந்தது.

டி.ராஜேந்தரின் உறவை காத்த கிளி என்ற படத்தில் இடம்பெற்ற எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி என்ற பாடல் சசிரேகாவுக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. மேலும் டி.ராஜேந்தர் இசையில் அவர் பாடிய அனைத்து பாடல்களுமே ஹிட் பாடலாக அமைந்தது. அதேபோல் ஊமை விழிகள் படத்தில் ராத்திரி நேரத்து பூஜையில், மாமரத்து பூவெடுத்து, கண்மணி நில்லு காரணம் சொல்லு, உழவன் மகன் படத்தில் செம்மரி ஆடே உள்ளிட்ட பாடல்கள் சசிரேகாவின் ஹிட் லிஸ்டில் உள்ளது.

எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா கங்கை அமரன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சசிரேகா, பல இசை கச்சேரிகளையும் நடத்தியுள்ளார். 90-களின் முற்பகுதியில் பிரபலமான பாடகியாக வலம் வந்த சசிரேகா, ஏ,ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான கிழக்கு சீமையிலே படத்திலும் பாடல்கள் பாடியுள்ளார்.

இத்தனை ஹிட் பாடல்கள் கொடுத்தும் தமிழ் சினிமா இவரைக் கொண்டாடத் தவறிவிட்டது என்பது தான் நிதர்சன உண்மை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews