தியாகராஜ பாகவதரால் அறிமுகம் செய்யப்பட்ட குலதெய்வம் ராஜகோபால்.. 200 படங்கள் நடித்து சாதனை..!

தமிழ் திரை உலகில் காமெடி மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்களில் ஒருவர் குலதெய்வம் ராஜகோபால். குலதெய்வம் என்ற திரைப்படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவர் குலதெய்வம் ராஜகோபால் என்று அழைக்கப்பட்டார்.

குலதெய்வம் ராஜகோபால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே அவருக்கு தெருக்கூத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 12 வயதில் அவர் திருச்சி சென்று பாய்ஸ் தியேட்டர் என்ற நாடக கம்பெனியில் இணைந்தார். அதன் பிறகு அவர் மதுரைக்கு16 வயதில் சென்று கலைமணி தியேட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார்.  அந்த நேரத்தில் தான் அவர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணரை சந்தித்தார். அவரது நாடக கம்பெனியில் இணைந்து நீண்ட வருடங்கள் அவருடன் கலைவாழ்வில் பயணம் செய்து அவருக்கு நெருக்கமானவராக இருந்தார்.

7500 நாடகங்கள்.. பல திரைப்படங்கள்.. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் கலையுலக பயணம்..!

குலதெய்வம் ராஜகோபால்  புது வாழ்வு என்ற திரைப்படத்தில் தான் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை அன்றைய சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர் தான் தயாரித்து இயக்கினார். ஆனால் அந்த படம் வெளியாவதில் சில காரணங்களால் தாமதமானது. இதனை அடுத்து அவர்  நல்ல காலம் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் தான் அவரது நடிப்பில் வெளியான முதல் திரைப்படம். இந்த படத்தின் நாயகனாக எம்கே ராதா நடித்திருப்பார்.

இதனை அடுத்து அவர் காவேரி, கோமதியின் காதலன் போன்ற படங்களில் நடித்த நிலையில் தான் குலதெய்வம் திரைப்படம் அவருக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்தது. எஸ்எஸ் ராஜேந்திரன் நாயகனாக நடித்த இந்த திரைப்படத்தில் ராஜகோபால் நாயகனுக்கு இணையான கேரக்டரில் நடித்திருந்தார். அவரது கேரக்டர் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து அவர் எம்ஜிஆர் நடித்த மதுரை வீரன்,  சிவாஜி நடித்த ராஜா ராணி, ரங்கூன் ராதா ஆகிய படங்களில் நடித்தார். இதையடுத்து தான் அவரது  எட்டாவது படமாக முதல் படத்தில் கமிட்டான புது வாழ்வு ரிலீசானது. அதன்பிறகு சிவாஜி எம்ஜிஆர் ஆகிய இருவரது படங்களிலும் மாறி மாறி நடித்தார்.

1500 திரைப்படங்கள்.. 14 மொழிகள்.. நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் திரையுலக சாதனை..!

குறிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற திரைப்படத்தில் அவர் கரியப்பன் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். வீராவேசத்துடன் அவர் பேசும் வசனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் ரத்தனம் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அதேபோல்  மன்னாதி மன்னன், சபாஷ் மாப்பிள்ளை, திருடாதே, தாய் சொல்லை தட்டாதே, கப்பலோட்டிய தமிழன்,  கருப்பு பணம், சித்தி, தாயே உனக்காக என 60களிலும் 70களிலும் பல படங்களில் நடித்தார்.

மேலும் அவர் அருணோதயம், எங்கிருந்தோ வந்தாள், நத்தையில் முத்து. பயணம் போன்ற படங்களில் நடித்தார். 80களில் அவர் கரையெல்லாம் செண்பகப்பூ என்ற படத்தில் வில்லுப்பாட்டு பாடகராக நடித்து அசத்தியிருப்பார்.  இதன் பிறகு அவர் பாக்யராஜின் சில படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்தார். குறிப்பாக எங்க சின்ன ராசா என்ற திரைப்படத்தில்  பாக்யராஜின் உறவினராக  நடித்திருப்பார்.

குலதெய்வம் ராஜகோபால் உயிரோடு இருக்கும்போது நடித்த கடைசி திரைப்படம் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான வில்லுப்பாட்டுக்காரன். இதனை அடுத்து அவரது மறைவுக்குப் பின்னர் மாமியார் வீடு, நான் பேச நினைப்பதெல்லாம், பாட்டு வாத்தியார் போன்ற  திரைப்படங்கள் வெளியாகின.

நடந்து வந்தாலே நகைச்சுவை.. நடிகர் உசிலைமணியின் திரைப்பயணம்..!!

தன்னை கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் சீடர் என கடைசி வரை அழைத்துக் கொண்டிருந்த குலதெய்வம் ராஜகோபால் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவர் மறைந்தாலும் அவரது நடிப்பு தமிழ் சினிமா உள்ளவரை இருக்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews