7500 நாடகங்கள்.. பல திரைப்படங்கள்.. நடிகர் காத்தாடி ராமமூர்த்தியின் கலையுலக பயணம்..!

அந்த காலத்தில் எல்லாம் ஹீரோ நடிகர்கள், வில்லன் நடிகர்கள், காமெடி நடிகர்கள் என எல்லோருமே நாடகத்திலிருந்து வந்தவர்கள். நாடகத்தில் உள்ள அனுபவத்தின் காரணமாகவே அவர்கள் மிகச் சிறப்பாக திரையுலகிலும் நடித்தார்கள் என்பதும் தெரிந்ததே.

அந்த அளவுக்கு நாடகம் என்பது திரைப்படத்தின் அடிப்படையாக இருந்தது. திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தாலும் நாடகத்தை மறக்காமல் எம்ஜிஆர் சிவாஜி உள்பட பலர் வெகு நாட்கள் நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வகையில் நாடக நடிகராகி, அதன் பிறகு திரைப்பட நடிகர் ஆகி அதன் பிறகு தொலைக்காட்சியில் தொடர்களிலும் நடித்தவர்தான் நடிகர் காத்தாடி ராமமூர்த்தி. காத்தாடி ராமமூர்த்தி சென்னையில் வளர்ந்தாலும் அவருடைய சொந்த ஊர் கும்பகோணம். கடந்த 1938 ஆம் ஆண்டு பிறந்த இவர் கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்தார். சென்னை விவேகானந்தா கல்லூரியில் படிக்கும்போதே அவருக்கு நாடகத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

அவர் கல்லூரியில் மட்டுமின்றி பிற இடங்களிலும் நாடகத்தில் நடித்தார். இவர் நாடக உலகில் உள்ள மிகப்பெரிய ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்துள்ளார் குறிப்பாக சோ ராமசாமி, விசு, டெல்லி கணேஷ், கிரேசி மோகன் ஆகியோர்களின் நாடகங்களில் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ளார்.

சோ ராமசாமி நடத்திய ஒரு நாடகத்தில் பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும் காத்தாடி என்ற கேரக்டரில் ராமமூர்த்தி நடித்தார். அந்த கேரக்டரின் பெயரே பின்னாளில் அவருடைய பெயரிலும் ஒட்டிகொண்டு காத்தாடி ராமமூர்த்தி என்றே அழைக்கபப்ட்டார்.

இந்த நிலையில் கடந்த 1967 ஆம் ஆண்டு பெண்ணே நீ வாழ்க என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்பட நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை அடுத்து அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான எதிர்நீச்சல், மாதவன் இயக்கத்தில் உருவான கண்ணே பாப்பா, சிவாஜி கணேசன் நடித்த இராமன் எத்தனை ராமனடி, எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவான சூரியகாந்தி என பல திரைப்படங்களில் நடித்தார்.

அவரது காமெடி அனைத்துமே விரசம் இல்லாமல் இரட்டை அர்த்தமில்லாமல் வாய்விட்டு சிரிக்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் அவரது காமெடியை மக்கள் ரசித்தனர். சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான எல்ஜிஎம் என்ற திரைப்படத்தில் கூட காத்தாடி ராமமூர்த்தி இவானாவின் தாத்தாவாக நடித்திருப்பார்.

திரைப்படங்களில் மட்டுமின்றி அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். குறிப்பாக தூர்தர்ஷனில் வெளியான துப்பறியும் சாம்பு என்ற தொடர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சன் டிவியில் ஒளிபரப்பான ஆளுகிறான் கண்ணன், இளவரசி, திருப்பாவை, பந்தம் போன்ற பல சீரியல்களிலும் விஜய் டிவியில் வெளியான ஆஹா உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தற்போது 85 வயது ஆகி உள்ள நிலையிலும் தனது வயதுக்கேற்ற கேரக்டரை ஏற்று அதிலும் காமெடியை எப்படி வித்தியாசமாக ரசிகர்களுக்கு கொடுக்கலாம் என்பதை அவர் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இன்னும் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி சீரியலில் அவர் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆவலாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...