இன்று அற்புதமான ஆடிப்பூர திருநாள். இந்த நாளுக்காக எத்தனையோ பெண்கள் காத்துக்கிட்டு இருப்பாங்க. நமக்கு வளையல் வரும் என்று. அது மட்டுமா, குழந்தை இல்லாதவங்களுக்கு குழந்தைப்பேறு, கல்யாணமாகலயா? நல்ல வரன்னு கிடைக்கும் அதிசய நாள். விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். எப்படி வழிபடுவதுன்னு பாருங்க…
முதலில் அம்பிகையின் திருவுருவப்படத்தை எடுத்துக்கோங்க. அதை ஒரு மனப்பலகையில் சிகப்புத் துணி விரித்து வைத்து அதன் மேல் அம்பாளின் திருவுருவப்படம் வைத்து மலர் அலங்காரம் பண்ணுங்க. மஞ்சள், குங்குமம், சந்தனம் தெளிங்க. அம்பிகையின் முகத்தில் சந்தனம் வைங்க.
சந்தனம், குங்குமம் பொட்டு வைங்க. கல்யாணப் பொண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்வோமோ அப்படி அலங்காரம் பண்ணுங்க. பன்னீர் தெளிங்க. மஞ்சள் அட்சதை தெளிங்க. அம்பாளுக்கு வளையலை மாலையாகப் போடலாம். படங்களில் மாட்ட முடியலன்னா பாதத்துல வைங்க.
பால் பாயாசம், பருப்பு பாயாசம்,சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமா வைங்க. அபிராமி அந்தாதியைப் பாராயணமா சொல்லுங்க. தீப, தூப ஆராதனை எல்லாம் காட்டிட்டு திருஷ்டி கழிங்க.
அப்புறம் அந்த திருவுருவப்படத்தை பூஜை அறையில் வைங்க. இப்போ அதே இடத்தில் கல்யாணமாகாத பெண், பையனை உட்கார வைங்க. கல்யாணமாகி குழந்தைக்காகக் காத்துக்கிட்டு இருக்கும் பெண்ணை உட்கார வைங்க. அம்பாளுக்கு எப்படி அலங்காரம் செய்தோமோ அதே போல செய்யுங்க.
கல்யாணம் பண்ணாத பசங்களுக்கு வளையல் மட்டும் தான் போடக்கூடாது. மற்ற சடங்குகளைச் செய்யலாம். வீட்டுல இருக்குற பெரியவங்க செய்யலாம். மனைவிக்குக் கணவனே இதைச் செய்யலாம். உன் இடத்துல நான் இருக்குறேன். எனக்கு அம்மாவாகக்கூடிய பாக்கியத்தைக் கொடுன்னு மனசார பிரார்த்தனை பண்ணுங்க. சுவாமி அருகில் நீ இருப்பதைப் போல எனக்கு ஒரு நல்ல கணவனைக் கொடுன்னு கல்யாணமாகாதவங்க மனமுருகி பிரார்த்தனை பண்ணுங்க.
இது அவ்வளவு சக்தி வாய்ந்த ஒரு வழிபாடு. இதைச் செய்து பாருங்க. அடுத்த வருஷம் உங்க கையில நிச்சயம் ஒரு குழந்தை இருக்கும். கல்யாணமாகாதவங்களுக்கு நல்ல வரன் கிட்டும். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேசமங்கையர்க்கரசி தெரிவித்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



