பக்தர்களே…. சூரசம்ஹாரம் செய்ய வரும் முருகனுக்கு மலர்ந்த முகம் இருப்பது ஏன்னு தெரியுமா?

கந்த சஷ்டி விரதத்தின் 5 ம் நாள் (17.11.2023) முருகப்பெருமானின் 5 முகத் தத்துவத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இந்தத் தருணத்தில் விரதம் இருப்பவர்களின் உடல் காற்று போல இருக்கும். விரதம் ஆரம்பிக்கும்போது 2வது 3வது நாளில் சோர்வு ஏற்படும். 4வது நாளில் இருந்து ஒரு அபரிமிதமான சக்தி உண்டாகும். பசி சுத்தமாக மறந்துவிடும். அதன்பிறகு அந்தப் பசியை எப்படி சமாளித்து எப்படி இயக்கிக் கொள்வது என்ற தத்துவத்தையும் நம் உடல் அறிய ஆரம்பித்து இருக்கும்.

அதனால இந்த 5வது நாள் ரொம்ப சுறுசுறுப்பாக காற்று மாதிரி உணர ஆரம்பித்து விடும் நம் உடல். விரதம் இருப்பவர்கள் இத்தகைய உணர்வை பெற்று இருப்பார்கள்.

சற்கோண தீபத்தைத் தினமும் ஏற்ற வேண்டும். முருகனின் நாபத்தை சொல்வது என இவை அனைத்தையும் தினமும் செய்து வர வேண்டும். 5வது நாளில் அருணகிரி நாதர் திருப்புகழில் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்று… இப்படித் தான் சொல்கிறார்.

Thiruthanigai
Thiruthanigai

சூரனை வதைப்பதற்காக ஒரு முகம். சூரனை வதைப்பதற்கு என்றால் கோபமாக அல்லவா இருக்க வேண்டும்? ஆனால் முருகனுக்கு ஆறு முகமும் சிரித்துக் கொண்டே அல்லவா இருக்கிறது? முருகன் சாந்தமாகத் தான் இருக்கிறார். போருக்கு வரும்போது கூட அவர் எப்படி இருக்கிறார் என்றால், முண்டகம் மலர்ந்ததென்ன மூவிரு முகமும் என கச்சியப்ப சிவாச்சாரியார் கந்தபுராணத்தில் எழுதுகிறார்.

முருகப்பெருமான் யுத்தகளத்திற்கு வருகிறார். சண்டைபோடும் இடத்தில் அவரது முகம் தாமரைப் பூ போல மலர்ந்து இருக்கிறதாம். அதுவும் ஆறு முகமும் மலர்ந்து சிரித்தாற்போல உள்ளது. இங்கு அருணகிரிநாதரும் முருகப்பெருமான் சிரித்துக்கொண்டே சம்ஹாரத்திற்கு வருவதாக சொல்கிறார்.

பகைவனைக்கூட சிரித்தபடியே தன்வயமாக்குவதற்குத் தான் வந்தாரே தவிர, அழிப்பதற்காக வரவில்லை. அழிப்பதற்கு வந்து இருந்தால் அவருக்குக் கோபம் வந்து இருக்கும்.

சூரபத்மனை ஆட்கொள்ளத்தான் வருகிறார். அவர் அவனுடன் நடத்திய போரில் வெற்றி கொண்டு தன்னோடு வைத்துக்கொண்டார். சம்ஹாரம் என்பதற்கு என்ன பொருள் என்று பார்ப்போம். சம் என்றால் நல்ல. ஹாரம் என்றால் ஒடுக்குதல். அதாவது நன்றாகக் குணங்களை ஒடுக்குதல் என்று பொருள். ஒரு மனிதனுக்கு ஆணவம், கன்மம், மாயை போன்ற குணங்கள் தலைவிரித்தாடுகிறது.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணத்தின் உச்சத்தில் இருக்கிறோம். இந்த 3 குணங்களும் வெவ்வேறு திசையில் சிதறிப்போயி தலைவிரித்தாடுகிற அந்த குணங்களின் வெளிப்பாடாகத் தான் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசூரன் என்கிற 3 அசுரர்களையும் கந்த புராணத்தில் நாம் பார்க்கிறோம்.

இங்கு சூரன் ஆணவத்தின் வெளிப்பாடாகக் காட்டப்படுகிறான். முருகப்பெருமான் இந்த மும்மலங்களையும் ஒடுக்குகிறார். தாரகாசூரனை வேலாயுதத்தாலும், சிங்கமுகனை குளிசாயுதத்தாலும், சூரபத்மனுக்கு வேலாயுதத்தாலும் பாடம் புகட்டுகிறார்.

பாடம் நடத்தும்போது சந்தோஷமாக சிரித்த முகத்துடன் இருந்தால் தான் கேட்பவரும் நன்றாகக் கேட்பார். பாடமும் ஒழுங்காக அவருக்குப் போய்ச்சேரும். சூரபத்மனிடம் உள்ள ஆணவத்தை எப்படி அழித்தாரோ அதே போல தான் நம் மனதில் உள்ள ஆணவத்தை எல்லாம் விரதம் இருந்து அழிக்கிறோம். நம்மை நாமே யார் எனவும், நம்மிடம் என்ன கெட்ட குணங்கள் இருக்கிறது?

எந்த நல்ல விஷயத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் இந்த விரதத்தை இருந்து கடைபிடிக்க வேண்டும். திருத்தணிகை 5வது படை வீடு. இங்கு முருகப்பெருமான் கோபமே இல்லாமல் இருக்கிறார். இங்கு சூரசம்ஹாரமே கிடையாது. அந்த நேரத்தில் சுவாமியைக் குளிர்விக்க புஷ்பாஞ்சலி நடத்துவர். முருகப்பெருமான் இங்கு வள்ளியை மணம்புரிந்து அமர்ந்த மலை.

இந்த 5வது முகத்திற்குப் பேரருள் உடைமை என்ற தத்துவம் சொல்லப்பட்டுள்ளது. பகைவனுக்கும் அருள் காட்டும் குணம் தான் பேரருள். அதனால் தான் முருகப்பெருமானால் 5 தொழில்களையும் அவரால் செய்ய முடிகிறது. சிருஷ்டி, திதி, சம்ஹாரம், துரோபவம், அனுக்கிரகம் என்ற அந்த 5 தொழில்களையும் செய்கிறார் முருகப்பெருமான்.

ஒரு அருள்நிறைந்தவனால் தான் படைப்பு தொழிலைப் பாரபட்சமின்றி செய்ய முடியும். அவர் பிரம்மனை சிறையில் அடைத்த காலத்தில் இந்த 5 தொழில்களையும் மேற்கொண்டார். ஓதிமலை என்ற திருத்தலத்தில் தான் முருகப்பெருமான் 5 முகங்களோடு எழுந்தருளியிருக்கிறார். சத்தியமங்கலத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஓதி மலை உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...