சனிப்பிரதோஷம் வழிபாட்டின் நன்மைகள் என்னவென்று தெரியுமா…?

பிரதோஷம் என்பதற்கு ‘பாவங்களை போக்கும் வேளை’ என்று பொருள். பாற்கடலை கடைந்த போது தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். அதற்கு நன்றி சொல்ல சென்ற தேவர்கள் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமானின் மூச்சுக் காற்று பட்டு மயக்கம் அடைந்தனர். தேவர்களை காப்பாற்றுவதற்காக நந்தி தேவர் அந்த நச்சுக் காற்றை உள்வாங்கிக் கொண்டு தூய காற்றை வெளியிட்டார். அந்த நந்தி தேவரை பிரதானமாக வைத்து வழிபடும் நேரம் தான் பிரதோஷம்.

வளர்பிறை, தேய்பிறை ஆகிய திரயோதசி திதிகளில் அனைத்து சிவாலயங்களிலும் நந்தி பகவானுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை உள்ள நேரமே பிரதோஷ நேரமாகும். இந்த நேரத்தில் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடுவது அனைத்து தோஷங்களையும் போக்கி, நம் பாவங்களை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தரும்.

குறிப்பாக சனிப்பிரதோஷம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷத்தை சிவபெருமான் ஏற்றுக்கொண்டதும் அதற்குப் பின்பு ஆனந்த தாண்டவம் ஆடியதும் ஒரு சனிக்கிழமை திரயோதசி திதி தினமாகும். அதனால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கு மஹாபிரதோஷம் என்ற பெயரும் உண்டு.

இந்த சனி பிரதோஷ நாளில் அனைத்து தெய்வங்களும் சிவன் சன்னதியில் சிவபெருமானை வழிபட எழுந்தருளியிருப்பார்கள் எனவும் அந்த நாளில் நாம் சிவாலயங்களுக்குச் சென்று வைக்கும் கோரிக்கைகளை அந்த தெய்வங்கள் உடனே ஆசிர்வதிக்கும் என்பது ஐதீகம். சனிப்பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால் ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ வழிபாடு செய்த பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

வாழ்வில் துன்பங்களில் இருந்து விடுபட, வீட்டில் சுபிட்சம் உண்டாக, முன்ஜென்ம பாவங்களில் இருந்து விடுபட சனிப்பிரதோஷ நாளில் விரதம் இருந்து சிவாலயம் சென்று நெய் விளக்கேற்றி நந்திபகவானுக்கும் சிவபெருமானுக்கும் வில்வ மாலை சாற்றி வழிபாடு செய்துவிட்டு அன்றைய தினம் உப்பு, காரம், புளிப்பு இல்லாத உணவை உண்டு விரதத்தை முடித்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews