சிவன் கோவில்களில் லிங்கம் காட்சியளிப்பதன் தத்துவம்…! பஞ்சலிங்கத்தின் விசேஷம் என்னன்னு தெரியுமா?

லிங்கம் என்பது சிவனின் அருவுருவ நிலை. கோவில்களில் போய் பார்த்தால் அங்கு சிவனுக்கு அருவுருவமாக லிங்கம் தான் காட்சி தரும். இதன் ரகசியம் என்ன என்று பார்க்கலாம்.

பிரபஞ்சத்தின் அடிப்படையாக இருப்பது பஞ்ச பூதங்கள். இவை அசையும் சக்தி அசையா சக்தி என்கிற இரண்டு சக்தி மயங்களிலிருந்து உருவானவை.

Lingam
Lingam

இந்த 2 சக்தி மயங்களே ஆண், பெண் என்கிற இரண்டு பாலாகி உலகத்தின் அனைத்து இயக்கத்திற்கும் அடிப்படையாக இருக்கின்றன. ஆண் மற்றும் பெண்ணின் குறியீடுகளான பிராகிருதி மற்றும் புருஷ் ஆகிய இரண்டின் கூட்டாக அமைந்திருப்பது தான் சிவனின் லிங்க வடிவம்.

லிங்கம் எனும் சொல் சிவனின் அருவுருவ நிலையைக் குறிக்கிறது. லிம் என்பது உயிர்களின் தோற்றத்தைக் குறிக்கும். கம் என்பது அவற்றின் ஒடுக்கத்தைக் குறிக்கும். உயிர்கள் தோன்றுவதற்கும், ஒடுங்குவதற்கும் உரிய இடமாக சிவன் உள்ளதால் லிங்க உருவம் சிவலிங்கம் என்ற பெயர் பெற்றது.

பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்ற 5 மூர்த்திகளையும் தனது பகுதிகளாகக் கொண்டது சிவலிங்கம். இதில் 3 பகுதிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அதன் அடிப்பகுதி படைக்கும் பிரம்மாவைக் குறிக்கிறது.

மத்தியப் பகுதி காக்கும் விஷ்ணுவைக் குறிக்கிறது. மேல் பகுதி அழிக்கும் உருத்திரனைக் குறிக்கிறது. மறைத்தல் தொழிலை செய்யும் மகேஸ்வரனும் அருளும் தொழிலை செய்யும் சதாசிவனும் மீதி மூன்று தொழில்களோடு மறைமுகமாக கலந்திருக்கின்றனர்.

Siva
Siva

உருவமில்லாத சதாசிவ மூர்த்தியாகிய சிவம் தமது தோற்றமாக பஞ்ச பூதங்களைப் படைத்து அதை முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்கிற 5 முகங்களாகவும், அந்த முகங்களை 5 லிங்கங்களாகவும் தோற்றுவித்தார். இவையே பஞ்சபூத லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் நிலமாகவும், திருச்சி ஜம்புகேஸ்வரர் நீராகவும், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் நெருப்பாகவும், காளஹஸ்தி காளகத்தீஸ்வரர் காற்றாகவும், சிதம்பரம் நடராஜர் ஆகாயமாகவும் உள்ளனர்.

அனைத்து லிங்கங்களையும் மொத்தம் 8 வகைகளாக பிரிக்கலாம். அவற்றைப் பற்றிப் பார்ப்போம். சுயம்பு லிங்கம் என்பது தானாகவேத் தோன்றிய லிங்கம். தேவி லிங்கம் என்பது தேவி சக்தியால் வழிபடப்பட்ட லிங்கம். காண லிங்கம் என்பது சிவ மைந்தர்களான விநாயகர், முருகர் இவர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

தெய்வீக லிங்கம் என்பது தேவர்களால் வழிபடப்பட்ட லிங்கம். ஆரிட லிங்கம் என்பது அகத்தியர் போன்ற முனிவர்களால் வழிபடப்பட்ட லிங்கம். ராட்சத லிங்கம் என்பது ராட்சதர்களால் வழிபடப்பட்ட லிங்கம். அசுர லிங்கம் என்பது அசுரர்களால் வழிபடப்பட்ட லிங்கம்.

மானுட லிங்கம் என்பது மனிதர்களால் செதுக்கப்பட்டு வழிபடப்பட்ட லிங்கம். இந்த எட்டு வகை லிங்கங்களிலும் மொத்தமாகப் பார்க்கப்போனால், 1008 லிங்கங்கள் உள்ளன. அகர லிங்கம் முதல் சுபலிங்கம் வரை மொத்தம் 1008 லிங்கங்கள் உள்ளன.

Panchalingam
Panchalingam

பஞ்சலிங்கம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் உள்ளது. மலைக்குள் தான் முருகப்பெருமான் இருக்கிறார். அவருக்குப் பின்னால் தான் பஞ்சலிங்கங்கள் உள்ளன. சூரபத்மனை வதம் செய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்க முருகப்பெருமான் லிங்கத்திங்கு பூஜை செய்தார். அவை தான் பஞ்சலிங்கங்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews