சிவாஜி ஒரு திரைப்படங்களில் கூட முழு பாடல் பாடாததற்கு இப்படி ஒரு காரணமா?

பொதுவாக அந்த கால சினிமாவில் இருந்து இப்போதைய திரைப்படங்கள் வரை ஹீரோக்கள் தங்களது திரைப்படங்களில் பாடல்கள் பாடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர். எம்ஜிஆர் தொடங்கி கமல், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என தற்பொழுது சினிமாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து ஹீரோக்களும் தங்களது திரைப்படங்களில் பாடல் பாடுவது ஒரு சிறப்பம்சமாகும் .

அந்த வகையில் நடிப்பிலும் வசனத்திலும் பட்டையை கிளப்பிய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரின் படங்களில் ஒரு முழு பாடல் கூட பாடாமல் இருந்துள்ளார். ஆனால் அதற்கு பதிலாக படங்களில் சில வரிகளை சொந்த குரலில் பாடியுள்ளார். அவர் முழு பாடலும் பாடாததற்கு என்ன காரணம் என்பது பற்றியான தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக சிவாஜி பாடல் அதிகமாக பாடவில்லை என்றாலும் சங்கீத விஷயங்களை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார். மேலும் பாட்டு பாடுவதில் நல்ல ராக ஆலாபனைகளையும் அவர் கற்று வைத்திருந்தார். பாடுவதில் கூட திறமை மிக்கவராக இருந்தார். ஆனால் ஏன் முழு பாடல்களை படங்களில் பாடவில்லை என்பதற்கான காரணத்தையும் அவரே சொல்லி இருக்கிறார்.

நடிப்பது என் தொழில் பாடுவது வேறு ஒருவரின் தொழில். பாடகரின் தொழிலில் நான் ஏன் தலையிட வேண்டும். அவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அல்லவா. மேலும் நான் விடாமல் ஓய்வில்லாமல் படங்களின் நடித்துக் கொண்டிருப்பதால் பாடுவதற்கான நேரம் கிடைப்பது கடினம். இந்த காரணங்களால்தான் பாடல் பாட முடியவில்லை என்று நடிகர் திலகம் சொல்லியிருந்தாலும், பல படங்களில் நடிகர் திலகம் இரண்டு வரி, மூன்று வரி பாடுவதாக காட்சிகள் இருக்கும். அந்த காட்சிகளை நாம் பார்த்தோமானால் அவருடைய சங்கீத புலமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

முழு பாடலையும் பாடவில்லை என்றாலும் பல படங்களில் நடிகர் திலகம் சொந்தக் குரலில் பாடிய இரண்டு வரி, மூன்று வரி பாடல்கள் மற்றும் ராக ஆலாபனைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தீர்த்தனைகளை, ராக ஆலாபனைகளையும் அழகாக பாடுவார் சிவாஜி. இசை வித்துவான்களைப் போல வார்த்தைகளை இழுத்து நீட்டி ராகமாக பாடும் திறமை சிவாஜிக்கு உண்டு.

விகே ராமசாமி ஹீரோவாக நடித்த படம்.. எம்ஜிஆர்-சிவாஜி படங்களுக்கு இணையாக வசூல்..!

அந்த வகையில் அறிவாளி படத்தில் பானுமதியை கிண்டல் செய்யும் போது ஒரு பாடல் காட்சியை சிவாஜி அவர்கள் பாடியிருப்பார். தெலுங்கில் பாடிய அந்த பாடலின் இறுதியில் முடியும் லேது என்னும் வார்த்தையை சுதி சேர்த்து நீட்டி முழக்கி பாடி இருப்பார். பாடகர்களுக்கு இணையாக அருமையாக பாடி இருப்பார்.

அடுத்ததாக 1970-ம் ஆண்டு வெளிவந்த ராமன் எத்தனை ராமனடி என்ற படத்தில் காத்தாடி ராமமூர்த்தி அவர்கள் சிவாஜி இடம் ஒரு வசனத்தை பேசி காட்ட செல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதில் சிவாஜி கட்டபொம்மன் படத்தில் வரும் போகாதே போகாதே என் கனவா என்ற பாடலை பாடி காட்டுவார்.

இப்படி எடுத்துகாட்டாக பல படங்களை கூறலாம். சிறுவயதிலிருந்தே நாடகக்கலை பயின்று வந்ததால் நடிகர் சிவாஜிக்கு அங்கு எல்லா கலைகளையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் ராகங்களை பற்றி தெரிந்து கொள்ளவும், பாடும் முறைகளை பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்ன இருந்தாலும் பாடுவதற்கு ஒருவருக்கு குரல் வளம் அமைந்திருக்க வேண்டும். அதுதான் சிவாஜிக்கு இயற்கையாகவே அமைந்த ஒரு சிறப்பம்சம். ஓய்வில்லா படப்பிடிப்புகளும், ஒரு பாடகருக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் அவர் முழு பாடல்களை பாடவில்லை. மற்றபடி சிறப்பாக பாடும் திறமை பெற்றவர் சிவாஜி.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews