பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டிற்கு வந்த முதல் நடிகை.. ஒரு வருஷம் தமிழ் கற்று சொந்த குரலில் பேசி அசத்திய பின்னணி..

தமிழ் சினிமாவில் நடித்து பெரும் புகழை ஈட்டிய நடிகைகளில் அதிகமானோர் மற்ற மொழியில் இருந்து இங்கே நடிக்க வந்தவர்கள் தான். கேரள மாநிலத்தில் இருந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அசின், அமலாபால் என பலரும் வந்துள்ளனர். இதே போல அனுஷ்கா ஷெட்டி, சிம்ரன், ஜோதிகா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரும் கூட பிற மொழிகளில் இருந்து தமிழ் சினிமாவில் நடித்து பிரபலம் ஆனவர்கள் தான்.

அப்படி இருக்கையில், இவர்கள் நடிக்கும் படத்திலும் சொந்த குரல் பேசாமல் இருக்கும் சூழலில் பெரும்பாலும் டப்பிங் கலைஞர்கள் தான் குரல் கொடுக்கிறார்கள். இந்த காலத்தில் பல நடிகைகளும் இப்படி ஒரு பாணியை பின்பற்றும் நிலையில் அரிதாக ஒரு சில நடிகைகள் தான் சொந்த குரலில் பேசி நடிக்கின்றனர். ஆனால், சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே பாலிவுட் சினிமாவில் இருந்து வந்து தமிழில் நடித்து சொந்த குரல் பேசி நடித்த நடிகை பற்றி தற்போது காணலாம்.

இந்தி சினிமாவில் முதன் முதலில் வெள்ளி விழா கொண்டாடிய திரைப்படமான அமர் ஜோதியில் நாயகியாக நடித்திருந்தார் சாந்தா ஆப்தே. ஷியாம் சுந்தர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சாந்தா, சிறு வயதிலேயே இசை கற்றிருந்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவும் இருந்த சாந்தா ஆப்தே, ஹிந்தி மற்றும் மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார். இவரை தமிழில் சாவித்திரி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்து வைத்தார் இயக்குனர் YV ராவ். இவர் பிரபல நடிகை லட்சுமியின் தந்தை ஆவார்.

தனது முதல் மற்றும் கடைசி திரைப்படத்திற்காக சுமார் ஒரு வருடம் ஒதுக்கி தமிழ் கற்றுக் கொண்ட சாந்தா ஆப்தே, தனது சொந்த குரலில் பேசியும், பாடியும் நடித்திருந்தார். ஹிந்தி மற்றும் மராத்தி மொழி படங்களில் இன்று பலருக்கும் முன்னோடியாக இருக்கும் சாந்தா ஆப்தே, ஒரே ஒரு பிறமொழி படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார். அதுவும் அவர் தமிழில் நடித்த சாவித்திரி திரைப்படம் மட்டும் தான்.

48 வயதிலேயே காலமான நடிகை சாந்தா ஆப்தே, சுமார் 26 ஆண்டுகள் ஹிந்தி மற்றும் மராத்தி படங்களில் தனது நடிப்பு மற்றும் பாடல்களால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். மேலும் சாந்தா ஆப்தே இறந்து சுமார் 10 ஆண்டுகள் கழித்து நயனா ஆப்தே (நடிகை) தனது தாயார் தான் சாந்தா ஆப்தே என கூறி இருந்தார்.

சாந்தா ஆப்தே திருமணமே செய்து கொள்ளாத நிலையில், இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட திருமணமே செய்யாமல் பெண் குழந்தையை அவர் பெற்றெடுத்திருந்ததும் பின்னர் தெரிய வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews