சீதையும், ராமனும் செய்த தவறு


அசோகவனத்தில் சீதையின் அவலநிலை கண்ட அனுமன், “தாயே! தங்களை கொடுமைப்படுத்தும் அரக்கியரை அழிக்க என் கைகள் துடிக்கின்றன. தயவுசெய்து தாங்கள் இதற்கு உத்தரவு கொடுங்கள்..! என்றார்.

ஆனால் சீதையோ சற்றும் சினமின்றி அனுமா! உன் கோபம் அர்த்தமில்லாதது. இராவணன் இட்ட கட்டளையை நிறைவேற்றுவது அரக்கியர்களின் கடமை. இவர்களை தண்டிப்பது முறையாகாது ,” என்று கூறினாள் சீதை. ” தாயே… எப்படி இருந்தாலும் இவர்கள் செய்தது தவறு தானே!? அதற்காக அவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டாமா?! என வாதிட்டார் அனுமன்.


” ராமதூதா! நீ சொல்வதுபோல், தவறு செய்தவர்களை தண்டிப்பதானால் உன்னையும், என்னையும், ஏன் அந்த ராமனைகூட தண்டிக்க வேண்டும்? என சீதை சொன்னாள்.

தாயே! நான் என்ன தவறிழைத்தேன் என அனுமன் கேட்டான்.
“வாயு குமாரா! அரசன் இட்ட பணியைச் செய்வது அரக்கர்களின் கடமை. அதனைச் செய்த அரக்கியரை தண்டிக்க நினைத்தது 
நீ செய்த குற்றம் அல்லவா!” 
“தாயே.. மன்னியுங்கள்! எனது குற்றத்தை விடுங்கள்.
தாங்கள் என்ன சொல்கிறீர்கள்? ராமசந்திரமூர்த்தி தவறு இழைத்திருக்கிறாரா?! என்ன சொல்கிறீர்கள்? என அனுமன் ஆச்சர்யப்பட்டான்.

ராவணன் என்னும் கொடிய அரக்கனிடம் பதிவிரதையான தன் மனைவி சிக்கியிருக்கிறாள். அவளுக்கும், அவள் கற்புக்கும் பங்கம் ஏற்படுமென தெரிந்தும், காலம் தாழ்த்தாமல் ஓடிவந்து காப்பாற்றாமல் தன்னுடைய ஆட்களை அனுப்பி தேடிக்கொண்டு காலம் கடத்திக்கொண்டிருக்கிறாரே! இது அவர் செய்த குற்றமல்லவா?! என சீதை பதிலளித்தாள்.


இதைக்கேட்டு அனுமன் திகைத்து நின்று, சரி எங்கள் இருவரையும் விடுங்க. பதிவிரதையான தாங்கள் என்ன குற்றம் இழைத்திருக்கமுடியுமென அனுமன் கேட்டான். வாயுபுத்திரா! எந்த பெண்ணும் தன் கணவரைப்பற்றி அடுத்தவரிடம் குறைக்கூறக்கூடாது. ஆனால், தற்போது உனது வற்புறுத்தலுக்கு இணங்க, ராமரைப் பற்றி உன்னிடம் நான் குறை சொல்கிறேன் அல்லவா?! இதுதான் நான் செய்த தவறு என சீதை அனுமனிடம் கூறினாள்.

தவறு செய்யாதவர்களே இவ்வுலகில் இல்லை. தவறு செய்வது மனித இயல்பு. அதை உணர்ந்து, மனம் வருந்தி அதை திருத்திக்கொள்வதே சிறந்த மனிதனின் அடையாளம் என்பதை உணர்ந்து அனுமன் சினம் தணிந்து அரக்கியரை துன்புறுத்தாமல் சீதையை வணங்கி விடைபெற்றான்.

Published by
Staff

Recent Posts