சீனியர் வீரர்னா இப்டி பண்ணலாமா.. பஞ்சாப் போட்டியில் தோனி செஞ்ச பெரிய தப்பு.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..

சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் அணிகள் சமீபத்தில் மோதி இருந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றதுடன் மட்டும் இல்லாமல் பிளே ஆப் முன்னேற துடிக்கும் பல அணிகளுக்கும் கடும் குடைச்சலையும் கொடுத்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசியில் ஆடி இருந்த நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமிருக்கும் 4 போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிகளை குவித்தால் மட்டும் தான் பலமாக அவர்களால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையும் உள்ளது.

இதற்கிடையே பஞ்சாப் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டுமே அதிக விமர்சனங்களை சந்தித்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியை சிஎஸ்கே சமாளிக்க முடியாமல் போக, அணியின் பந்து வீச்சாளர் சாஹர் காயம் காரணமாக பாதியில் வெளியேறி இருந்தார்.

ஏற்கனவே தேஷ்பாண்டே மற்றும் பதிரானா ஆகியோர் காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடாமல் போக, சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பௌலிங் யூனிட்டும் இந்த போட்டியில் உடைந்து போனது. முதலில் சிஎஸ்கே பேட்டிங் செய்தபோது கேப்டன் ருத்துராஜ் மட்டும் 62 ரன்களை சிறப்பாக ஆடி எடுத்து இருந்தார்.

மற்ற பேட்ஸ்மேன்கள் நல்லதொரு பங்களிப்பை அளிக்கத் தவறியதால் அந்த அணியின் பேட்டிங் யூனிட் மொத்தமாக நிலைகுலைந்து போனது. இதற்கு முன்பாக 7 போட்டிகளில் பேட்டிங் இறங்கி சிக்சர்கள் மற்றும் ஃபோர்களை பறக்க விட்டது மட்டுமல்லாமல் ஒரு போட்டியில் கூட அவுட் ஆகாமல் இருந்த தோனி, பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் 11 பந்துகளை சந்தித்து 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

இதனிடையே கடைசி ஓவரில் தோனி செய்த செயல் ஒன்று தற்போது அதிகம் கொந்தளிப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது. மிட்செல் மற்றும் தோனி ஆடிக்கொண்டிருந்த போது அர்ஷதீப் சிங் வீசிய கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை எதிர் கொண்ட தோனி, அதில் ரன் ஓட தவறிவிட்டார். ஆனால், மறுபுறம் நின்ற மிட்செல், கிட்டத்தட்ட இரண்டு ரன்கள் வரை ஓடி இருந்த நிலையில் தோனி அந்த ரன் ஓட மறுப்பு தெரிவித்து கிரீஸுக்கு உள்ளே நின்றிருந்தார்.

இதனால் தோனி அடுத்தடுத்து பந்துகளை சிக்ஸர்களை பறக்க விடுவார் என எதிர்பார்த்த நிலையில் அதன் பின்னர் அவர் எதிர்கொண்ட மூன்று பந்துகளில் ஏழு ரன்கள் மட்டும் தான் எடுத்திருந்தார். இப்படி ஆடுவதற்கு மிட்செலே பேட்டிங் செய்திருக்கலாம் என்றும் இப்படி சிங்கள் கொடுக்காமல் தன்னை அதிகமாக நம்பி கிரீசில் நிற்பதெல்லாம் சரியான செயல் கிடையாது என்றும் தோனிக்கு எதிராக ஆவேசமான கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ajith V

Recent Posts