கணீர் குரலில் ஈர்த்த சீர்காழி கோவிந்தராஜன்.. தயங்கி தயங்கி நடிச்ச கதாபாத்திரம் பத்தி தெரியுமா?..

சீர்காழி கோவிந்தராஜன் என்ற பெயரை கேட்டாலே அவரது கணீர் என்ற குரல் தான் நமக்கு முதலில் ஞாபகம் வரும். ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியுள்ள இவர், தனது குரலாலே கேட்பவர்கள் அனைவரையும் கட்டிப் போட்டு விடுவார். அதிலும் இவர் பாடியுள்ள பக்தி பாடல்கள் இன்னும் பல காலத்திற்கு தெய்வத்தின் மீது நம்பிக்கையுடன் இருப்பவர்களின் குரலாகவும் ஒலித்து கொண்டே இருக்கும்.

இப்படி தமிழ் சினிமா கண்ட முன்னணி பாடகரான சீர்காழி கோவிந்தராஜன், சில படங்களில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் அறியாத தகவலாகும். அதிலும் ஒரு படத்தில் அவர் கதாநாயகனாக நடித்துள்ளது தான் சிறப்பம்சமே. சீர்காழி கோவிந்தராஜன் முதன்முதலாக ’கந்தன் கருணை’ என்ற திரைப்படத்தில் தான் நடித்தார். அந்த படத்தில் அவர் நக்கீரர் என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.இந்த படத்தின் வசனங்களையும் அவர் தனது கணீர் குரலில் பேசி நடித்தார். அவரது முதல் படமே அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது.

இதனை அடுத்து ’வா ராஜா வா’ என்ற திரைப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக நடித்தார். முழுக்க முழுக்க குழந்தைகளை வைத்து படமாக்கப்பட்ட இந்த படத்தை ஏபி நாகராஜன் இயக்கினார். இந்த படத்தின் காவல்துறை அதிகாரி கேரக்டருக்கு வித்தியாசமான ஒரு நடிகர் தேவை என்று ஏபி நாகராஜன் யோசித்தபோது அவருக்கு திடீரென ஞாபகம் வந்தது சீர்காழி கோவிந்தராஜன். இந்த படத்தில் நடிக்க சீர்காழி கோவிந்தராஜன் தயங்கியதாகவும், ஆனால் ஏபி நாகராஜன் அவரை வலியுறுத்தி நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து ’திருமலை தென்குமரி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிவக்குமார் உள்பட பலர் நடித்திருந்தனர். இதில் சீர்காழி கோவிந்தராஜன் பாகவதர் சிவசிதம்பரம் என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது.

seerghazhi1

இதன் பிறகு சீர்காழி கோவிந்தராஜன் ஹீரோவாக நடித்த படம் தான் ’அகத்தியர்’.  அகத்திய மாமுனிவர் கேரக்டரில் சீர்காழி கோவிந்தராஜன் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருடன் டிஆர் மகாலிங்கம், ஏவிஎம் ராஜன், ஆர் எஸ் மனோகர், டிகே பகவதி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.  ஏபி நாகராஜன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில் நான்கு பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன் பாட, மற்ற பாடல்களை டி எம் சௌந்தரராஜன் உள்ளிட்ட சிலர் பாடியிருந்தனர்  ஒரு பாடலை டி.எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் ஆகிய இருவரும் இணைந்து பாடினர்.

இந்த படத்தை அடுத்து ’தெய்வம்’ என்ற திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். இந்த படத்தில் அவர் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே தோன்றினாலும் நடிப்பில் அசத்தி இருப்பார்.

இதனை அடுத்து மிகவும் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட சிவாஜி கணேசன் நடித்த ’ராஜராஜ சோழன்’ என்ற திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், நம்பியாண்டார் நம்பி என்ற கேரக்டரில் நடித்தார். இந்த கேரக்டரில் அவர் மிகவும் பொருத்தமாக இருந்ததாக அன்று விமர்சனங்கள் எழுதப்பட்டன.

இதனை அடுத்து ’திருவருள்’ என்ற திரைப்படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு வெளியான ’தசாவதாரம்’ என்ற திரைப்படத்தில் நாரதர் கேரக்டரில் நடித்தார்.  ஜெமினி கணேசன், எம் ஆர் ராதா, உள்ளிட்ட பலரும் நடித்த இந்த திரைப்படத்தை கேஎஸ் கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தார். திருமாலின் பத்து அவதாரங்கள் கதையம்சம் கொண்ட இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதனை அடுத்து சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த சீர்காழி கோவிந்தராஜன் ’தாய் மூகாம்பிகை’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் மட்டும் நடித்தார். அதன் பிறகு  1986 ஆம் ஆண்டு வெளியான ’நம்பினார் கெடுவதில்லை’ என்ற படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். மொத்தம் பத்து படங்களில் அவர் நடித்தாலும் அவர் நடித்த படங்களில் ஏற்ற கேரக்டர் அனைத்துமே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...