எந்த இந்திய வீரரும் நெருங்காத இடம்.. சச்சின், கே எல் ராகுல் சாதனையை தவிடுபொடி ஆக்கிய ருத்துராஜ்..

ஐபிஎல் தொடரில் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிடையேயான போட்டி தற்போது நடந்து வருகிறது. இதற்கு முன்பாக இந்த இரண்டு அணிகளும் மோதி இருந்த 9 ஐபிஎல் போட்டிகளில் டாஸ் வென்ற அணியே வெற்றி பெற்றிருந்தது. அதில் சிஎஸ்கே அணி ஐந்து முறையும், மும்பை அணி நான்கு முறையும் டாஸ் வென்று தங்கள் போட்டிகளை வென்றுள்ள நிலையில், தற்போது நடந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது.

அதன்படி ஆடிய சென்னை அணியில் ருத்துராஜிற்கு பதிலாக ரஹானே தொடக்க வீரராக களமிறங்கி இருந்தார். மும்பை அணிக்கு எதிராக சென்னையின் இந்த வியூகம் கைகொடுக்கும் என் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 8 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து கோட்ஸி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் ரஹானே.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீரரான ரச்சின் ரவீந்திரா, 16 பந்துகளில் இரண்டு போர்கள் மற்றும் ஒரு சிக்ஸர்களுடன் 21 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார். சென்னை அணி ஒன்பது ஓவர்களில் 65 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் 170 ரன்கள் வரை அவர்கள் அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டனர். ஆனால் ருத்துராஜ் – ஷிவம் துபே ஜோடி அதிரடியாக ஆடி பந்துகளை நாலாபுறமும் சிக்சருக்கு பறக்க விட்டிருந்தது.

இதனால் அடுத்த 6 ஓவர்களிலேயே 85 ரன்கள் வரை அடித்திருந்த சிஎஸ்கே அணி, 15 ஓவர்களில் 149 ரன்களை எடுத்திருந்தது. அப்படி ஒரு சூழலில் தான் 40 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஐந்து ஃபோர்களுடன் 69 ரன்கள் எடுத்திருந்த கேப்டன் ருத்துராஜ், ஹர்திக் பந்தில் அவுட்டாகி இருந்தார். இந்த நிலையில் தான் எந்த இந்திய வீரர்களும் செய்யாத மிக முக்கியமான ஒரு சாதனையை ஐபிஎல் தொடரில் படைத்துள்ளார் ருத்துராஜ்.

ஐபிஎல் தொடரில் 2000 ரன்களை குறைந்த இன்னிங்சில் அடித்த வீரர் என்ற சிறப்பை க்றிஸ் கெயில் (48 இன்னிங்ஸ்கள்) பெற்று முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஷான் மார்ஷ் 52 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களை கடந்திருந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக தற்போது ருத்துராஜ் தனது 57வது இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்து சாதனை புரிந்துள்ளார்.

இவருக்கு அடுத்தபடியாக கே எல் ராகுல் 60 இன்னிங்ஸ்களிலும், அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் 63 இன்னிங்ஸ்களிலும் ஐபிஎல் போட்டிகளில் வேகமாக 2000 ரன்களை அடித்திருந்தனர். அப்படி இருக்கையில் தான் இந்த இரண்டு இந்திய வீரர்களை முந்தி 57 இன்னிங்ஸ்களில் 2000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சிறப்பையும் ஐபிஎல் தொடரில் பெற்றுள்ளார் ருத்துராஜ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...