எந்த டீமுக்கும் இப்படி நடக்கக் கூடாது.. ஐபிஎல் சரித்திரத்தில் சிஎஸ்கே வசமுள்ள மோசமான சாதனை..

சிஎஸ்கே அணி மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியை கண்டு துவண்டு போய் உள்ளனர். சொந்த மண்ணில் ராஜாவாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்ஸை கடந்த இரு போட்டிகளில் தொடர்ந்து லக்னோ அணி வென்று அசத்தி உள்ளது. இதில் முதல் போட்டி லக்னோவின் சொந்த மைதானத்தில் நடைபெற்றிருந்த நிலையில் இரண்டாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றதால் சிஎஸ்கே நிச்சயம் தகுந்த பதிலடியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் பரவலாக இருந்தது.

ஆனால் அங்கேயும் தனிக்காட்டு ராஜாவாக இருந்த சிஎஸ்கேவின் ராஜ்ஜியத்தை சுக்கு நூறாக்கிய லக்னோ அணியின் அதிரடி வீரர் ஸ்டாய்னிஸ் சதத்தின் உதவியுடன் அபார வெற்றி பெற்றிருந்தது. ருத்துராஜின் சதம் மற்றும் ஷிவம் துபேவின் அதிரடி ஆகியவற்றின் உதவியால் சிஎஸ்கே அணி 210 ரன்களை அடித்திருந்தது.

சேப்பாக்கம் போன்ற மைதானத்தில் நிச்சயம் ஒரு சிறந்த ரன்னாக இது இருந்தாலும் அதனை எளிதான இலக்காக மாற்றி அமைத்திருந்தது லக்னோ அணியின் பேட்டிங் யூனிட். மூன்றாவது வீரராக உள்ளே வந்த ஸ்டாய்னிஸ் போட்டியை லக்னோ பக்கம் மாற்றியமைத்ததுடன் கடைசி வரை தனது அதிரடி ஆட்டத்தையும் தொடர்ந்து இருந்தார்.

6 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்ட போதும் அதனை மூன்றே பந்துகளில் முடித்து வைத்த ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் விருதினையும் வென்றிருந்த நிலையில் சொந்த மண்ணில் இந்த சீசனில் முதல் தோல்வியையும் சிஎஸ்கே பதிவு செய்திருந்தது. பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என இரண்டு விஷயத்திலும் பல வீரர்கள் சொதப்பியதன் காரணமாக தான் கையில் இருந்த வெற்றியையும் அவர்கள் இழந்தனர்.

மீதமுள்ள 6 போட்டிகளில் சிஎஸ்கே அணி நான்கு போட்டிகளுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் பிளே ஆப் சுற்றும் கிட்டத்தட்ட உறுதியாகும் என்ற சூழலில் இனிவரும் போட்டிகளில் மிகுந்த கவனத்துடன் ஆட வேண்டும் என்று நெருக்கடியும் உருவாகியுள்ளது.

அப்படி இருக்கையில் தான் ஐபிஎல் தொடரில் எந்த அணியும் செய்யாத ஒரு விஷயத்தை சிஎஸ்கே அணி படைத்து மோசமான சாதனையையும் சொந்தமாக்கி உள்ளது. இதற்கு முன்பு வரை ஐபிஎல் தொடரில் 210 ரன்கள் அடித்தும் அதிக முறை தோல்வியடைந்த அணிகளின் பட்டியலில் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணி (2 முறை) சமநிலையில் இருந்தது.

அதனை தற்போது ஓவர் டேக் செய்த சிஎஸ்கே, 210 ரன்கள் அடித்தும் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்துள்ளதால் இந்த பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறி மற்ற எந்த அணிகளும் பெறாத ஒரு மோசமான இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...