16 ஐபிஎல் சீசனில் ஒரு தடவை கூட மும்பைக்கு நடக்காத சோகம்.. ஒரே சீசன்ல 2 தடவை நடந்துடுச்சே..

இதுவரை நடந்து முடிந்த 16 ஐபிஎல் சீசன்களில் ஒருமுறை கூட மும்பை அணி பந்து வீச்சாளர்கள் செய்யாத ஒரு மோசமான சாதனையை இந்த சீசனில் இரண்டு முறை செய்து மிகப் பெரிய ஏமாற்றத்தையும் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. இந்த சீசனில் 200 ரன்களை கடப்பது மிக எளிதான ஒரு விஷயமாக மாறிவிட்ட நிலையில் பந்து வீச்சாளர்களுக்கு மரியாதையே இல்லாமல் அடித்து வருகின்றனர் பேட்ஸ்மேன்கள்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கூட ஹைதராபாத் அணி 277 ரன்கள் அடித்திருந்தது. அதே போல டெல்லி அணி இவர்களுடன் ஆடிய இரண்டு போட்டிகளிலும் ஒரு முறை 205 ரன்களும், இன்னொரு முறை 257 ரன்களும் எடுத்திருந்தனர். பந்து வீச்சில் எப்போதுமே பேர் போன மும்பை அணி, இந்த சீசனில் தடுமாறி வருவதால் எதிரணி வீரர்கள் மிக அசால்டாக ரன்களையும் அடித்து விடுகின்றனர்.

மேலும், மும்பை அணியின் பந்து வீச்சு யூனிட்டில் ஒரே ஒரு ஆறுதலாக இருப்பது பும்ராவுடைய பவுலிங் மட்டும் தான். மற்ற அனைவருமே 45 ரன்களுக்கு மேல் அளித்து வரும் நிலையில், பும்ராவின் பந்தில் எதிரணி வீரர்கள் ரன் சேர்க்கவே தடுமாறுவதுடன் விக்கெட்டுகளையும் அள்ளி வருகிறார். பந்து வீச்சில் அதிக பலவீனத்துடன் அவர்கள் திகழ்வதால் சேசிங்கில் வெற்றி பெறுவதை தான் குறிப்பாக வைத்துள்ளனர்.

அப்படி இருக்கையில் தான் இத்தனை ஐபிஎல் சீசன்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் செய்யாத ஒரு விஷயத்தை நடப்பு சீசனில் இரண்டு முறை செய்து மோசமான சாதனைக்கு அவர்கள் சொந்தக்காரர்களாகி உள்ளனர்.

கடந்த 16 ஐபிஎல் சீசன் களில் மும்பை அணியில் ஆடி உள்ள எந்த பந்து வீச்சாளர்களும் 60 ரன்களுக்கு மேல் கொடுத்ததில்லை. ஆனால் இந்த சீசனில் தனது அறிமுக போட்டியில் ஆடி இருந்த தென்னாபிரிக்க வீரர் மகாபா 66 ரன்களை 4 ஓவர்களில் கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து டெல்லி அணிக்கு எதிராக தற்போது நடந்து முடிந்த போட்டியில் லுக் வுட் 68 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றி இருந்தார்.

எந்த வீரரும் 60 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் இருந்த சூழலில் தான் இரண்டே போட்டியில் இரண்டு மும்பை வீரர்கள் இப்படி சொதப்பி உள்ளது மிகப்பெரிய கேள்வியையும் உருவாக்கி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews