மீண்டும் ரஜினிக்கு ஒரு பாட்ஷா? ‘ஜெயிலர்’ திரை விமர்சனம்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களில் இதுவரை பெஸ்ட் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ‘பாட்ஷா’ என்று சொல்லிவிடலாம். பாட்ஷாவை பின்னுக்கு தள்ள இதுவரை ஒரு ரஜினி படம் வந்ததில்லை என்ற நிலையில் தற்போது ‘ஜெயிலர்’ படம் அதை பின்னுக்கு தள்ளிவிடும் என்ற அளவுக்கு மாஸ் படமாக அமைந்துள்ளது.

விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தை நெல்சன் இயக்கியபோது அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அவர் தான் நினைத்தபடி படத்தை எடுக்க முடியவில்லை என்று பேட்டி அளித்திருந்தார்.

ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்பி முத்துராமன்.. சமரசம் செய்த பாலசந்தர்.. ‘ஸ்ரீராகவேந்திரர்’ உருவான கதை..!

Jailer

இதனை அடுத்து அவரை நம்பி ரஜினிகாந்த் இந்த படத்தை ஒப்படைத்து உள்ளார். அந்த நம்பிக்கைக்கு பாதகம் இல்லாமல் நெல்சன் இந்த படத்தை மாஸாக எடுத்து உள்ளார்.

அப்பா – மகன், அம்மா – மகன் சென்டிமென்ட் படங்கள் தமிழில் அதிகம் வந்திருந்தாலும் கிட்டத்தட்ட அதே கதைதான் இந்த படத்திலும். ஆனால் திரைக்கதையில் உள்ள வித்தியாசம், காட்சி அமைப்புகளில் உள்ள ஆச்சரியம் தான் படத்தை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் காட்சிகள் ஆங்காங்கே வந்து சென்றாலும் நெல்சனின் முந்தைய திரைப்படங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமான படமாக ‘ஜெயிலர்’ உருவாகியுள்ளது. முதல் பாதியில் மகனையும் பேரனையும் கவனித்துக் கொள்ளும் ஒரு சாதாரண ரிட்டையர்டு ‘ஜெயிலர்’ ஆக இருக்கும் ரஜினி இரண்டாம் பாதியில் மாஸான ஹீரோவாக மிரள வைக்கிறார்.

jailer trailer1

போலீஸ் அதிகாரியாக இருக்கும் வசந்த் ரவி பணி நிமித்தமாக ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அதன் பின்னர் அவர் வில்லன்களால் படுமோசமாக கொலை செய்யப்படுகிறார். இந்த நிலையில்தான் ஜெயிலர் பதவியில் இருந்து ரிட்டையர்டாகி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் முத்துவேல் பாண்டியன் திடீரென டைகர் முத்துவேல் பாண்டியனாக மாறி மகனை கொன்றவர்களை தேடி தேடிச் சென்று பழிவாங்குகிறார்.

அதே சமயத்தில் தனது குடும்ப உறுப்பினருக்கு வரும் ஆபத்தையும் அவர் காப்பாற்றுகிறார். வில்லன் குழுவினர் அவரது விஸ்வரூபத்தை கண்டு மிரண்டு ஓடுவது தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

Jailer 2

நெல்சன் தனது முந்தைய படங்கள்போல் இல்லாமல் இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியையும் நுணுக்கமாக செதுக்கி உள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு தீவிரமான ரஜினி ரசிகன் ஒரு படத்தை எடுத்தால்கூட இந்த அளவுக்கு சிறப்பாக எடுக்க முடியுமா என்பது சந்தேகமே.

ரஜினியின் மாஸ் காட்சிகள், அவருடைய மேக்கப், அப்பாவித்தனமான முதல் பாதி காட்சிகள், யோகி பாபு உடனான காமெடி, மகன் மற்றும் பேரனுடன் காட்டும் அன்பு, மனைவியுடன் அப்பாவி தனமாக புதினா சட்னி கேட்பது என முதல் பாதி கலகலப்பு மற்றும் லேசான சென்டிமென்ட்டுடன் நகர்கிறது. முதல் பாதி போனதே தெரியாத நிலையில் இடைவேளையின் போது ஒரு மாஸ் காட்சியுடன் படத்தை எதிர்பார்க்க வைக்கிறார்கள்.

ஒரே நாளில் வெளியான 3 மோகன் படங்கள்.. மூன்றும் வெற்றி.. ரஜினி, கமல் கூட செய்யாத சாதனை..!

அதன் பின்னர் இரண்டாம் பாதியில் பாட்ஷாவாக மாறும் ரஜினி அதகளப்படுத்துகிறார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் தூள் கிளப்புகிறார்கள். ரஜினிகாந்த், மோகன் லால், சிவராஜ்குமார் ஆகிய மூன்று ஸ்டார்களும் இணையும் அந்த ஒரு காட்சிக்கு இணையாக தமிழ் சினிமாவில் வேறு காட்சி இல்லை.

எந்த ஒரு மாஸ் திரைப்படத்திலும் வில்லன் கேரக்டர் எந்த அளவுக்கு வலிமையாக கட்டமைக்கப்படுகிறதோ அப்போதுதான் அந்த படம் வெற்றி பெறும். அந்த வகையில் விநாயகன் கேரக்டர் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத வகையில் மிரட்டல் வில்லனாக அவர் தோற்றம் அளிக்கிறார். திமிரு படத்திற்கு பிறகு அவருக்கு கிடைத்த மிகப்பெரிய மிகச்சிறந்த கேரக்டர் இதுதான் என்பதும் இனி தமிழ் சினிமா இவரை சரியாக பயன்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

Jailer

மேலும் ரஜினிகாந்த், நெல்சனை அடுத்து பாராட்டத்தக்கவர் அனிருத் தான். தெறிக்க வைக்கும் பின்னணி இசை, பாடல்கள் ஆகியவை சூப்பராக உள்ளது. விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம்.

படையப்பா படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பின் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். அவருடைய கேரக்டர் பெரிய அளவில் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும் கிடைத்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தி உள்ளார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக ரசிகர்கள் மனதில் இருக்கும் ‘பாட்ஷா’: இனிமேல் இப்படி ஒரு படம் வருமா?

ஒரு காட்சிகூட தேவையில்லாத காட்சி இல்லை என்பதும் சுனில் காட்சி தவற மற்ற அனைத்துமே படத்தின் மூலக்கதைக்கு சம்பந்தமான கோர்வையுடன் கதையை நகர்த்தி இருப்பது நெல்சனின் புத்திசாலித்தனத்தை பார்க்க முடிகிறது. மொத்தத்தில் பாட்ஷா படத்திற்கு பின்னர் ஒரு மாஸ் ரஜினி படம் பார்த்த திருப்தி படத்தை பார்த்து வெளியே வரும்போது ஏற்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews