அந்த திசையில் பால் பொங்கினால் இவ்வளவு யோகமா? அதற்காக இப்படி செய்து விடாதீர்கள் மக்களே..!

பொங்கல் வைத்து முடித்ததும் பால் பொங்கியதா என்று தான் பலரும் நலம் விசாரிப்பார்கள். அடுத்ததாக அவர்கள் கேட்கும் கேள்வி எந்தப் பக்கமா பால் பொங்கிச்சு என்பது தான். அன்றைய நாள் முழுவதும் உறவுகளிடமும், நண்பர்களிடமும் இப்படி கேட்பது அவர்களது நலம் விசாரிப்பது போல அமையும். பால் பொங்கும் திசையைப் பொறுத்து பலன்கள் சொல்லப்படுகின்றன. அது என்னென்ன என்று பார்க்கலாமா…

உறவோடு ஒன்று கூடி புதிதாக அறுவடை செய்த புத்தம் புது அரிசியில் பொங்கல் வைக்க புதிய மண்பானை வாங்குவர். அதில் அரிசி கழுவிய தண்ணீருடன் பசும்பால் சேர்த்து புதிய அடுப்பில் சமநிலையில் வைப்பார்கள். அதன்பின் அடுப்பைப் பற்றவைத்து இளம் தீயில் எரியவிட்டு பானையில் வைத்த கழுநீரை பொங்கவிடுவார்கள்.

Pongal
Pongal

அது பொங்கிவரும்போது “பொங்கலோ பொங்கல்” என்று குலவையிட்டு கூவி மகிழ்ந்து, சூரிய பகவானுக்கும் கதிரவனுக்கும் நன்றி சொல்லுவார்கள் நம் முன்னோர்கள். அடேங்கப்பா… அதில் தான் எத்தனை ஆனந்தம்? என்ன ஒரு இனிமையான தருணம் என்று நம்மை அந்த ஆண்டு முழுவதும் உற்சாகம் பொங்கும் பண்டிகையாக இந்தப் பொங்கல் மலர்கிறது.

அப்போது பொங்கல் பானையில் இருந்து பொங்கிவழியும் திசையை வைத்து அந்த வருடம் முழுவதும் குடும்பத்திற்கும் உறவுகளுக்கும் நடக்கும் பலனை தீர்மானிக்கின்றனர். அப்படி என்றால் நம் முன்னோர்கள் எவ்வளவு அறிவுத்திறன் படைத்தவர்களாக இருந்து இருப்பார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பாருங்கள். பொங்கி வரும் பொங்கல் பாலுக்கும், நம் யோகத்திற்கும் கூட சம்பந்தம் உண்டு என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க… சங்க இலக்கியங்கள் போற்றும் பொங்கல் பண்டிகை… எப்படி வந்ததுன்னு தெரியுமா?

கிழக்கு 

கிழக்கு திசையில் பொங்கி வழிந்தால், வீடு, மனை மற்றும் வாகனங்கள் வாங்கும் யோகம் வரும். திருமணம் அல்லது சொத்து சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடந்தால் அது சுமூகமாக நடக்கும். ஏதேனும் பொருட்கள் வாங்க திட்டமிட்டிருந்தால் அதனை வாங்கி மகிழ்வீர்கள்.

உடை மற்றும் ஆபரணங்கள் சேரும் வாய்ப்புகள் அதிகம். சிலர் இத்தகைய பலன்கள் வருவதால் கிழக்குத் திசை நோக்கி பால் விழ வேண்டும் என்று பானையை சற்றே சரித்து வைப்பார்கள். ஆனால் இது தவறு. சமநிலையில் பானை வைக்கும் போது எந்தத் திசையில் பால் விழுகிறதோ அது தான் உண்மையான பலனைத் தரும். இல்லாவிட்டால் நீங்கள் எத்தகைய பலன்களுக்கு உரியவர் என்பதைக் கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும்.

Pongal Milk
Pongal Milk

மேற்கு 

மேற்கு பக்கத்தில் பொங்கி வழிந்தால், சுப நிகழ்ச்சிகள் உண்டாகும். பிள்ளைகளுக்கு வரன் தேடுபவராக இருந்தால் இந்த வருடத்தில் மங்கள நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதைக் குறிக்கும்.

வடக்கு 

வடக்கு திசையில் பொங்கி வழிந்தால் பண வரவு அதிகரிக்கும். நீங்கள் பதவி உயர்வு அடைவீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமா பேச்சுகள் நிறைவாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் போக வாய்ப்புகள் அதிகம். கொடுத்த கடன் எந்த தடங்கலும் இன்றி கைக்கு வந்து சேரும்.

தெற்கு 

தெற்கு திசையில் பொங்கல் பொங்கி வழிந்தால் பிணி என்றே சொல்லலாம். அந்த வருடம் முழுவதும், மருத்துவ செலவுகள் அதிகம் இருக்கும். உடல் நிலையில் அதிக சோர்வு காணப்படும். சுப காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். எனவே உடல்நிலையில் கூடுதல் கவனத்தோடு செயல்படுவது நலம் பயக்கும்.

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews