நான்கு முதல்வர்களுடன் பணிபுரிந்த ஒரே இயக்குனர்… ஒற்றை நாடகத்தால் தலைகீழான வாழ்க்கை!

இன்று சினிமாவிற்குள் நுழைய வேண்டுமென்றால் குறும்படங்கள் அல்லது டெலி பிலிம்கள் எடுப்பதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதில் மக்கள் மத்தியில் அதிக கவனம் பெறும் போது குறும்படங்கள் உருவாக்கியவர்களுக்கு தமிழ் படங்கள் இயக்கவோ, நடிக்கவோ வாய்ப்பும் உருவாகும். ஆனால் அந்த காலத்தில் எல்லாம் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் நாடகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி தான் சாதிக்க முடியும்.

அப்படி சினிமாவில் வந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்டோர் ஏராளம். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு இயக்குனர் தான் ப. நீலகண்டன். எம்ஜிஆரின் ஆஸ்தான இயக்குனர் என்ற பெயர் எடுத்த நீலகண்டன், சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என கனவு கண்டுள்ளார். அப்போது டி.கே. சண்முகம் என்பவரின் வழிகாட்டுதலின் பெயரில், நாடகங்களில் கதை எழுத தொடங்கினார் ப. நீலகண்டன்.

அப்படி அவர் இயக்கிய பல நாடகங்கள் சக்கை போடு போட்டு அந்த சமயத்தில் அதிக வசூலும் செய்திருந்தது. மேலும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவும் அவர் இயக்கிய ‘நாம் இருவர்’ என்ற நாடகம் மூலம் உருவாகி இருந்தது. சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் புரட்சிகரமான வசனங்கள் மற்றும் பாரதியார் பாடல்களுடன் ப. நீலகண்டன் உருவாக்கி இருந்த நாம் இருவர் நாடகம், ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் கவனத்தை ஈர்த்தது.

நாம் இருவர் நாடகத்தை படமாக மாற்ற முடிவு செய்த மெய்யப்ப செட்டியார், அதற்கான உரிமத்தை பெற்றுக் கொண்டு ப. நீலகண்டனை அந்த படத்தின் அசிஸ்டன்ட் இயக்குனராகவும் பணிபுரிய வைத்திருந்தார். நாடகத்தில் உருவான மேஜிக், படத்திலும் உருவாக பெரிய அளவில் இந்த படமும் வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து வேதாள உலகம், வாழ்க்கை என மெய்யப்ப செட்டியார் இயக்கிய இரண்டு படங்களுக்கும் கதை, திரைக்கதை ப. நீலகண்டன் தான்.

இந்த நிலையில், ஓர் இரவு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் ப. நீலகண்டன். இந்த படத்தில் அவருடன் இணைந்து மறைந்த முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை கதை எழுதி இருப்பார். இந்த படம் வெற்றி பெற சிவாஜி கணேசன், எம்ஜிஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் ப. நீலகண்டனுக்கு அமைந்திருந்தது.

சக்கரவர்த்தி திருமகள் (1957) முதல் நீதிக்கு தலைவணங்கு (1976) ஆகிய இரண்டு படங்களுக்கு நடுவே எம்ஜிஆரை வைத்து 17 படங்களை இயக்கி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார் ப. நீலகண்டன். அதே போல, மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி (பூம்புகார்), ஜெயலலிதா ஆகிய நான்கு பேருடனும் இணைந்து பணிபுரிந்த ஒரே இயக்குனரும் ப. நீலகண்டன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.