தீய சக்தி, தீர்ந்து போன சக்தியை தமிழ்நாட்டில் சுத்தம் செஞ்சாச்சு.. அடுத்த டார்கெட் கேரளா.. கேரளாவில் ஆரம்பமாகிறது தவெக.. எல்லா ஏற்பாடுகளும் தயார்.. விஜய்யை வரவேற்க தயார் நிலையில் இருக்கும் கேரள ஜென்சிக்கள்.. கேரளாவை அடுத்து தென்னிந்தியா.. தென்னிந்தியா முழுவதும் ஒரே கொடி.. அது தமிழக வெற்றி கழகத்தின் கொடி…
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றிய பிறகு, அடுத்த இலக்காக கேரளாவை நோக்கி தமிழக வெற்றி கழகம் நகர்கிறதா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. கேரளாவில் விஜய்க்கு ஏற்கெனவே கணிசமான ரசிகர் ஆதரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அதை அரசியல் அமைப்பாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கேரளாவில் கட்சியின் அமைப்பை உருவாக்குவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
விஜய்யின் ரசிகர் மன்றங்கள் கேரளாவில் பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகின்றன. திரைப்பட ரசிகர்களாக மட்டுமின்றி, பல்வேறு நலத்திட்டப் பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வந்ததாக செய்திகள் கூறுகின்றன. இதனால், புதிதாக ஒரு அரசியல் அமைப்பை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை விஜய் தரப்புக்கு இல்லை. ஏற்கெனவே இருக்கும் ரசிகர் வலையமைப்பை மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி என அரசியல் கட்டமைப்பாக மாற்றுவது அடுத்த கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில், கேரள அரசியலில் அறிமுகமான நடிகர் தேவன் சமீபத்தில் பாஜகவிலிருந்து விலகியுள்ளார். அதன்பிறகு அவர் விஜய்யின் கட்சியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும், கேரள மாநிலத் தலைமைப் பொறுப்பு குறித்தும் அவரிடம் ஆலோசிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், கேரளாவில் கட்சியை அமைப்பதற்கான விஜய் தரப்பின் முயற்சி வெறும் ரசிகர் அமைப்பு அளவில் இல்லாமல், அரசியல் ரீதியாகவும் நகர்கிறது என்ற பார்வை உருவாகியுள்ளது.
ஏற்கெனவே வயநாடு, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் TVK ஆதரவாளர்கள் அமைப்பு பணிகளைத் தொடங்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை, இளைஞர்கள் மற்றும் தொழில்முறைப் பணியாளர்களை இணைத்தல், மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்குதல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வயநாடு போன்ற பகுதிகளில் தொடங்கி, படிப்படியாக கேரளாவின் மற்ற மாவட்டங்களுக்கும் அமைப்பை விரிவுபடுத்தும் திட்டம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால் தமிழகத்தில் கிடைத்த வெற்றியை அப்படியே கேரளாவிலும் பெறுவது எளிதான விஷயம் அல்ல. கேரள அரசியலில் நீண்டகாலமாக வலுவாக இருக்கும் LDF, UDF ஆகிய கூட்டணிகளுக்கு இடையேதான் முக்கிய போட்டி நிலவி வருகிறது. விஜய்யின் ரசிகர் பலம் அரசியல் வாக்குகளாக மாற வேண்டுமென்றால், உள்ளூர் தலைமை, வலுவான அமைப்பு, கேரள மக்களின் பிரச்சினைகள் குறித்த தெளிவான கொள்கை ஆகியவை அவசியம். இதை உணர்ந்தே கட்சி விரிவாக்கம் படிப்படியாக நடைபெற வேண்டியிருக்கும்.
எப்படியிருந்தாலும், தமிழகத்தை தாண்டி தென்னிந்தியா முழுவதும் தடம் பதிக்க வேண்டும் என்ற விஜய் தரப்பின் அரசியல் பார்வைக்கு கேரளா முக்கியமான முதல் சோதனையாக மாறியுள்ளது. இன்று ரசிகர் பட்டாளமாக இருக்கும் கூட்டம் நாளை வாக்கு வங்கியாக மாறுமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. கேரளாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, மாநில நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அமைப்புகள் உருவாக்கம் போன்றவை அடுத்தடுத்து நடந்தால், தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பயணம் மாநில எல்லைகளைத் தாண்டி புதிய கட்டத்துக்குள் நுழைந்துவிட்டதாகவே பார்க்கப்படும்.





