தமிழகத்தில் முதல்முறையாக முதல்வர் விஜய் அவர்களின் தலைமையில் பொறுப்பேற்றுள்ள வெற்றிகரமான தவெக அரசு, தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை வளர்ச்சிக்கான ஒரு முழுமையான மற்றும் புரட்சிகரமான வரைபடத்தை “வெற்றி தமிழகம் – தொலைநோக்குத் திட்டங்கள்” என்ற பெயரில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தத் தொலைநோக்கு ஆவணம், மாநிலத்தின் எதிர்காலத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் மொத்தம் 35 துறைகளின் கீழ் 436 தொலைநோக்குச் செயல் திட்டங்களை முன்வைத்துள்ளது. வெறும் வெற்று வாக்குறுதிகளாக இல்லாமல், தமிழ்நாட்டின் கட்டமைப்பை அடியோடு மாற்றியமைக்கும் உத்வேகத்துடன் இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய அங்கமாக, தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியைத் துரிதப்படுத்த 50,000 கோடி ரூபாய் முதலீட்டில் “தமிழ்நாடு வியூக முதலீட்டு ஆணையம்” உருவாக்கப்படவுள்ளது. இதன் மூலம் செமி கண்டக்டர், மின்சார வாகனங்கள், விண்வெளித் துறை, அதிநவீன உற்பத்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன துறைகளில் அரசு நேரடியாக முதலீடு செய்ய உள்ளது. வெறும் தனியார் முதலீடுகளை அனுமதிப்பதோடு நின்றுவிடாமல், தொழில்களுடன் இணைந்து அரசும் கூட்டு முதலீடு செய்வதன் மூலம் புதிய பொருளாதார மதிப்பை உருவாக்குவதோடு, இலட்சக்கணக்கான உயர்தர வேலைவாய்ப்புகளையும் இந்த அரசு உருவாக்கவுள்ளது.
தொழில்நுட்ப புரட்சியில் மற்றொரு மைல்கல்லாக, இந்தியாவின் முதல் பிரத்யேக AI நகரமான “அறிவகம்” அமைக்கப்படுவதோடு, அங்கு அதிநவீன AI பல்கலைக்கழகம், உயர் செயல்திறன் கொண்ட கணினி தொகுப்புகள் மற்றும் செமி கண்டக்டர் சோதனைக்கூடங்கள் நிறுவப்படவுள்ளன. மேலும் மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக “பெரியார் வளர்ந்துவரும் தொழில்நுட்ப நிறுவனம்” தொடங்கப்பட்டு, செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக்னாலஜி மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் சிறப்புப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன. உலகத் தரம் வாய்ந்த முதல் 100 பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை அரசே ஏற்று, அதற்குப் பதிலாக தமிழகத்தில் 3 ஆண்டுகள் சேவை வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், இந்தியாவில் எங்குமில்லாத புரட்சிகரமான “விண்ணப்பமின்றி நலத்திட்டங்கள்” என்ற நிர்வாக முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆதார், குடும்ப அட்டை போன்ற டிஜிட்டல் தரவுகளை ஒருங்கிணைத்து, தகுதியான பயனாளிகள் தொழில்நுட்பம் மூலம் தானாகவே கண்டறியப்பட்டு நலத்திட்ட உதவிகள் நேரடியாக வழங்கப்படவுள்ளன. மேலும், குடிமக்களின் வசதிக்காகப் பிறந்த சான்றிதழ், குடும்ப அட்டை திருத்தம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை ஒரே “வெற்றி தமிழகம் சூப்பர் ஆப்” மூலமாகப் பெறும் வசதியும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நிவாரண நிர்வாகம் மற்றும் சமூக நீதியை மேம்படுத்தும் விதமாக, சமூக நீதி பட்ஜெட், சமமான பிராந்திய வளர்ச்சி பட்ஜெட் மற்றும் கலாச்சார பாதுகாப்பு பட்ஜெட் எனப் பல சிறப்பு பட்ஜெட்டுகள் இந்தத் திட்டத்தில் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாவட்ட அளவிலான வளர்ச்சி நிதியில் 10 சதவீதத்தை எந்தத் திட்டங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் “மக்கள் தேர்வு செய்யும் பட்ஜெட்” என்ற மாபெரும் மக்களாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் அதிகாரங்கள் பொதுமக்களின் கைகளுக்கே முழுமையாக மாற்றப்படுகின்றன.
கிராம மற்றும் நகர்ப்புற இடைவெளிகளைக் குறைப்பதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கு முன்னுரிமை அளித்து இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், சொந்த ஊரிலிருந்தே வேலை செய்யும் “Work from hometown” கட்டமைப்பை ஊக்குவிக்க மைக்ரோ-தொழில்நுட்ப பூங்காக்களும், கூட்டு உழைப்பு மையங்களும் மாநிலம் முழுவதும் உருவாக்கப்படவுள்ளன. முதல்வர் விஜய் அவர்களின் சீரிய சிந்தனையில் உதித்துள்ள இந்தத் தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டை இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவதுடன், உலக அரங்கில் தலைநிமிரச் செய்யும் ஒரு வரலாற்றுச் சாதனையாக அமையும் என்பதில் ஐயமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
