தமிழக அரசியல் களம் தற்போது ஒரு மிகப்பெரிய மாற்றத்தின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதை நடப்பு நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களை சுற்றியே சுழன்று கொண்டிருந்த தமிழக அரசியல், 2026 சட்டமன்ற தேர்தலில் ஒரு மும்முனை போட்டியை சந்திக்கத் தயாராகிவிட்டது.
குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ களத்தில் இறங்கியிருப்பது, பாரம்பரிய அரசியல் கணக்குகளை தலைகீழாக மாற்றியுள்ளது. இது ஒரு ஒற்றை மனிதனின் ராணுவமாக பார்க்கப்பட்டாலும், அவருக்கு பின்னால் திரளும் இளைஞர் பட்டாளமும், தானாக முன்வந்து சேரும் கூட்டமும் மற்ற அரசியல் கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
விஜய்யின் அரசியல் வருகை என்பது வெறும் திரைத்துறை கவர்ச்சியால் மட்டும் உருவானது அல்ல, மாறாக அது நீண்டகாலமாக தேங்கிக் கிடந்த அரசியல் சலிப்பின் வெளிப்பாடாகவும் பார்க்கப்படுகிறது. சீமான் போன்ற தலைவர்கள் ஒரு மாற்று அரசியலை முன்வைத்தாலும், அவர்கள் இன்னும் பத்து சதவீத வாக்கு வங்கியை தாண்டாத நிலையில், விஜய்யின் வசீகரம் அந்த இடத்தை வேகமாக நிரப்பி வருகிறது.
சித்தாந்த ரீதியாக தமிழ் தேசியம் பேசும் இளைஞர்களாக இருந்தாலும் சரி, நடுநிலை வாக்காளர்களாக இருந்தாலும் சரி, ஒரு மாற்றத்தை விரும்புபவர்கள் விஜய்யை நோக்கி நகர்வதை நிபுணர்கள் அவதானிக்கின்றனர். இந்த வசீகரம் என்பது திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட பிம்பமா அல்லது காலத்தின் தேவையா என்பது விவாதத்திற்குரியது என்றாலும், களத்தில் அதன் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது.
தேர்தல் களத்தில் வாக்கு வங்கி பிரிப்பு என்பது மிக முக்கியமான காரணியாகும். விஜய் பிரிக்கப்போகும் வாக்குகள் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, அவர் அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியின் வாக்குகளை பெருமளவில் பிரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. அதேசமயம், திமுகவின் பலமான வாக்கு வங்கியாக கருதப்படும் சிறுபான்மையினர் வாக்குகளிலும், குறிப்பாக கிறிஸ்துவ பெருமக்களின் வாக்குகளிலும் விஜய் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் கட்சிக்கு இன்னும் பலமான இரண்டாம் கட்ட தலைவர்களோ அல்லது அடிமட்ட கட்டமைப்போ இல்லை என்பது ஒரு குறையாக சொல்லப்பட்டாலும், இன்றைய இணையதள யுகத்தில் அது ஒரு பெரிய தடையாக தெரியவில்லை. சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக வெளிச்சம் அவரது கட்சியின் செய்திகளை மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சென்று சேர்க்கின்றன.
இறுதியாக, 2026 தேர்தல் முடிவுகள் ஒரு ‘தொங்கு சட்டமன்றத்தை’ உருவாக்குமா அல்லது ஒரு கட்சிக்கு தெளிவான பெரும்பான்மையை கொடுக்குமா என்பதுதான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வி. ஒருவேளை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், விஜய் ஒரு ‘கிங் மேக்கராக’ உருவெடுக்க வாய்ப்புள்ளது. அப்போது அவர் யாருடன் கூட்டணி வைப்பார் அல்லது யாரை ஆதரிப்பார் என்பது தமிழக அரசியலின் புதிய திசையைத் தீர்மானிக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
