பாமகவும் வரனும்.. விசிகவும் போக கூடாது.. விஜய்யின் கூட்டணி கணக்கு.. அன்புமணியும் திருமாவும் என்ன பரம்பரை பகைவர்களா? விஜய் நினைத்தால் பாமக, விசிக இரண்டு கட்சிகளையும் ஒரே கூட்டணியில் வைக்க முடியும்.. களத்தில் இறங்கியிருக்கிறார் ஆதவ் அர்ஜூனா.. என்ன நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்..
தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் நாளுக்கு நாள் பரபரப்பாகி வரும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியை தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்குள் கொண்டு வர முதலமைச்சர் விஜய் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தொடங்கியுள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக வடதமிழகத்தில் பாமகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு, அக்கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வந்தால் தவெக அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும் என்ற கணக்கில் இந்த முயற்சி நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், பாமக தரப்பில் இருந்து உடனடியாக சம்மதம் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி இருக்கும் கூட்டணியில் தாங்கள் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்ற கருத்தை அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் அரசியல் முரண்பாடுகளை சமாளிப்பது விஜய் தரப்புக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது. அதேநேரத்தில், பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக அந்தக் கட்சியின் கோரிக்கைகள் என்ன என்பதை கேட்டறிந்து, அதற்கு ஏற்ற வகையில் சமரசம் செய்யும் முயற்சியும் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதில் முக்கியமான கோரிக்கையாக சௌம்யா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவெக ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் பாமக கூட்டணியில் இணைந்தால், அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்க முதலமைச்சர் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை வெறும் தொகுதி பங்கீடு அல்லது தேர்தல் உடன்பாடு என்ற அளவில் இல்லாமல், ஆட்சியில் பங்கேற்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தாங்கள் தவெக கூட்டணியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்ததாக கூறப்படும் நிலையில், தற்போது பாமகவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படுவது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாமகவும் விசிகவும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்படுவது நீண்ட காலமாக சாத்தியமற்ற ஒன்றாகவே பார்க்கப்பட்ட நிலையில், விஜய் இரு தரப்பையும் ஒரே அணிக்குள் கொண்டு வர முயற்சிப்பது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், “விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருப்பதால் நீங்கள் சங்கடப்பட வேண்டாம்; இது எங்களுடைய கட்சி தலைமையிலான கூட்டணி” என்ற அடிப்படையில் அன்புமணியை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஆதவ் அர்ஜுனா ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. தவெக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு தனி மரியாதையும் அரசியல் முக்கியத்துவமும் வழங்கப்படும் என்றும், விளக்கம் அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அன்புமணி தரப்பு இறுதியில் சம்மதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இதுவரை பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகள் ஆகிய இரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்பட்டதில்லை என்ற அரசியல் பின்னணியில், இந்த முயற்சி வெற்றி பெற்றால் அது தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க திருப்பமாக இருக்கும். விஜய் தலைமையிலான கூட்டணியில் இரு கட்சிகளையும் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுமா, அன்புமணி முன்வைக்கும் நிபந்தனைகள் ஏற்கப்படுமா, திருமாவளவன் தரப்பு இதை எப்படி எதிர்கொள்ளும் என்பதுதான் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் முக்கிய கேள்வியாக உள்ளது. இவை அனைத்துக்கும் பேச்சுவார்த்தையின் முடிவில்தான் தெளிவான பதில் கிடைக்கும்.





