பாகிஸ்தானை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர், தான் இந்திய யூடியூபர்களுக்கு வலை விரித்து, ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் தீவிரவாதிகளை ஒருங்கிணைத்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, இந்திய யூடியூபர்களுக்கு வலை விரித்து ஒரு பெரிய உளவு அமைப்பையே உருவாக்கியவர் ‘மேடம் என்’ என்று கூறப்படும் நிலையில், தற்போது பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் போலீஸ் அதிகாரியாக இருந்த நசீர் தில்லான் என்பவர்தான் இவர்கள் அனைவருக்கும் மூளையாக செயல்பட்டவர் என்றும், தற்போது இவர் போலீஸ் பணியை ராஜினாமா செய்து விட்டு யூடியூபராக உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இவர்தான் இந்தியாவுக்கு எதிராக யூடியூபர்களை மாற்றும் நிகழ்வுக்கு மாஸ்டர் மைண்டாக இருந்தார் என்றும் கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் மற்றும் ஐஎஸ்ஐ தீவிரவாதிகள் ஆகிய இருவரையும் இணைத்து சில மீட்டிங்குகளை நடத்தி உள்ளார் என்றும், இந்தியாவுக்கு எதிராக நடத்தப்படும் தீவிரவாத செயல்கள் அனைத்தும் இவர் மூலம்தான் ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தானின் முன்னாள் போலீசார் நூற்றுக்கணக்கானோர் இவருடன் தொடர்பில் இருந்ததாகவும், பஞ்சாபில் கைது செய்யப்பட்ட ஜஸ்வீர், ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஜோதி உள்பட பலருடன் இவர் தொடர்பில் இருந்துள்ளார் என்றும், குறிப்பாக ஜோதியுடன் ஒரு போட்காஸ்ட் நிகழ்ச்சியையும் இவர் நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்திய யூடியூபர்களுக்கு ஐஎஸ்ஐ அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்து, அவர்களுக்கு உளவு பணியை வழங்கியதுமே இவர்தான் என்றும், ‘டானிஸ்’ என்ற மற்றொரு நபருடன் தில்லான் தொடர்பில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தில்லான் தனது யூடியூப் சேனலை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தி, கலவரத்தை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்வதில் குறியாக இருந்தார் என்றும், குறிப்பாக பஞ்சாப் போலீசும் மாநில அரசையும் குறி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலத்தை பிரித்து ‘காலிஸ்தான்’ என்ற தனிநாடு பெற வேண்டும் என்ற அமைப்புக்கு உதவியதாகவும், ஐஎஸ்ஐ மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் பணியையும் இவர்தான் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது இவர் தொடர்பு உள்ள அனைத்து டிஜிட்டல் மற்றும் யூடியூப் குழுவினரையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய போலீசார் இருப்பதாக தெரிகிறது.