கோவை பெரியார் அறிவுலகத்திலும், மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ள புத்தகக் கொள்முதல் முறைகேடுகள், தமிழக பொது நூலகத் துறையின் அஸ்திவாரத்தையே உலுக்கியுள்ளன. இதுவரை வெளிவந்துள்ள தகவல்கள் வெறும் ‘டிரைலர்’ தான் என்றும், ‘மெயின் பிக்சர்’ இனிமேல் தான் வரவிருக்கிறது என்றும் அஞ்சப்படும் அளவுக்கு இந்த ஊழலின் பரிமாணம் மிகப் பிரம்மாண்டமாக உள்ளது. குறைந்தது கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அமைதியாகப் பின்னப்பட்ட ஒரு வலை போல இந்த நூலகப் புத்தகக் கொள்முதல் ஊழல் நடைபெற்று வந்திருக்கிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. மக்கள் வரிப்பணத்தில் அறிவைப் வளர்க்க வேண்டிய நூலகங்கள், அரசியல்வாதிகளும் இடைத்தரகர்களும் கமிஷன் அடிக்கும் கஜானாவாக மாற்றப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த மகா ஊழலின் பின்னணியை உன்னிப்பாகக் கவனிக்கும் போது, தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த இரு திராவிடக் கட்சிகளும் இதில் கூட்டுப் பங்காளிகளாகச் செயல்பட்டுள்ளனரோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறாமல், புத்தகக் கொள்முதல் என்ற பெயரில் போலிப் பதிப்பகங்களை உருவாக்குவதும், AI மூலம் எழுதப்பட்ட போலி நூல்களை வாங்குவதும், பழைய பதிப்புகளைப் புதியது போலக் காட்டி நிதி கையாடல் செய்வதும் இரு ஆட்சிகளிலுமே தடையின்றித் தொடர்ந்துள்ளது. கட்சி வேறுபாடின்றி இரு தரப்பும் தங்களுக்குள் ஒரு மறைமுகப் புரிதலைக் கொண்டு, நூலக நிதியைச் சுரண்டுவதில் ஒத்த கருத்தோடு செயல்பட்டு வந்துள்ளன என்பதைத் தான் இந்தத் தொடர் முறைகேடுகள் வெளிப்படுத்துகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு அமையாமல் போயிருந்தால், இந்த நூலக ஊழல் இன்னும் காலாகாலத்திற்கு வெளிச்சத்திற்கே வராமல் தொடர்ந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் சுரண்டி கொழுத்த கும்பல், வாசகர்களுக்கும் மாணவர்களுக்கும் போலி மற்றும் பழைய நூல்களை விநியோகித்துத் தங்களின் சொந்தக் கணக்குகளை நிரப்பிக் கொண்டே இருந்திருப்பார்கள். ஆனால், முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான தவெக அரசுப் பொறுப்பேற்றவுடன், இத்தகைய மரபுவழி ஊழல் அமைப்புகளின் மீது தொடுக்கப்பட்டத் தணிக்கை அம்புகள் தான், இந்த இமாலய மோசடியை மக்கள் மன்றத்தில் போட்டு உடைத்துள்ளன.
மாவட்டம்தோறும் பெருமைக்காகவும், விளம்பரத்திற்காகவும் பெரிய பெரிய நூலகங்களை அரசு செலவில் தேர்வு செய்து கட்டியதன் உண்மையான பின்னணி இப்போது தான் மக்களுக்குப் புரிகிறது. அறிவொளி பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அவை கட்டப்படவில்லை மாறாக, ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் புத்தகக் கொள்முதல் ஆணை பிறப்பித்து, அதில் பெரும் கமிஷன் அடிப்பதற்கான தளங்களாகவே இந்த நூலகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ‘கலைஞர் நூலகம்’, ‘ஈவெரா அறிவுலகம்’ எனப் பெரிய பெயர்களைச் சூட்டிவிட்டு, உள்ளே ஜீன் டிரெஸ் போன்ற பிரபல அறிஞர்களின் பெயரிலேயே போலி நூல்களை அடுக்கி வைத்திருப்பது, கட்டடங்கள் கட்டப்பட்டதன் சுயநல நோக்கத்தை வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது.
முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ், தவெக அரசு இந்த நூலகக் கொள்முதல் ஊழல் விவகாரத்தில் எந்தவொரு தயவுதாட்சணியமும் இன்றி விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஊழலில் ஈடுபட்ட பழைய ஆட்சியாளர்கள், போலிப் பதிப்பாளர்கள் மற்றும் அவர்களுக்குத் துணைபோன அதிகாரிகளின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி, தவெக அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து எந்தவொரு புதிய கொள்முதலும் செய்யப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒட்டுமொத்த அமைப்பையும் தூய்மைப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
திராவிடக் கட்சிகளின் இந்த 10 ஆண்டு காலச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, உண்மையான எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் உரிய மரியாதையை மீட்டுத் தரும் கடமையை தவெக அரசு செவ்வனே செய்து வருகிறது. ஆந்திராவில் காங்கிரஸ் முற்றிலும் முகவரியிழந்து போனதைப் போல, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அறிவுத் துறையிலேயே ஊழல் செய்து வந்த பழைய அரசியல் கட்சிகளை மக்கள் நிராகரிக்கும் காலம் வந்துவிட்டது. முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையில் இயங்கும் தவெகவின் நேர்மையான ஆட்சி, தமிழக நூலகத் துறையை மீண்டும் ஒரு புதிய ஒளிமயமான பாதையில் வழிநடத்திச் செல்லும் என்பதில் ஐயமில்லை.





