டிரன்ஸ்பர்ன்னு போட்டா 15 நாளில் புதிய இடத்தில் ஜாயின் பண்ணனும்.. வருடக்கணக்கில் ஜாயின் பண்ணாமல் சம்பளம் மட்டும் வாங்கிகிட்டு இனிமேல் இருக்க முடியாது.. 15 நாளுக்குள்ள ஜாயின் பண்ணலைன்னா, சம்பளம் கட்.. முதல்வர் விஜய் அரசின் அதிரடி நடவடிக்கை.. வேண்டுமென்றே பணிக்கு வராமல் இருப்பது, அல்லது டிரான்ஸ்பர் ஆர்டர் கேன்சல் ஆகும்ன்னு வீட்டில இருந்தால் சம்பளம் வராது..
நீர்வளத்துறையில் உதவி பொறியாளர் முதல் கண்காணிப்பு பொறியாளர் வரையிலான முக்கிய பொறுப்புகளில் இருக்கும் அதிகாரிகள், பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகும் புதிய இடத்தில் பொறுப்பேற்காமல் நீண்ட காலம் விடுப்பில் இருப்பதாக கூறப்படும் தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது. அரசு நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்தத் துறையில் அதிகாரிகள் இல்லாத நிலை ஏற்பட்டால், குறிப்பாக மழைக்காலங்களில் அதன் தாக்கம் பொதுமக்களையே நேரடியாக பாதிக்கும் என்பதால், இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்பட வேண்டியதாக உள்ளது.
பணியிட மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகபட்சம் 15 நாட்களுக்குள் புதிய பணியிடத்தில் பொறுப்பேற்க வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. ஆனால், நீர்வளத்துறையில் சில அதிகாரிகள் பணியிட மாற்றத்துக்குப் பிறகும் புதிய இடத்துக்குச் செல்லாமல் விடுப்பில் தொடர்வதாக கூறப்படுகிறது. சிலர் ஓராண்டு வரையிலும் பணிக்கு வராமல் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு அரசு சார்பில் தொடர்ந்து ஊதியம் வழங்கப்படுவது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
குறிப்பாக, டம்மி பதவிகளில் நியமிக்கப்படுவது அல்லது தங்களுக்கு விருப்பமில்லாத இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்படுவது போன்ற காரணங்களால் சில அதிகாரிகள் பணியில் சேராமல் விடுப்பை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஒரு அதிகாரியின் பொறுப்பு காலியாக இருப்பதுடன், அந்தப் பணியை கவனிக்க வேண்டிய கீழ்நிலை ஊழியர்களுக்கும் கூடுதல் சுமை ஏற்படுகிறது. அதிகாரப்பூர்வ முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலைகளில், உரிய அதிகாரி இல்லாததால் பல பணிகள் தாமதமடைய வாய்ப்பு உள்ளது.
இந்த பிரச்சினை மழைக்காலங்களில் இன்னும் பெரிய சிக்கலை உருவாக்கக்கூடும். நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பது, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை உடனடியாக சரிசெய்வது, குளங்கள் மற்றும் நீர்நிலைகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் வேகம் மிகவும் அவசியம். ஆனால் அதிகாரிகள் இல்லாத நிலையில், கீழ்நிலை ஊழியர்கள் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். இதனால் அவசரமான நேரத்திலும் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.
மேலும், மழை மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானது. கால்வாய் சேதம், நீர்நிலை கரை உடைப்பு அல்லது தண்ணீர் திறப்பு தொடர்பான முடிவுகள் தாமதமானால், அதன் விளைவுகள் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, பணியிட மாற்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்துவதுடன், நீண்ட காலம் விடுப்பில் இருக்கும் அதிகாரிகளின் நிலை குறித்தும் அரசு உரிய ஆய்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மொத்தத்தில், அரசு ஊதியம் வழங்கும் நிலையில், அதிகாரிகள் நீண்ட காலம் பணிக்கு வராமல் இருப்பது நிர்வாக ரீதியாகவும், பொதுமக்கள் நலன் சார்ந்தும் முக்கியமான கேள்வியாக பார்க்கப்படுகிறது. பணியிட மாற்றம் என்பது நிர்வாகத்தின் இயல்பான நடைமுறை என்றாலும், புதிய பணியிடத்தில் அதிகாரிகள் கட்டாயம் பொறுப்பேற்கும் வகையில் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே காலியாக உள்ள முக்கிய பதவிகளை நிரப்பி, அவசர காலங்களில் உடனடி முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரிகள் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் நிர்வாக வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





