வாழ்க்கை முறை

சுற்றுலா போறீங்களா? உங்க‌ பையில இதெல்லாம் வைக்க மறந்துடாதீங்க!

அனைவருக்கும் பயணம் செய்வது புதிய இடங்களை சுற்றிப் பார்ப்பது மனதுக்கு பிடித்தமான ஒன்று. குடும்பத்தினருடனோ நண்பர்களுடனோ அல்லது தனியாகவோ பயணம் செய்து அழகிய இயற்கை காட்சிகளை, புதிய இடங்களை சுற்றிப் பார்க்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.

இப்படி சுற்றுலா செய்ய முடிவெடுத்த பிறகு அனைவரும் ஆர்வத்துடன் செய்யக்கூடிய ஒரு விஷயம் தான் சுற்றுலாவுக்கான பையை தயார் செய்வது. பலருக்கு இது ஆர்வம் நிறைந்த வேலையாக இருந்தாலும் சிலருக்கு இது போராட்டமாக தான் இருக்கும். எந்தெந்த பொருட்களை எடுக்க வேண்டும் எது தேவையில்லை என்று குழப்பங்கள் உண்டாகும்.

 

இது அவர்களுக்காக…

என்னென்ன பொருட்களை சுற்றுலா செல்லும் பொழுது பையில் அவசியம் வைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1. உடைகள்:

எத்தனை நாட்கள் தங்கப் போகிறீர்கள் என்பதை கணக்கிட்டு அதற்கு தகுந்தாற்போல் உடைகளை எடுத்து வையுங்கள். மிக கனமான உடைகளை தவிர்த்து விட்டு லேசான எடை குறைவான உடைகளை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தின் தொடக்கம் ஆதலால் மெல்லிய ரெயின் கோட், ஸ்வெட்டர், காலுறைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். கண்ணாடி, பெல்ட், கைக்கடிகாரம் போன்ற உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். அதிக அளவு ஆபரணங்கள் பயணத்தின் போது வேண்டியதில்லை.

2. கழிவறை பொருட்கள்:

பற்பசை, சோப்பு, பல் துலக்கும் பிரஸ், ஷாம்பூ, எண்ணெய், சன் ஸ்கிரீன், லிப் பாம் போன்றவற்றை சிறிய வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். இவற்றை தனியாக ஒரு பாலிதீன் பையில் போட்டு வைத்து விடுங்கள். பெண்களுக்கு  சானிட்டரி நாப்கின், டாம்போன் போன்றவை பயணத்தின் போது அவசியம்.

3. குறிப்பேடு:

நீங்கள் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள், அவற்றின் வரைபடங்கள், உங்கள் நண்பர்களின் தொலைபேசி எண் போன்றவை அடங்கிய ஒரு சிறிய குறிப்பேடு அவசியம். என்னதான் அலைபேசி கையில் இருந்தாலும் அவசர காலத்திற்கு இது உதவும். டிக்கெட் ஏதேனும் எடுத்திருந்தால் அதையும் அலைபேசியில் இருந்தாலும் நகலெடுத்து கையில் வைத்திருப்பதும் அவசியம்.

4. மருந்துகள்:

நீங்கள் வழக்கமாய் ஏதேனும் மருந்து எடுத்துக் கொள்பவர் என்றால் அதனை முதலில் எடுத்து வைத்து விடுங்கள். குளிர் பிரதேசத்திற்கு செல்பவர் என்றால் சளி, ஜலதோஷம் போன்றவற்றிற்கான மாத்திரைகளும், காய்ச்சல் மாத்திரையும் அவசர உதவிக்கு வைத்துக் கொள்ளலாம். முதலுதவிக்குத் தேவையான சிறிய பெட்டி ஒன்றையும் வைத்துக் கொள்ளலாம்.

5. இதர முக்கிய பொருட்கள்:

உங்கள் அலைபேசி சார்ஜர், பவர் பேங்க், பணம், அடையாள அட்டைகள் போன்றவை அவசியம். கேமரா வைத்திருந்தால் கூடுதல் லென்ஸ், சார்ஜர், துடைக்கும் துணி ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும். ஒரு சிறிய ட்ராவல் பவுச் ஒன்றையும் வைத்துக் கொள்ளுங்கள் பயணத்தின் போது எல்லா இடங்களுக்கும் கைகளில் மொபைல், பர்ஸ், பணம் வைத்துக் கொண்டிருப்பதை விட பெல்ட் வடிவ டிராவல் பவுச் இருந்தால் சுற்றி பார்க்கும் பொழுது வசதியாக இருக்கும்.

Published by
Sowmiya

Recent Posts