என்னம்மா கண்ணு சௌக்கியமா.. மிஸ்டர் பாரத் படத்தில் அந்த டயலாக் இடம்பெற காரணம் இதான்..

பொதுவாக சினிமாவில் தோன்றும் நடிகர்கள் யாராவது ஏதாவது ஒரு வசனம் பேசினால் அது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும். ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்கள் பேசிய வசனங்கள் இளைஞர்கள் கூட்டத்திற்கு மத்தியில் நிச்சயம் எப்போதாவது அவர்கள் பேசுவதை நாம் கேட்டிருக்கலாம். அதே போல, பல காமெடி நடிகர்களின் வசனங்கள் கூட நாம் தினசரி வாழ்வில் பயன்படுத்தக் கூடிய வகையிலும் அமைந்துள்ளது.

அந்த வகையில், பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு வசனம் பற்றி தற்போது பார்க்கலாம். நடிகர் மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் அதிக திரைப்படங்கள் நடித்துள்ளவர் சத்யராஜ். இவர் தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வரும் சூழலில் பாகுபலி படத்தில் இவர் நடித்த கட்டப்பா கதாபாத்திரம், சர்வதேச அளவில் கூட அவரை பிரபலப்படுத்தி இருந்தது.

இவர் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த திரைப்படம் தான் மிஸ்டர் பாரத். எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவாகியிருந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ், அம்பிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ஹிந்தியில் பெரிய ஹிட்டான திரிசூல் என்ற படத்தின் ரீமேக் தான் மிஸ்டர் பாரத். தனது தாயை சரிவர பார்க்காமல் இருந்த தந்தையை பழிவாங்கும் கதையில் ரஜினிகாந்த் மகனாகவும், சத்யராஜ் தந்தையாகவும் நடித்து அசத்தி இருப்பார்கள். இந்த திரைப்படம் தமிழிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.

இந்த திரைப்படத்தில் சத்யராஜ் பேசும் ‘என்னம்மா கண்ணு சௌக்கியமா’ என்ற வசனம் இன்றளவிலும் பிரபலம். இதே பெயரில் வரும் பாடலும் கூட மிகப்பெரிய ஹிட். படத்திலும் சத்யராஜ் பல இடங்களில் இந்த வசனத்தை பேசி இருந்த நிலையில் இன்றும் என்னம்மா கண்ணு என்ற வார்த்தையை கேட்டாலே அவர் தான் முதலில் ஞாபகத்துக்கு வருவார். அப்படி பிரபலமான என்னம்மா கண்ணு என்ற இந்த இரண்டு வார்த்தை வசனம் உருவான விதம் மிக சுவாரஸ்யமான ஒன்று.

மிஸ்டர் பாரத் படத்தில் நடிப்பதற்காக சத்யராஜ் ஒப்பந்தமான சமயத்தில் ‘காக்கி சட்டை’ என்ற படத்தில் அவர் பேசிய தகடு தகடு என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் பிரபலமாக இருந்தது. இதனால் அதேபோன்று ஒரு வசனத்தை மிஸ்டர் பாரத் படத்தில் உருவாக்க வேண்டும் என நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தான் படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம் சரவணன், அவருக்கு தெரிந்த ஒரு பிரபல திரையரங்கு உரிமையாளர் ஒருவர் அடிக்கடி, ‘என்னம்மா கண்ணு’ என்று பலரை நலம் விசாரிப்பதை கவனித்துள்ளார்.

இதனால் அந்த வசனத்தையே சத்யராஜ் பேசுவது போல படத்தில் இடம்பெறச் செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார். அப்படி சத்யராஜூம் அந்த படத்தில் பேச இன்றும் நாம் பல நாள் கழித்து பார்க்கும் நண்பரிடம் என்னம்மா கண்ணு சௌக்கியமா என்று கேட்கும் அளவுக்கு அந்த வசனம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.