தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1975-ல் வெளிவந்த படம்தான் வைர நெஞ்சம். எப்போது போல் தனது டிரேட்மார்க் நடிப்பை வழங்கிய சிவாஜிக்கு இந்தப் படம் கை கொடுக்கவில்லை. தமிழ் மற்றும் இந்தி ஆகிய இருமொழிகளில் தயாரான இப்படத்தை இயக்குநர் ஸ்ரீதர் முதலில் இந்தியில் வெளியிட்டார் ஆனால் படம் சீக்கிரமே படப்பெட்டிக்குள் சுருண்டு விட்டது.

மேலும் தமிழ்ப் பதிப்பை வெளியிடலாம் என்று நினைக்கும் போது கையில் பணமில்லை. இதனால் தமிழில் ‘வைர நெஞ்சம்’ படத்தை முடிக்க முடியாத அளவுக்கு ஸ்ரீதருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ஸ்ரீதரின் இக்கட்டான நிலையை அறிந்த எம்.ஜி.ஆர், அவரை அழைத்து ‘உங்களுக்கு நான் ஒரு படம் நடித்துத் தருகிறேன்’ என்று பெருந்தன்மையாக தேடி வந்து உதவி செய்தார். அப்படி உருவான படம்தான் ‘உரிமைக்குரல்’.

எவர்கீரின் கிளாகிக் பாடல்களைக் கொண்ட இப்படம் வெளியாகி வெள்ளிவிழா வெற்றி கண்டது. இரண்டு அன்பான அண்ணன் தம்பிகள் எஸ்.வி.சகஸ்ரநாமம், எம்.ஜி.ஆர் இருவரும் பாசத்துடன் இருப்பவர்கள். அந்த ஊரைச் சேர்ந்த லதா, எம்ஜிஆரை காதலிப்பார். இப்படி கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து அந்த ஊர் பண்ணையார் நம்பியாரிடம் கடன் வாங்குவார்கள்.

நடிகரா மட்டுமில்லாம சினிமாவில் மற்றொரு துறையிலும் அசத்திய தலைவாசல் விஜய்!…

நம்பியார், லதாவை திருமணம் செய்ய முயற்சி செய்யும்போது எம்.ஜி.ஆர் லதாவை அழைத்துச் சென்று ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்வார். அதனால் ஆத்திரம் அடைந்த நம்பியார் வாங்கிய கடனை உடனே கொடுக்க வேண்டும், இல்லாவிட்டால் வீட்டை ஏலத்திற்கு கொண்டு வருவேன் என மிரட்டுவார். அதன் பிறகு எங்கெங்கோ பணத்தை புரட்டி எம்.ஜி.ஆர் தனது வீட்டை மீட்பார்.

அந்த நேரத்தில் திடீரென பண்ணையார் நம்பியார், லதாவை கடத்திக்கொண்டு செல்ல, அவரை எம்.ஜி.ஆர் விரட்டிச் சென்று லதாவை மீட்டு தனது வீட்டையும் மீட்டு தனது அன்பான குடும்பத்துடன் இணைந்து வாழ்வார் என்பது தான் படத்தின் கதை.

உரிமைக்குரல் படத்தின் பாடல்கள் இன்றும் அனைவர் மனதிலும் நிற்கும். குறிப்பாக ‘கல்யாண வளையோசை’, ‘நேத்து பூத்தாளே ரோஜா மொட்டு’, ‘விழியே கதை எழுது’ போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவையாக உள்ளன.

‘உரிமைக்குரல்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தில் கிடைத்த லாபத்தை வைத்துதான் ‘வைர நெஞ்சம்’ படத்தை ஸ்ரீதர் முடித்தார். ஆனாலும், படம் இந்தியில் வெளியாகி தோல்வி அடைந்தது போலவே தமிழிலும் தோல்வி அடைந்தது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.