இறைவன் நமக்கு தரும் பரீட்சை இது…! ஊருக்கும் உங்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம்!

மார்கழி 8 (23.12.2022)ம் நாளான இன்று நாம் காண இருக்கும் பாடல் இது.

கோழி சிலம்ப என்று தொடங்கும் பாடல்
இறைவனின் பெருமைகளைப் பற்றி எடுத்துரைக்கிறார் மாணிக்கவாசகர். இதையெல்லாம் கேளுங்க என்று வலியுறுத்துகிறார். கேழில் விழுப்பொருள்கள் என்கிறார். விழுப்பொருள்கள் என்றால் சிவனையும், சிவனைச் சார்ந்த பொருள்களைப் பற்றியும் சொல்வது.

சிவம் சார்ந்த பொருள்களே உயர்வானது என்கிற போது சிவத்தின் கருணையும் உயர்வு தானே. சிவமுமு; உயர்வானது. அதையும் நாம் கேட்கணும்

அதைக் கேட்கவில்லையா பெண்ணே என்று மாணிக்கவாசகர் கேட்கிறார்.

Thiruppavai 8
Thiruppavai 8

உலகில் எல்லாப் பொருள்களையும் விட உயர்வான பொருள் உண்டு. தங்கத்தை எடுத்துக் கொண்டால், வைரம், பிளாட்டினம் என விலை உயர்ந்தவை உள்ளன. அதே போல் எல்லாப் பொருள்களிலும் உள்ளன.

ஆனால் இறைவனை விட உயர்ந்தவன் என்று யாருமில்லை. அதனால் தான் இறைவனுக்கு விழுத்துணை என்று பெயர். அப்பேர்ப்பட்ட இறைவனை நாம் வணங்கி நாம் சிறப்படைய வேண்டும் என்கிறார்.

இறைவனுக்கு இணையான இன்னொரு பொருளைத் தேட முடியாது என நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதி நாயனார் வரலாறு எடுத்துக்கூறுகிறது.

அமர்நீதி நாயனார் அடியார்களுக்குத் தொண்டு செய்கிறார். திருஅமுது தந்து உதவி செய்கிறார். அவர்களுக்கு உரிய ஆடைகளைக் கொடுக்கிறார். அமர்நீதி நாயனாருக்கு ஒரு நாள் இறைவன் சோதனை கொடுக்கிறார். ஒரு அடியாராக இறைவனே எழுந்தருள்கிறார். இரண்டு கோவணங்களைத் தண்டிலே கட்டியிருக்கிறார். உணவருந்தச் சொல்கிறார் நாயன்மார்.

நான் குளிச்சிட்டு வரணும்பா என்கிறார். சரி நீராடி விட்டு வாருங்கள் என்கிறார். இருட்டிட்டு மழை வர்றாப்புல இருக்குது. இதுல ரெண்டு கோவணம் இருக்கு. இதுல ஒண்ணை நீ பத்திரமா வச்சிரு. நான் நீராடி விட்டு வருகிறேன். அதன் பிறகு உணவருந்துகிறேன் என்று சொல்லிட்டு குளிக்கப் போய் விட்டார்.

போய் வரும்போது அவரே மழையையும் வரவைத்து நனைந்து கொண்டே வருகிறார். சுவாமி நனைந்து கொண்டே வந்துட்டீங்களே…என்கிறார். ஆமாமா…நான் கொடுத்த கோவணத்தைக் கொண்டு வா…பூஜையை முடித்துவிட்டு சாப்பிட வேண்டும் என்கிறார். இவரும் கோவணத்தைப் போட்ட இடத்தில் எடுக்கச் செல்கிறார்.

Amarneethi nayanar
Amarneethi nayanar

அங்கு அது காணோம். எங்கே போய் தேடினாலும் அது கிடைக்கவில்லை. அப்போது சுவாமி நான் இங்கே தான் வைத்திருந்தேன். காணவில்லை. நீங்க வேற குளிர்ல இருக்கிறீங்க. நான் ஏகப்பட்ட அடியார்களுக்குத் தானம் கொடுக்கிறேன். அதுல ஒரு கோவணம் எடுத்துட்டு வர்றேன். நீங்க அதைக் கொண்டு மாத்திக்கோங்க என்கிறார்.

அதெல்லாம் முடியாது. என் கோவணம் விலை உயர்ந்தது. அது ஒரு அற்புதமானதுன்னு நான் சொன்னதால நீ திருடி வைச்சிக்கிட்டே. அதனால வேற ஒண்ணக் கொடுத்து ஏமாற்றப் பார்க்குற என்றார். சரி. முடிவா என்னதான் செய்யறது? நீங்களே சொல்லுங்க என்கிறார் நாயனார்.

கோவணத்தில் ஒன்றை நான் இங்கு வைக்கிறேன். இதற்குச் சமமான பொருளை நீ தந்தால் போதும் என்கிறார். அந்தக் கோவணத்தைத் தராசு தட்டில் வைத்தார். இன்னொரு கோவணத்தை வைத்தார்.

சரியா வரல. இன்னொன்னு….அப்படின்னு வைத்துக் கொண்டே இருந்தார். எடை சரியாக வரல. அப்புறம் பெரிய துலாபாரத்தில் அவருடைய எல்லாப் பொருள்களையும் வைக்கிறார். அப்படியும் சரியாக வரல. கோவணத்தின் எடை தான் அதிகமாக இருந்தது.

அப்புறம் பொன், பொருள், தனது சொத்துப் பத்திரம் என எல்லாவற்றையும் வைத்த அவருக்கு ஒன்று மட்டும் தெரிந்தது. இதுல ஏதோ ஒரு மாயம் இருக்குன்னு. சிவபெருமானின் அருளுக்கு இந்த உலகில் எதை வேண்டுமானாலும் ஈடு கொடுக்கலாம் என்று உணர்ந்தார் நாயனார்.

உடனே, சிவபெருமானின் மீது நான் வைத்திருக்கும் அன்பு உயர்ந்ததாக இருந்தால் என்னையே நான் இதில் ஈடு தருகிறேன். அதற்கு இணையாக இது மாறட்டும் என்றார். அப்படி சொல்லிவிட்டு அந்தத் தராசில் தன்னையே ஈடாக வைக்கிறார். அப்போதுதான் அந்த தராசு தட்டு இணையாக வந்தது.

இறைவன் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் சோதனை தருவான். நாம் எந்த அளவு உயர்ந்து இருக்கிறோம் என்பதை நாமே அறிந்து கொள்ள தான் இந்த சோதனையை நடத்துகிறான். பள்ளியில் பரீட்சை வருவது எதற்காக? மாணவர்கள் எந்த அளவு கற்று உணர்ந்துள்ளார்கள் என்பதை சோதிக்கத் தான்.

அது போலவே இறைவனும் மனிதர்களை அவ்வப்போது நமக்குக் கஷ்டங்களைக் கொடுத்து சோதித்துப் பார்ப்பான். அதன் மூலமாக நம்மை உயர்வடையச் செய்வான்.

ஆண்டாள் நாச்சியார் கீழ்வானம் என்று தொடங்கும் பாடலைப் பாடுகிறார்.

Thiruvembavai 8
Thiruvembavai 8

நாச்சியார் கீழ்வானம் வெள்ளென்று எருமைச் சிறுவீடு என்று சொல்கிறார். அங்கு இருக்குற சூழலைப் பற்றி சொல்கிறார். எல்லாரும் எழுந்துவிட்டாங்க. மாடுகள் எல்லாம் மேயப் போய்விட்டன. மக்கள் எல்லாம் வேலை செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. நீ மட்டும் ஏன் இன்னும் தூங்குற என்கிறார்.

கண்ணனை வணங்க நீயும் வா…நீயும் வா என ஒவ்வொருவரையும் அழைக்கிறார். திருக்கூட்டம் வர வேண்டும் என்பதால் தான் இப்படி ஒவ்வொருவரையும் அழைக்கிறார். இந்த இறைவனின் திருக்கூட்டத்தில் இணையும் போது தான் நமக்கு மோட்சம் கிட்டுகிறது. அடியார் திருக்கூட்டத்தில் இணையும்போது பகவானை நோக்கி நாமும் அவர்களுடனே எளிதில் சென்று விடலாம்.

அதனால் தான் மார்கழி மாதத்தில் பஜனை வருகிறது. இதில் இறைவனின் நாமத்தைச் சொல்லியும், பாடியும் மனமுருக இறைவனை அடியார்கள் வேண்டியபடியே ஊர்வலமாக செல்கின்றனர். இப்படி செல்வதால் என்ன லாபம் என்று கேட்கலாம். இது ஊருக்கும் பெருமை. உங்களுக்கும் பெருமை. இதை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியவரும்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews