நம்பிக்கையில்லாமல் பேசிய கே.பி.சுந்தராம்பாள்.. நடனத்தில் பதில் கொடுத்த சிவக்குமார்..

சிவன் தொண்டர்களான 63 நாயன்மார்களில் மூவர் மட்டுமே பெண்கள். அவற்றில் குறிப்பிடத்தகுந்தவர்தான் மாங்கனியால் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார். இவரின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட படம் தான் காரைக்கால் அம்மையார். திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற புராணப் படங்களை இயக்கிய ஏ.பி.நாகராஜன் தான் இப்படத்தையும் இயக்கினார். 1973-ல் கே.பி.சுந்தராம்பாள், சிவக்குமார், ஸ்ரீவித்யா, முத்துராமன் ஆகியோர் நடித்த இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

ஆனால் இப்படத்தில் மைல்கல்லாய் அமைந்த பாடலான தக தக வென ஆடவா என்ற பாடலைப் பாடி கே.பி.சுந்தராம்பாள் சிவக்குமாரின் நடனத்தில் சந்தேகப் பட்டு நான் உயிரோடு இருக்கும் வரை இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டீங்க என்று விரக்தியில் சொல்லி விட்டுச் சென்றாராம். ஆனால் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிவக்குமார் அப்பாடலுக்காக இரவு பகல் உழைத்து கே.பி.சுந்தராம்பாளிடம் பாராட்டுப் பெற்றாராம்.

இது பற்றி சிவக்குமார் கூறுகையில், ” தகதகதக தகதகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…! ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடும் நாயகனே நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே’ ” ‘என்ன ஏபிஎன்.. சாவகாசமாச் சொல்றே. அந்தப் பையன் டான்ஸ் கத்துக்கிட்டு ஆடுவான்’-னு… பதற்றமாய்க் கேட்டார், இசைஞானப் பேரொளி -பத்மஸ்ரீ பட்டம் பெற்ற கே.பி.சுந்தராம்பாள் அம்மையார்.

தங்கப்பதக்கம் திரைப்படம் உருவான வரலாறு.. முக்கிய காரணமாக அமைந்த செந்தாமரை

குன்னக்குடி வைத்தியநாதன் ‘காரைக்கால் அம்மையார்’ படத்துக்கு இசையமைக்கிறார் என்று ஏபிஎன் சொன்னபோதே என் கச்சேரிக்கு வயலின் வாசிச்சவனா மியூசிக் டைரக்டர் என்று கிண்டலாகக் கேட்டார் கே.பி.எஸ். குன்னக்குடி, கவிஞர் கண்ணதாசன் எழுதிக் கொடுத்த, ‘தகதகதக தகதகவென ஆடவா.. சிவ சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…! ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடும் நாயகனே நீலகண்டனே வேதநாயகா நீதியின் காவலனே’ – என்று துரிதகதியில் உள்ள பாடலுக்கு திஸ்ரம், சதிஸ்ரம் -கண்டம், மிண்ட்ரம், சைக்கியம் -என்று பலவகை தாளங்களுடன் டியூன் போட்டு வீட்டிலே ஆர்மோனியப் பெட்டியுடன் சென்று கேபிஎஸ் முன் வாசித்துக் காட்டி மெய் மறக்கச் செய்துவிட்டார்.

64 வயதில், சுருதி பிசகாமல், உச்சஸ்தாயியில் வயதை மறந்து அவர் பாடி முடித்தபோது- அவருக்கே பிரமிப்பாக இருந்தது. ‘பாட்டு பிரமாதமா வந்திருக்கு ஏபிஎன் -யாரு இதுக்கு ஆடப்போறாங்க?’ – என்று ஆர்வமாகக் கேட்டார்.
‘‘ஸ்ரீ வித்யா, பார்வதியா டான்ஸ் ஆடப்போறா!’’
‘‘அது 5 வயசிலிருந்து மேடையில் ஆடற பொண்ணு-பையன் யாருன்னு நீ சொல்லலையே!’’
‘‘பையன் கோயமுத்தூர்’’
‘‘கோயமுத்தூர் பையன் பரதநாட்டியம் ஆடப்போறானா? அவனுக்கு டான்ஸ் தெரியுமா?’’
‘‘கத்துக்கிட்டு நல்லா ஆடுவான்..!’’
‘‘இனிமே கத்துக்கிட்டு ஆடப்போறானா? ம்..கூம்… நான் உயிரோட இருக்கும்போது நீ இந்தப் பாட்டை படமாக்க மாட்டே!’’ பயந்துவிட்டார்.
எனக்குப் பதற்றமாகப் போய்விட்டது. உடனே ஏபிஎன் என் தோளில் கைபோட்டு, ”ஒண்ணும் கவலைப்படாதீங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. 10 நாள் அல்லது 15 நாள் நல்லா ஒத்திகை பாத்துட்டு நீங்க எப்ப ரெடி சொல்றீங்களோ அப்ப ஷூட்டிங் வச்சுக்கலாம்!’’ என்றார்.

போட்டோ எடுக்க டைரக்டரிடம் பெர்மிஷன் வாங்கச் சொன்ன ரஜினி.. இப்படி ஒரு தொழில் பக்தியா?

ஏபிஎன் அவர்கள் கொடுத்த தைரியத்தில் தினம் ஒரு பம்பாய் டவலை எடுத்துக் கொண்டு நடன ஒத்திகைக்கு காலை 9 மணிக்குச் சென்றால் மாலை 5 மணி வரை ஆடி, ஆடி உடம்பை சாறாகப் பிழிந்து டவலில் துடைத்துக் கொண்டு வீடு திரும்புவேன்.
இப்படி 15 நாட்கள். ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தையொட்டி ஈ.வி. ராஜன் -காரைக்கால் அம்மையார் தயாரிப்பாளர் -அவருக்குச் சொந்தமான யோகலட்சுமி திருமண மண்டபத்திற்கு காலையில் ஒத்தையில் கலந்துகொள்ள ஸ்ரீ வித்யா வருவார். அவரை ஆட விடமாட்டேன். நான் நன்றாகப் பயிற்சி எடுத்த பின் அந்த மூவ்மென்ட்டை என்னோடு அவர் ஆட அனுமதிப்பேன்.

இப்படி பயிற்சி எடுத்து வாஹினி ஸ்டுடியோவில் 1972 மே மாதம் 29-ம் தேதி முதல் ஜூன் 5-ம் தேதி வரை 7 நாட்கள் படமாக்கப்பட்டது, அந்தப் பாடல் காட்சி. டான்ஸ் மாஸ்டர் பி.எஸ். கோபாலகிருஷ்ணன் -நான் சிறு தவறு செய்தாலும் மிரட்டி வேலை வாங்கினார். பின் ஷூட்டிங் முடிந்த பிறகு கே.பி.எஸ். கன்னத்தின் மேல் கை வைத்து, ‘‘எப்படியப்பா, அவளோட போட்டி போட்டு இப்படி ஆடினே?’’ என்றார். 1000 பூக்கள் தலையில் தூவி ஆசீர்வதித்த மகிழ்ச்சி எனக்கு.” என்றார் சிவக்குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews