தங்கப்பதக்கம் திரைப்படம் உருவான வரலாறு.. முக்கிய காரணமாக அமைந்த செந்தாமரை!

இப்போதுள்ள காவல்துறை அதிகாரி கதாபாத்திரங்களுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம்தான் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான தங்கப்பதக்கம் திரைப்படம். திரையிட்ட இடமெல்லாம் வெள்ளி விழா கண்டு போலீஸ் அதிகாரியாக நடிகர் திலகத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது. எஸ்.பி. சௌத்ரியாக நேர்மையான காவல்துறை அதிகாரியாக மிடுக்குடன் கெத்துக் காட்டியிருப்பார் நடிகர் திலகம். கே.ஆர்.விஜயா, ஸ்ரீ காந்த், பிரமிளா, சோ, சுருளிராஜன் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் பல சாதனைகளைப் படைத்தது.

ஆனால் இப்படம் எப்படி உருவாகியது தெரியுமா? அதற்கு மூலக் காரணமே நடிகர் செந்தாமரைதான். தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு அடையாளப் படுத்திய இயக்குநரான மகேந்திரனின் கதைதான் தங்கப்பதக்கமாக உருவாகியது.

காவல்துறை அதிகாரியின் கடமை உணர்வை மையப்படுத்தி இயக்குநர் மகேந்திரன் நாடகம் ஒன்றை எழுதினார். மகனுக்கும் தந்தைக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அந்த நாடகத்தைப் படித்துப் பார்த்தார் நடிகர் செந்தாமரை. ‘இரண்டில் ஒன்று’ என்ற தலைப்பை அதற்குச் சூட்டி தனது குழுவின் சார்பில் அதை அரங்கேற்றினார்.

அந்த நாடகம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 300 காட்சிகளைக் கடந்து சென்னை சபாக்களில் முதல் மரியாதை கிடைத்து வந்ததது. ஒரு படப்பிடிப்பில் செந்தாமரையிடம் சிவாஜி, ‘என்னப்பா… உன்னோட நாடகம் பிச்சுக்கிட்டு போகுதாமே..’ என்று கேட்டார். ‘அண்ணே நீங்க அவசியம் வந்து பார்க்கனும்’ என்று அழைத்தார் செந்தாமரை.

“நீங்க என்ன பெரிய புலவரா?“ “இந்த உடம்புக்கு நடிப்பு ஆசையா?“ மாறி மாறி மோதிய வாலி-நாகேஷ்

சென்னை அண்ணாமலை மன்ற அரங்கில் நாடகத்தைப் பார்க்க வந்த சிவாஜி, வியந்துபோய் உட்கார்ந்திருந்தார். முதலில் எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திலும் பின்னர், அங்கிருந்து இடம்பெயர்ந்து சிவாஜி நாடக மன்றத்திலும் புகழ்பெற்ற நடிகராக மேடையில் உயர்ந்து நின்றவர் செந்தாமரை. நல்ல கதை அறிவு கொண்டவர். கதை விவாதங்களுக்கும் அவரை அழைப்பார்கள். இயக்குநர் ‘வியட்நாம் வீடு’ சுந்தரம் அவரை தனது படங்களில் நடிக்க வைக்கும் அதேநேரம், கதை விவாதங்களுக்கும் மறக்காமல் அழைப்பார்.

அப்படிப்பட்ட கலைஞன், இப்படியொரு அற்புதமான கதையைத் தேர்ந்தெடுத்து நாடகமாக்கியது சிவாஜியை வியப்பில் ஆழ்த்தவில்லை. ஆனால், அதில் செந்தாமரை கம்பீரமாக நடித்த கடமை தவறாத காவல் அதிகாரியின் வேடம், ‘தான் திரையில் ஏற்று நடிக்க வேண்டிய ஒன்றல்லவா!’ என்று நினைத்தார்.

உடனே, தனது நாடக மன்றத்தின் மூலம் ‘இரண்டில் ஒன்று’ நாடகத்தை அரங்கேற்ற விரும்பினார். தனது விருப்பத்தை செந்தாமரையிடம் தெரிவித்த சிவாஜி, கதையின் உரிமத்தை சிவாஜி நாடக மன்றத்துக்குத் தரும்படி கேட்டார்.

படத்தின் வெற்றி விழாவில் ஆட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேவர்.. இப்படி ஒரு Pet Lover -ஆ?

தனக்கு நாடகத்தில் இரண்டாம் கட்ட வாழ்க்கையை அளித்தவர் என்ற காரணத்தினால் சிறிதும் தயங்காமல் கதையின் உரிமையை சிவாஜிக்கு விட்டுக்கொடுத்தார். கதையில் சில மாற்றங்களைச் செய்து, தனக்கு ஏற்றவாறு கதாபாத்திரத்தை உருவாக்கி ‘தங்கப்பதக்கம்’ என்ற பெயரில் சிவாஜி அரங்கேற்றினார். காவல் துறை அதிகாரியாகத் தோன்றிய சிவாஜி, அந்த வேடத்துக்கு காவல் துறை அதிகாரி அருளின் நடை, உடை, பாவனைகளைத் தனது நடிப்பில் கொண்டு வந்து காட்டினார்.

சிவாஜியின் கம்பீரமான நடிப்பில் நாடகம் பெரும் வரவேற்பைப் பெற்றிட, சென்னையில் பிரபலமாக இருந்த அத்தனை சபாக்களும் தங்கள் அரங்கில் ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை அரங்கேற்ற போட்டா போட்டி போட்டன. பிரபலமான அரசியல் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகள், நீதிபதிகள், திரையுலகக் கலைஞர்கள் ஆகியோர் சிவாஜி காட்டிய கம்பீரத்தில் மிரண்டுபோனார்கள். சிவாஜியின் நடிப்பில் மைல்கல்லாய் ஆவணம் கண்ட ‘தங்கப்பதக்கம்’ நாடகத்தை தாமே திரைப்படமாகத் தயாரித்து மெகா வெற்றி கொடுத்தார் சிவாஜி.

‘தங்கப்பதக்கம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிவாஜியின் பல படங்களில் செந்தாமரைக்கு ஒரு கதாபாத்திரம் காத்திருக்கும். ‘முறுக்கிய மீசையும் முரட்டுத் தோற்றமுமாக வில்லன், குணச்சித்திரம், பாசமான அப்பா என பல பரிமாணங்களில் நடித்திருந்தாலும் குணத்தில் அவர் குழந்தையைவிட மிருதுமானவர்’ என அவருடன் பழகியவர்கள் கூறக் கேட்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.