நடிகையாக மகள் கீர்த்தி சுரேஷையே மிஞ்சிய தாய் மேனகா.. அவங்க தொட்டது எல்லாமே ஹிட் படங்கள் தான்..

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் நடித்து வருகிறார். அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரகு தாத்தா என்ற திரைப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. கீர்த்தி சுரேஷை போல ஒரு காலத்தில் சிறந்த நடிகையாகவும் வலம் வந்தவர் தான் அவரது தாய் மற்றும் நடிகை மேனகா சுரேஷ்.

இவர் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 125 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். நடிகை மேனகா கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்தாலும் அவர் கேரளாவில் தான் செட்டில் ஆனார். சுரேஷ்குமார் என்பவரை கடந்த 1987 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பின் அவர் கேரளாவில் தான் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1981 ஆம் ஆண்டு அவர் கே. எஸ். சேது மாதவன் இயக்கத்தில் உருவான மலையாள திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதே ஆண்டில் அவர் ஏழு மலையாள படங்களில் நடித்தார். இதனால், மலையாள திரை உலகில் பிஸியான நடிகையாகவும் உயர்ந்திருந்தார்

ஆனால் மலையாள திரையுலகில் அறிமுகமாகும் முன்பே அவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார். குறிப்பாக சிவாஜி கணேசன், சரிதா, ஜெய்சங்கர் நடிப்பில் உருவான ’கீழ்வானம் சிவக்கும்’ என்ற திரைப்படத்தில் ஜெய்சங்கர் சகோதரியாக நடித்திருப்பார் மேனகா. அவரது கேரக்டரை வைத்து தான் அந்த படத்தின் கதை நகரும்படி அமைக்கப்பட்டிருக்கும்.

menaka

கீழ்வானம் சிவக்கும் படத்தின் வெற்றியை அடுத்து அவர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்தார். இரண்டு வேடங்களில் தந்தை, மகன் என ரஜினிகாந்த் நடித்த நிலையில் தந்தை கேரக்டருக்கு லட்சுமி ஜோடியாகவும் மகன் கேரக்டருக்கு மேனகா ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ராமனின் மோகனம் என்ற பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.

இதனை அடுத்து அவர் விஜயகாந்த் நடித்த ஓம் சக்தி என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கி இருப்பார். அதே போல, கலைஞர் கருணாநிதி வசனத்தில் இடம் பெற்ற ’தூக்கு மேடை’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பும் மேனகாவுக்கு கிடைத்திருந்தது. சந்திரசேகர் உள்பட பலர் நடித்த இந்த படத்தில் மேனகா ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவர் தமிழில் நிஜங்கள், இனியவளே, நிரந்தரம், நலந்தானா போன்ற படங்களில் நடித்தார்.

1986 ஆம் ஆண்டுக்குப் பின் அவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் மலையாள திரையுலகில் பிஸியாக தான் இருந்தார். ஆனால் 1987 ஆம் ஆண்டு அவர் சுரேஷ்குமாரை திருமணம் செய்த பின்னர் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டார். இரண்டு பெண் குழந்தைக்கு தாயான மேனகா, 2011 ஆம் ஆண்டு தான் மீண்டும் நடிக்க வந்தார்.

மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த மேனகா 2012 ஆம் ஆண்டு மாட்டுத்தாவணி என்ற தமிழ் படத்தில் நடித்தார். ஆனால்  சில படங்களில் நடித்து விட்டு அதன் பிறகு மீண்டும் இடைவெளி விட்டார். இதனை அடுத்து 2021 ஆம் ஆண்டு தான்  சில மலையாள படங்களில் மீண்டும் நடிக்க வந்தார் மேனகா.

நடிகை மேனகா நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருந்தார். மலையாளத்தில் கிட்டத்தட்ட இவர் பத்துக்கு மேற்பட்ட படங்களை தயாரித்தார். அதேபோல் மலையாள சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ள அவர், டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் தோன்றினார். தற்போது மகள் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் பிரபலமாகி விட்டதால் அவர் கிட்டத்தட்ட நடிப்பதையும், தயாரிப்பதையும் நிறுத்தி விட்டார். இருப்பினும் மேனகாவின் பழைய படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது அவரது நடிப்பை ரசிகர்கள் இன்றும் ரசித்து வருகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.