ஐந்தே படங்களில் நடித்த கமலின் சகோதரர்.. குறைவான படம் நடிச்சதுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

தமிழ் சினிமாவில் நடித்து உலக சினிமா ரசிகர்களையே தன் பக்கம் ஈர்க்க வைத்த உலகநாயகன் கமல்ஹாசனின் குடும்பமே கலை குடும்பம் என்று சொல்லலாம். அவரது சகோதரர் சாருஹாசன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 90 வயதுக்கு மேல் இருக்கும் நிலையில், அப்போதும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்.

அதே போல் சாருஹாசன் மகள் சுஹாசினியும் பல படங்களில் நடித்துள்ளார். இவரை போலவே மேலும் கமல்ஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த அனுஹாசனும் ஒரு நடிகை என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் கமல்ஹாசனின் இன்னொரு சகோதரர் சந்திரஹாசனும் ஒரு நடிகர் என்பது பலருக்கு தெரியாத உண்மை. இவர் தமிழில் ஐந்து படங்களிலும் ஒரு தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.

கமல்ஹாசனின் முதல் சொந்த படமான ’ராஜபார்வை’ என்ற திரைப்படத்தில் அவரது தந்தையாக சந்திரஹாசன் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து சுஹாசினி மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பெண்’ என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கேரக்டரில் சந்திரஹாசன் நடித்தார். இந்த தொடர் தூர்தர்ஷனில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த தொடரின் மூலம் கிடைத்த புகழ் காரணமாக சந்திரஹாசன் மீண்டும் சுஹாசினி இயக்கத்தில் உருவான ’இந்திரா’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அரவிந்த்சாமி மற்றும் அனுஹாசன் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் சந்திரஹாசன் அமைச்சர் கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பின்னர் 2000 ஆண்டு கமல்ஹாசன் நடித்து  இயக்கிய ’ஹேராம்’ என்ற திரைப்படத்தில் மோகன் காந்திராமன் என்ற கேரக்டரில் நடித்தார். இந்த படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் உருவானது.

அப்படி இருக்கையில், ஏறக்குறைய 20 ஆண்டுகள் கழித்து தான் அவர் நடித்த அடுத்த படம் அவரது மறைவுக்கு பின்னர் வெளியானது. ஸ்டீபன் ரங்கராஜ் என்பவரது இயக்கத்தில் உருவான ’அப்பத்தாவை ஆட்டைய போட்டுட்டாங்க’ என்ற படத்தில் சந்திரஹாசன் ஹீரோவாக நடித்தார். இந்த படம் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் எட்டாம் தேதி வெளியானது. ஆனால் அவர் இந்த படம் வெளியாவதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 2017 ஆம் ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சந்திரஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா ஆகியோர்களுடன் மிகவும் நெருக்கமானவர். கமல்ஹாசனுக்கு ஒரு அண்ணனாக இருந்தார் என்பதை விட தந்தையை போல் இருந்தார் என்று சொல்வது தான் சரியாக இருக்கும். சந்திரஹாசன் நடித்தது மிகக்குறைந்த படங்கள் என்றாலும் அவரது நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும் என தெரிவிக்கும் ரசிகர்கள் அதிகம். அதே போல, அவர் இன்னும் நிறைய படங்களில் நடித்திருக்கலாம் என ஏங்கிய ரசிகர்களும் உள்ளனர்.

ஆனால், அதே வேளையில் அவர் தயாரிப்பு பணியை கவனிக்க வேண்டியிருந்ததால் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை என்று கமல்ஹாசன் பல பேட்டிகளில் கூறியிருந்தார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...