இதென்ன புது கதையா இருக்கு.. கமல் டப்பிங் பேசியது இந்தியன் 2 படத்துக்கு இல்லையாம்?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்திற்கு டப்பிங் பணிகளை ஆரம்பித்த நிலையில் அதிகாரப்பூர்வ வீடியோ ஒன்றை தயாரிப்பு நிறுவனமான லைகா நேற்று வெளியிட்டிருந்தது.

ஆனால், கமல் பேசியது இந்தியன் 2 படத்திற்கே இல்லை என்றும் இந்தியன் 3 திரைப்படத்திற்கு என சினிமா வட்டாரத்தில் திடீரென பரவலான பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.

இந்தியன் 3 உருவாகிறதாம்:

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான இந்தியன் 2 திரைப்படம் அதிகப்படியாக 6 மணி நேரத்திற்கு மேலாக உருவாகி இருப்பதாக கூறுகின்றனர். அதைத் தேவையில்லாமல் வீணடிக்க வேண்டாம் என நினைத்த ஷங்கர் இந்தியன் 3 படத்தையே உருவாக்கி கொடுத்து விடும் முயற்சியில் இறங்கி இருப்பதாக கூறுகின்றனர்.

கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படத்துக்கான டப்பிங் பணிகளை தான் ஷங்கருடன் இணைந்து கமல் செய்தார் என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

கமல்ஹாசனின் சம்பளம்:

மேலும், இந்தியன் 2 படத்துக்கு கமல்ஹாசனுக்கு அந்த படம் ஆரம்பிக்கும் போது 30 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், தற்போது இந்தியன்3 திரைப்படத்திற்காக மேலும் 120 கோடி ரூபாயை சம்பளமாக கமல் கேட்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்தியன் 2 மற்றும் திரைப்படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் சுமார் 150 கோடி ரூபாயை சம்பளமாக பெறப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஆனால் இது எந்த அளவுக்கு சாத்தியம் என்றும் இது தொடர்பாக இயக்குனர் ஷங்கர் அல்லது கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால் தான் இந்தியன் 3 படத்தின் மீதான நம்பகத்தன்மை எழும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட வசூல் வேட்டை:

இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் திரையில் சேனாபதியே கமல்ஹாசன் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகம் என வெளியானால் தமிழ் சினிமாவின் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் உயரும் என்றும் கூறுகின்றனர்.

விக்ரம், பொன்னியின் செல்வன், ஜெயிலர் வரிசையில் அடுத்ததாக லியோ படமும் பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அனைத்து படங்களின் வசூலையும் இந்தியன் 2 முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர்.

ஆஸ்கரை குறிவைக்கும் ஷங்கர்:

தன்னை மீண்டும் பிரம்மாண்ட இயக்குனர் என நிரூபிக்க ஷங்கர் அடுத்தடுத்து இந்தியன் 2, 3 மற்றும் ராம்சரணின் கேம் சேஞ்சர் என வரிசையாக 3 படங்களை களமிறக்கி  உலகையே திரும்பிப் பார்க்க முடிவு செய்திருப்பதாக கூறுகின்றனர்.

ஆர்ஆர்ஆர் படம் மூலமாக ராஜமெளலி ஆஸ்கருக்கு சென்ற நிலையில், இந்தியன் 2 படத்தையும் ஆஸ்கருக்கு கொண்டு செல்லும் முயற்சிகளில் ஷங்கர் ஈடுபட்டு வருவதாகவும் அதற்காக அந்த படத்தை பல கட்டங்களாக செதுக்கி வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews