பொழுதுபோக்கு

ஜவான் விமர்சனம்: சமூக கருத்துக்களை கச்சிதமாக ஒரு மசாலா படத்தில் கலந்து கொடுத்துள்ள அட்லீ!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு, சன்யா மல்கோத்ரா மற்றும் சிறப்பு கேமியோவாக சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று வெளியானது.

ஷங்கர் பாணியில் சமூக அக்கறையை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார் அட்லீ. தேசிய அளவில் நிகழ்ந்த ஏகப்பட்ட அரசியல் பிரச்சனைகளையும் மக்கள் பிரச்சனைகளையும் ஜவான் படத்தில் அடுக்கி கொடுத்திருக்கிறார். அந்த விஷயம் தான் படத்தை மக்கள் மத்தியில் கனெக்ட் செய்ய வைக்கிறது.

ஜவான் கதை:

வழக்கமான அப்பா மகன் என டபுள் ஆக்ஷன் பழிவாங்கும் படலமாக படத்தின் ஒன்லைன் இருந்தாலும் அதற்குள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த விவகாரம், ஓட்டு மெஷின் குளறுபடி, ஆயுதங்களை வாங்குவதில் நடக்கும் ஊழல், விவசாயிகள் பிரச்சனை என பல விஷயங்களை துருத்திக் கொண்டு தெரியாமல் கச்சிதமாக கதைக்குள் கொண்டு வந்து கைதட்டல்களை அருளியுள்ளார் இயக்குனர் அட்லீ.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தப் படத்திற்காக மட்டும் அட்லி செய்த கடும் உழைப்பு இன்று திரையரங்குகளில் தெளிவாக தெரிகிறது. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் பல சங்கர் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் படங்களின் சாயலாக தெரிந்தாலும் ஒருமுறை பார்க்கும் அளவுக்கு படம் பக்காவாக இருக்கிறது.

சமூக பிரச்சனைகள்:

ஆனால் பாலிவுட் ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய அளவில் கனெக்ட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் இந்த ஜவான் படத்துக்கு நல்ல வரவேற்பும் அதிக ரேட்டிங்கும் கிடைத்துள்ளன.

ஆக்சன் காட்சிகளில் ஷாருக்கான் தனக்கே உரித்தான பாணியில் தியேட்டரை தெறிக்க விட்டுள்ளார். பெண்களுக்கான சிறையில் ஜெயிலராக வலம் வரும் ஆசாத் அந்த சிறையில் உள்ள ஆறு பெண்களை வைத்துக்கொண்டு சமூகத்தில் மக்கள் படும் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் போராடி வருகிறார்.

மிரட்டிய மக்கள் செல்வன்:

வில்லனாக வரும் விஜய் சேதுபதி காளி என்னும் கதாபாத்திரத்தில் விஜய் மல்லையா தோற்றத்தை நினைவு படுத்தும் வகையில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஏழை விவசாயிகளுக்கு கடன் கொடுத்துவிட்டு அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு நடத்தும் வங்கி அதிகாரிகள் பல கோடி ரூபாயை பணக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு அந்தக் கடனை தள்ளுபடி செய்யும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு பல சமூக அக்கறை சார்ந்த விஷயங்கள் ஷாருக்கானின் ஜவான் படத்தில் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளாஷ்பேக் போர்ஷனில் ஷாருக்கானின் அம்மாவாக தீபிகா படுகோனே அதிரடியாக வந்து அட்லி படத்தில் நடிகைகள் பரிதாபமாக இறப்பதை போலவே இந்த படத்திலும் அவர் இறந்து விடுகிறார்.

பார்க்கலாமா? வேண்டாமா?:

கே ஜி எஃப் 2 படத்தில் வில்லனாக நடித்த சஞ்சய் தத் அடுத்து விஜயின் லியோ படத்தில் நடித்து வரும் நிலையில் சர்ப்ரைஸ் கேமியோவாக ஷாருக்கானின் ஜவான் படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

யோகி பாபுவின் காமெடிக்கு எந்த ஒரு ஸ்பேசும் இந்த படத்தில் அட்லி வழங்கவில்லை என்பது ரசிகர்களை சற்றே அப்செட் ஆக்கி உள்ளது. ஏகப்பட்ட விஜய் படங்களின் கலவையாக தெரிந்தாலும் மொத்தமாக இந்த ஜவான் திரைப்படம் சமூக அக்கறையைப் பற்றி எடுத்துக் கூறும் போர் வீரனாகவே பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மாற்றி உள்ளது.

ஜவான் – ஜெயிப்பவன்!

ரேட்டிங்: 4/5

Published by
Sarath

Recent Posts