இளவயதிலேயே உலகை திரும்பிப் பார்க்க வைத்த கல்வி போராளி மலாலா… சர்வதேச மலாலா தினம் – ஜூலை 12!

பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு எழுந்து வந்த கல்வி போராளி தான் மலாலா. மலாலா யூசஃப்சாய் 1997 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பாகிஸ்தானில் பிறந்தவர்.

images 3 31

மலாலா வாழ்ந்த பகுதியில் பயங்கரவாதிகளின் ஆதிக்கத்தால் அங்கு உள்ள மக்களுக்கு பல உரிமைகள் மறுக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் மலாலா கல்வியின் மீது உள்ள ஆர்வத்தில் அவர் தொடர்ந்து படித்தது மட்டுமின்றி அனைவரும் கல்வி கற்க வேண்டும் அது அவர்களின் உரிமை என்று நினைத்தார். தன் படிப்பை யாருக்காகவும் விடாமல் தொடர்ந்தார். அது மட்டும் இன்றி சொந்த நாட்டிலேயே அடிமையாக இருப்பதை பற்றி சமூக வலைத்தளத்தில் புனைப் பெயரில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். செய்திகளின் வாயிலாக வெளிச்சத்திற்கு வந்த இவரை பயங்கரவாதிகள் அடையாளம் கண்டு கொண்டனர். இவருடைய இந்த செயலினால் இவரை 15 வயதில் பயங்கரவாதிகள் கடுமையாக துப்பாக்கியால் தாக்கினர்.

images 4 3

பல்வேறு சிகிச்சைகளுக்குப் பிறகு உயிர் பிழைத்த இவரை உலக நாடுகள் கரம் நீட்டி வரவேற்றன. சொந்த நாட்டுக்குள் அடி எடுத்த வைக்க முடியாத நிலை இருந்தாலும் உலகம் முழுவதும் ஒரு கல்வி போராளியாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். 2014 ஆம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். சிறு வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர் மலாலா ஒருவர் தான். அதுமட்டுமின்றி கௌரவ டாக்டர் பட்டம் உட்பட பல்வேறு பட்டங்களை விருதுகளை பெற்றுள்ளார்  மலாலா.

2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி தன்னுடைய 16 வது பிறந்தநாளன்று ஐநா சபையில் பெண் கல்வி குறித்து உரையாற்றினார். அவருக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் ஐநா அந்த நாளை மலாலா தினம் என்று அறிவித்தது.

images 4 1

ஒரு ஆசிரியர்; ஒரு சிறுவன்; ஒரு பேனா இருந்தால் ஒட்டுமொத்த உலகையே மாற்ற‌ முடியும் என்று நம்பக் கூடியவர். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்தவர் இன்று கல்விக்காக குறிப்பாக பெண் கல்விக்காக குரல் கொடுக்கும் போராளியாக பல மருத்துவர்களை உருவாக்கிட போராடி வருகிறார். தலைசிறந்த ஆயுதமான பேனாவைக் கொண்டு தன் எழுத்துக்களின் வாயிலாக புத்தகமாய் பலர் மனதில் நல்ல விதைகளை விதைத்து வருகிறார்.

மலாலா தினம் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது “மலாலா தினம் என்னுடைய தினம் அல்ல. தங்களுடைய உரிமைகளுக்காக குரல் எழுப்பும் ஒவ்வொரு பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தினம்” என்று கூறியுள்ளார்.

மலாலா தனி ஒரு பெண் அல்ல ஒட்டுமொத்த பெண் கல்வியின் அடையாளம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews